புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014

இந்தியத் தேர்தலும் தமிழ்நாட்டு இரு பெரும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும்

இந்தியாவில் இடம்பெறவுள்ள தேர்தல்களுக்கான பரப்புரைகள் தற்போது உச்சம்பெற்றுள்ளன. தமது வேட்பாளர்களை நியமிக்கும் பணியைக் கட்சிகள் ஆரம்பித்துள்ளன. இந்திய நாடாளுமன்றின் கீழ்ச்சபைக்கான 543 வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளன. தேர்தல் தொடர்பான பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், இரண்டு பிரதான தேசியக் கட்சிகளான, தற்போது இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி ஆகியன தமது தேர்தல் அறிக்கைகளை இன்னமும் வெளியிடவில்லை. பிரதான இரண்டு கட்சிகளின் இந்த நிலைப்பாடானது வாக்காளர்கள் மற்றும் அவதானிப்பாளர்கள் இவற்றின் வெளியுறவு மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பில் எவ்வாறான முன்னுரிமைகளைக் கொண்டுள்ளன என்பதைத் தாமாக ஊகித்துக் கொள்ள வேண்டியுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் போட்டியிடும் கட்சிகள் தமது தேர்தல் விளக்கவுரைகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளன. இங்கு போட்டியிடும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டும் தமது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு விட்டன. அயல்நாடான சிறிலங்கா மீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக இவ்விரு கட்சிகளும் குறித்த சில நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளன.
இது வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளும் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து அரசியல்வாதிகளும், சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலைமையில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களை இந்தியா ஆதரிக்க வேண்டும் என இந்திய மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தன. இந்தியா தனது தேசியப் பாதுகாப்பு மற்றும் அயல்நாட்டுடனான உறவு போன்றவற்றைக் கருத்திற் கொண்டு இத்தீர்மானத்திற்கு ஆதரவு வழங்காதிருப்பதென முன்னர் தீர்மானித்த போதும், இதன் உள்நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அரசியல் அழுத்தங்கள் மற்றும் விவாதங்களைத் தொடர்ந்து இந்தியா இவ்விரு தீர்மானங்களையும் ஆதரித்தது. அதாவது இந்தியா தனது சொந்த நலன் கருதியே கொழும்பிற்கு எதிராக வாக்களிக்க முன்வரவில்லை என இதன் உள்நாட்டு சக்திகள் கேள்வியெழுப்பின. சிறிலங்கா தற்போது சீனாவுடன் மிகநெருங்கிய பலமான உறவைக் கட்டியெழுப்பி வருகின்றமை இந்தியாவின் தளம்பலுக்கு காரணமாக அமைந்தது.

மறுபுறத்தே, இந்தியாவின் மொத்த சனத்தொகையில் 70 மில்லியன் பேர் தமிழர்களாவர். இதனை அடிப்படையாகக் கொண்டு சிறிலங்காவில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் 13வது திருத்தச்சட்டம் முற்றாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் சிறுபான்மை ஈழத்தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இது இந்தியாவுக்கு பெரும் சவாலாக அமைந்தது. அதாவது 2009ன் இறுதியில் சிறிலங்காவில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போது போரில் ஈடுபட்ட சிறிலங்காப் படைகளால் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானத்தை ஆதரிப்பதா அல்லது இல்லையா என்பது இந்தியாவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. இது இந்தியாவைப் பொறுத்தளவில் மிகக் கடினமான விவகாரமாக மாறியது.

இந்நிலையில் 2012 மற்றும் 2013 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இரண்டு தீர்மானங்களையும் இந்தியா ஆதரித்து வாக்களித்தது. இவ்வாறான நிலையிலும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் விலகிக் கொண்டது. இந்தியா சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் வாக்களிக்க வேண்டும் எனக் கோரி தி.மு.க காங்கிரசிலிருந்து விலகிக்கொண்டது. சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தில் பயன்படுத்தப்பட்ட மொழிநடை மேலும் கடினமாக்கப்பட வேண்டும் என இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தி.மு.க நிபந்தனை ஒன்றை முன்வைத்தது.

