புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014

 அனந்தியின் துணிகரமான முதல் நாள் உரையின் பின்னர், பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கூட இன அழிப்பு என்பதை வலியுறுத்திப் பேசியுள்ளனர்
ஐ. நா மனித உரிமைச் சபையின் நிகழ்ச்சி நிரல் புள்ளி 4 இன் கீழ் பொது விவாதம் இடம்பெறும் போது அரச சார்பற்ற நிறுவனங்கள் சார்பாக ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 2 நிமிடங்கள்ஒதுக்கப்படுவது வழக்கம். இதில் இடம் பெறுவதற்கு குறித்த நிறுவனத்திற்கு எகோசொக் எனப்படும் அங்கீகாரம் இருக்கவேண்டும். பல வருடங்களாக ஈழத் தமிழரின் சுய நிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் கரன் பார்க்கர் போன்றவர்கள் இந்த வெளியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
கரன் பார்க்கர் அம்மையார் இவ்வருடம் இன அழிப்பு என்பதையும், சுயநிர்ணய உரிமை என்பதையும் வலியுறுதி தனது கருத்தைப் பதிவு செய்தார். சென்ற வருடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதே இடத்தில் உரையாற்றியிருந்தார்.
அந்த இடத்தில் இம்முறை அனந்தி உரையாற்றியுள்ள நிலையில் அனந்தியின் துணிகரமான முதல் நாள் உரையின் பின்னர், பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கூட இன அழிப்பு என்பதை வலியுறுத்திப் பேசியுள்ளனர். நேற்றுச் செவ்வாய்க்கிழமையன்று அனந்தி உள்ளடங்கலாக குறைந்தது மூவர் ஈழத் தமிழருக்கு எதிரான இன அழிப்பு குறித்து பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
தவிரவும், ஐ நா மனித உரிமை சபையில் எமது கருத்தை தமிழ் மொழியிலேயே முன்வைக்க முடியும் என்பதையும் அனந்தி நிறுவியிருக்கிறார். அவரது தமிழ் உரையின் முழு வடிவமும் பின்வருமாறு:
பெரு மதிப்புக்குரிய இந்தப் பேரவையானது பெருங்குற்றங்கள் குறித்து கவனம் செலுத்துவதை நாங்கள் வரவேற்கிறோம்.
இலங்கைத்தீவின் வட மாகாண சபையில் தேர்தலூடாகாத் தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாகவும் இன்று நான் இங்கு நிற்கிறேன். போரின் முடிவில் எனது கணவர் சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைவதை நேரடியாக பார்த்த சாட்சியமாக காணாமற்போரைத் தேடிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானோருள் ஒருத்தியாக அவர்களையும் நான் இங்கு பிரதிதிநிதுவப்படுத்துகிறேன்.
இன அழிப்புப் போரின் பின்னராக இன்னமும் 146,000 இற்கும் அதிகமானவர்களின் கதி தெளிவு படாத நிலையில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.
2009ம் ஆண்டில் ஆயிரக்கணக்கில் தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஐ.நா மன்றமும் சொல்லியிருக்கிறது.
2009 மே மாதத்திற்குப் பின்னரும் இன அழிப்பு வேறு வடிவங்களில் அதிகரித்திருக்கும் ஒரு தொடர்நிலையாகி விட்டது.
சிங்களவர்களைப் படையினராகக் கொண்ட சிறீலங்கா இராணுவம் எமது தாயகத்தை ஆக்கிரமித்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஆக்கிரமிப்பு இராணுவத்தினரின் தொகை அதிகரித்து வருகிறது. எமது காணிகள் மீது எமக்கே உரிமை இல்லாத நிலை காணப்படுகிறது. எமது மண் எம்மிடமிருந்து சிறீலங்கா இராணுவத்தாலும் சிங்களவர்களாலும் பறிக்கப்படுகிறது.
நான் இன்று இங்கு பேசிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் கூட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இருவர், அருட்தந்தை பிரவீன் அவர்களும், ருக்கி பெர்ணாண்டோ அவர்களும் ஒரு தமிழ்த் தாயினதும், மகளினதும் மனித உரிமைக்கு குரல் கொடுக்க கிளிநொச்சி சென்றதற்காகப் பயங்கரவாத தடைச் சட்ட சரத்துக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ ஆக்கிரமிப்பினால் எமது பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் பாதுகாப்பு இல்லாதிருக்கிறது. பாலியல் வன்புணர்வும், பாலியல் வன்முறையும் நாளாந்தம் நடக்கின்ற நிலையாகிவிட்டது. பல கோயில்களும் தேவாலயங்களும் அழிக்கப்பட்டு அங்கு புத்த சிலைகள் நிறுவப்படுகின்றன. எமது பண்பாடு நாளாந்தம் சீரழிக்கப்படுகிறது. சிங்கள அரசு எமது மண்ணையும், பண்பாட்டையும், வரலாற்றையும், ஏன் எமது மனப் பதிவுகளையும் கூட அழித்துவிட முனைகிறது. இவையெல்லாவற்றையும் பற்றி பல அறிக்கைகள் பேசுகின்றன.
பிறேமனில் நடந்த மக்கள் தீர்ப்பாயம் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடந்ததென்பதையும், இன அழிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது என்பதையும் அறுதியிட்டுச் உரைத்திருக்கிறது. அப்படியிருந்தும், ஐ.நா மன்றம் இதைத் தடுத்து நிறுத்த எதுவும் செய்யவில்லை. இன அழிப்பு நடைபெறுகிறது என்பதை அங்கீகரிக்கவும் இல்லை. தாயகத்தில் இருக்கும் தமிழர்களுக்கு குரல் கொடுக்கவல்ல ஒருத்தியாக நான் இதைச் சொல்கிறேன். இங்கு கொண்டுவரப்பட்டிருக்கும் தீர்மானங்கள், தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் நகல் உட்பட, பலனளிக்காமல் இருப்பது குறித்து எமது மக்கள் கடும் அதிருப்தி கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இவை தீர்க்கவில்லை. தமிழ் என்ற சொல்லே இல்லாத நிலையே காணப்படுகிறது.
சிறீலங்கா அரசு தன்னைத் தானே மாற்றிக்கொள்ளும் தகைமை அற்றது. அது ஒரு இன அழிப்பு அரசு. அது தன்னைத் தானே விசாரிக்கும் ஆற்றல் அற்றது. எனவே இன அழிப்பு மீதான ஒரு சுயாதீனமான, சர்வதேச விசாரணை ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்படவேண்டும்.
நான் இங்கு மீண்டும் ஒரு தாயாகவும், எமது தாயகத்தில் தமிழ்த் தாய்மாரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருத்தியாகவும் பேசுகிறேன். எமது குழந்தைகளினதும் எமதும் எதிர்காலம் எமது அடையாளத்துடனும், பாதுகாப்பானதாகவும், அமைதியானதாகவும், சுயமரியாதை கொண்டதாகவும், நியாயமானதாகவும் அமைய வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.
மிகவும் கொடூரமான அரச ஒடுக்குமுறைக்கு 60 வருடத்துக்கு மேலாக உட்படுத்தப்பட்டவர்கள் என்ற வகையில் தமிழ்த் தேசத்திற்கு நியாயம் நல்க வேண்டிய கடமைப்பாடு இந்த உலகின் கைகளில் உள்ளதென தெரிவித்துள்ளார்.

ad

ad