புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2014

மீண்டும் புலிக்கதை சொல்லும் இலங்கை!
)
 ஐ.நா.வின் உடைந்த நாற்காலி முன்பே போரின் வடுப்பட்ட ஈழத்தமிழர்கள் நீதிக் கேட்டுக் கொண்டிருக்க, மீண்டும் புலிகள் கட்டமைய தொடங்கியுள்ளார்கள் என சர்வதேசத்துக்கு தீவிரவாத மாயையினை இலங்கை ராணுவம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

பொட்டு அம்மானுக்கு கீழ் பணியாற்றிய கோபி, புலிகளை மீள் கட்டமைக்க முயற்சித்து வருகிறார் என்றும் தர்மபுரத்தில் துப்பாக்கி சூடு நடத்தி தப்பி விட்டார் என்ற பெயரிலும் கடந்த சில நாட்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி பகுதி எங்கும் பல ராணுவ சுற்றி வளைப்புகளோடு தமிழ் இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.நன்றி விகடன் 
அப்படித்தான் காணாமல் போன கணவனை தேடிக்கொண்டிருக்கும் ஜெயகுமாரியும், அவரது 13 வயது மகள் விபூசிகாவும் கைது செய்யப்பட்டனர். இப்போது புனர்வாழ்வுக்காக சிறுவர் இல்லத்தில் உள்ள விபூசிகா, தான் எழுதிய கடிதத்தில், "என்னையும் எனது அம்மாவையும் 13.3.2014 அன்று பிற்பகல் 4 மணியளவில் பொய்க் குற்றம் சுமத்தி அதிக ராணுவப் பாதுகாப்புடனும் போலீஸ் பாதுகாப்புடனும் பெரிய குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் போல எம்மை நடத்தி என்னைப் பயமுறுத்தியும், எனது அம்மாவை கால்களால் உதைத்தும், தலைமயிரை பிடித்து இழுத்தும், கன்னங்களில் அறைந்தும்,  பொய்யான தகவல்கள் எழுதப்பட்ட கடிதத்தில் என்னிடம் இருந்தும் எனது அம்மாவிடம் இருந்தும் கையொப்பம் பெறப்பட்டன. எனது அம்மா இருந்தும் நான் ஒரு அனாதையாக இருக்கிறேன்...!" என அக்கடிதம் சில வரிகளில் முடிகிறது.

இதே போல்தான் மனித உரிமையாளர்கள் ருக்கி பெர்னேன்டோவும், பாதிரியார் பிரவீனும் புலிகளோடு தொடர்புடையவர்கள் என அண்மையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

அங்கிருந்து வரும் அழைப்புகளில் எல்லாம் முதலில்'ஆர்மிக்காரன் வீடு வீடாக வருகிறான்' என்ற வார்த்தைகள் தான் வருகிறது. அதுமட்டுமின்றி புனர்வாழ்வு பெற்ற முன்னால் புலிகள் பலர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.
இப்படியான பதட்டமான சூழ்நிலை உள்ள நிலையிலும், தமிழகம் நாடாளுமன்ற தேர்தலில் மூழ்கியிருக்கும் பரபரப்பான நேரத்திலும்தான், ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை 25 வது மனித உரிமைகள் கூட்டத்தொடர் மார்ச்  3 தொடங்கி நடைப்பெற்று கொண்டிருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக அமெரிக்கா இரு தீர்மானங்களை கொண்டு வந்தது. முன்பு கொண்டு வரப்பட்ட இரு தீர்மானங்களுமே இலங்கைக்கு போதுமான வாய்ப்பை கொடுத்தும், அதைப் பற்றி இலங்கை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

கடந்த செப்டம்பர், 2013 நவநீதம் பிள்ளை இலங்கை மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக ஆராய சென்றிருந்த பொழுது போரில் பாதிக்கப்பட்ட்ட மக்கள் மட்டுமின்றி இலங்கையின் பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் வந்திருந்தன. அதில் குறிப்பாக வெலிவெரியாவில் தண்ணீருக்காக போராடிய சிங்கள மக்கள் மீது ராணுவ தாக்குதல், புத்த துறவிகளால் மசூதிகள் மீது நடைபெறும் தாக்குதல், பத்திரிகை அலுவலகங்கள் மீது நடக்கும் தாக்குதல் என பல கூறப்பட்டன.

இதோடு கண்டெடுக்கப்பட்ட புதைகுழிகள், பாலச்சந்திரன், கேணல் ரமேஷ், இசைப்பிரியா படுகொலை, வெள்ளைக்கொடி சம்பவம், சிங்கள பத்திரிகையாளர் பிரகீத் எக்னோல்டா காணாமல் போனது பற்றியும் பிப்ரவரி 24, 2014 வெளியான நவநீதம் பிள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் சர்வதேச நீதி விசாரணைக்கும், மனித உரிமைகள் ஆணையத்துக்கு பரிந்துரைத்துள்ளார்.

இதை மையமாக வைத்தே அமெரிக்கா தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், இக்கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள பல மனித உரிமையாளர்கள், இதை வலுவற்ற தீர்மானமாகவே கூறுகின்றனர். ஆனாலும் அமெரிக்க தீர்மானத்தை முழுமையாக நிராகரிக்க முடியாது. அப்படி இதையும் நிராகரித்து விட்டால் இலங்கை மீது எந்தவித சர்வதேச பிடியும் இல்லாமல் போகிவிடும். அதனால் இதை வைத்து இலங்கை மீதான் நடவடிக்கைகளில் அடுத்தக்கட்டத்துக்கு நகர வேண்டும். இத்தீர்மானம் மார்ச் 26 ஆம் தேதி சமர்பிக்கப்பட்டு, மார்ச் 27 ல் வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை ஐரோப்பிய கவுன்சில் கூட்டத்தின் நிறைவில் பத்திரிகையாளர்களிடையே பேசியஇங்கிலாந்து பிரதமர் டேவிட கேம்ரூன், "நான் இலங்கையின் நிலைமை தொடர்பாக ஆழமாக அக்கறை கொண்டுள்ளேன். கடந்த கால சம்பவங்களை சரியாக கவனிப்பதோடு, மீள்கட்டமைக்கப்பட்ட இலங்கையை காண விரும்புகிறேன். ஆனால் ராஜபக்சே இதையெல்லாம் செய்ய தவறிவிட்டார். அதனால் இப்போது போர்க் குற்றங்களுக்கான சர்வதேச சுதந்திர விசாரணை தேவை" என்றார்.

போர்க் குற்ற விசாரணை தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆர்வலர் ஒருவரிடம் கேட்டபோது, 'போர்க் குற்றம் என்றால் ஒருவித விசாரணை முறையும், இனப்படுகொலை என்றால் ஒருவித விசாரணை முறையும் இருப்பதால், அடுத்தக்கட்டமாக இனப்படுகொலைக்கான  அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் போர்க் குற்ற விசாரணை என்று வந்தால் போர் காலத்தில் நடந்த குற்றங்கள் மட்டும்தான் விசாரிக்கப்படும். ஆனால் இப்பொழுது போருக்கு இணையாக அடக்குமுறைகளும், நில அபகரிப்புகளும், பாலியல் சித்ரவதைகளும் நடைபெறுகிறது" என்று இனப்படுகொலை விசாரணைக்கான தேவையினை குறிப்பிட்டார்.

ஜெர்மனியில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் 'இலங்கையில் நடந்தது அப்பட்டமான இனப்படுகொலை' என்று அறிவித்திருந்தாலும், பெரும்பான்மையான நாடுகள் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்க மறுக்கிறது என்பதுதான் எதார்த்தம்.

ad

ad