சிறிலங்காவில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கான அனைத்துலகப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையாளர் தனது ஆதரவை வழங்க வேண்டும் என்பதற்காக தற்போது இவ்வாண்டு ஜெனீவாவில் பிறிதொரு தீர்மானம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்களிப்பு இவ்வாரம் இடம்பெறவுள்ள நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை இதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறது. இந்திய அரசாங்கம் இத்தீர்மானம் தொடர்பான தனது நிலைப்பாட்டை இன்னமும் வெளிப்படுத்தவில்லை. சிறிலங்காத் தமிழர்களுக்கு ஆதரவு வழங்கப்படுவதை அ.இ.அ.தி.மு.க தனது உத்தியோகபூர்வத் தேர்தல் விளக்கவுரையில் குறிப்பிட்டுள்ளது.

சிறிலங்காவின் உள்நாட்டுப் போர்க் காலத்தில் சிறுபான்மைத் தமிழ்மக்களுக்கு எதிராக போர்க் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை மேற்கொண்ட அனைவருக்கும் அனைத்துலக விசாரணை நீதிமன்றின் ஊடாகத் தண்டனை வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்படும் என அ.இ.தி.மு.க தனது விளக்கவுரையில் குறிப்பிட்டுள்ளது. சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு ஐ.நா நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கும் உலகம் பூராவும் வாழும் தமிழ் மக்களுக்கும் இடையில் தனி ஈழம் அமைப்பது தொடர்பான கருத்து வாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்படுவதற்கு ஐ.நா விடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அ.இ.தி.மு.க வின் இந்த நிலைப்பாடானது ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களை விடப் பலமானவையாகும். அதாவது அனைத்துலக நீதிமன்றின் ஊடாக சிறிலங்காவில் குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்குதல் மற்றும் சிறிலங்காவின் வடக்கில் தனி ஈழம் அமைப்பதற்கான கருத்து வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என ஐ.நாவிடம் கோருதல் ஆகிய இரண்டும் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளன. சிறிலங்காத் தீவில் அரசியற் தீர்வொன்று எட்டப்பட்டு மீளிணக்கப்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் என உலக நாடுகள் இதுநாள் வரை கோரிக்கை விடுத்துள்ளனவே தவிர அ.இ.தி.மு.க வின் தேர்தல் விளக்கவுரையில் குறிப்பிட்டது போன்று தனி ஈழம் அமைப்பதற்கான கோரிக்கை விடுக்கப்படவில்லை. அதாவது ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதையே அனைத்துலக சமூகம் வலியுறுத்தி வருகிறது.

தி.மு.க வின் தேர்தல் அறிக்கை வேறுபட்டது. முதலாவதாக, "தமிழ் மக்கள் கணிசமானளவில் வாழும் சிறிலங்காவுக்காக நியமிக்கப்படும் இந்தியத் தூதுவர்கள் தகைமை பெற்ற தமிழர்களாக மட்டுமே இருக்க வேண்டும்" எனக் கோரியுள்ளது. இரண்டாவதாக, மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் தமிழ் அமைப்புக்கள் சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரியுள்ளதாகவும் தி.மு.க தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

"சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலைகள், போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன அனைத்துலக விசாரணை இடம்பெறவேண்டும் என அனைத்துலக சமூகம் மீது இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தி.மு.க தொடர்ந்தும் வலியுறுத்தும்" என இதன் தேர்தல் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான அறிக்கைகளை ஈழத்தமிழ் மக்கள் தொடர்பில் தி.மு.க மற்றும் அ.இ.தி.மு.க முன்னுரிமைப்படுத்தியுள்ள நிலையில், மே மாத நடுப்பகுதியில் இவ்விரு கட்சிகளில் ஏதேனும் ஒன்று பிரதான ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமா என்பதையும் இவ்விரு கட்சிகளின் நிலைப்பாடுகளும் இந்திய வெளியுறவுக் கொள்கை மீது எவ்வாறு தாக்கத்தைச் செலுத்தவுள்ளன என்பதையும் பொறுத்திருந்து பார்ப்பது சுவாரசியமானதாகும்.

கட்டுரை வழிமூலம் : Asia Unbound - by Alyssa Ayres 

ad

ad