புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2014


ஜெ., குவித்த சொத்துக்கள் :
பெங்களூர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்
அதிரடி பட்டியல் .முரசொலி செய்தி
 

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் நேற்று ஆஜராகி,
ஏற்கனவே அளிக்கப்பட்ட சாட்சியங்களின் விவரத்தை எடுத்துரைத்தார். அப்போது, ஜெயலலிதாவிற்குச் சொந்தமான கொடநாட்டில் 800 ஏக்கர் நிலமும், ஊத்துக்கோட்டையில் 200 ஏக்கர் நிலமும், 25 ஏக்கர் பங்களா நிலமும்,  உள்ளதற்கான சாட்சியங்களை நீதிமன்றத்தில் அவர் படித்துக்காண்பித்தார்.


‘’அந்த நிலங்களை, அப்போது அரசுப்பணியில் இருந்த வேளாண்மைத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் என்பவரை முறைகேடாக சொந்தத்தேவைகளுக்குப் பயன்படுத்தி, நிலங்களை அவர் ஆய்வு செய்த பிறகு வாங்கப்பட்டுள்ளன’’ என்றும் பவானிசிங் குறிப்பிட்டார்.  மேலும், வாகனங்கள் வாங்கிக்கொடுத்தவர்கள் அளித்த சாட்சியங்களின் விவரத்தையும் பவானிசிங், நீதிபதியிடம் எடுத்துரைத்தார்.
அப்போது அவர், ‘’வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் பொருளாதார நிலைக்கும், அவர்கள் வாங்கிக்குவித்துள்ள நிலங்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை.  இவை அனைத்தும் வருமானத் திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதன் மூலம் வாங்கப்பட்ட நிலங்கள் என்பது சாட்சியங்கள் மூலம் தெளிவாகத்தெரிகிறது’’ என்று வாதிட்டார்.
‘’1991 ம் ஆண்டு ஜூலைத்திங்கள் முதல் 1996 ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் வரையிலான அந்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகள், சேர்த்த சொத்துக்களின் அன்றைய மதிப்பு பல லட்சங்கள்.  இன்று அதன் பதிப்பு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பெருகி உள்ளது’’ என்றும் பவானிசிங் தனது வாதத்தின் போது சுட்டிக்காட்டினார்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான்மைக்கேல் டி.குன்ஹா முன்பு கடந்த 21ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது.   அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகாமல் இருக்க விலக்கு அளிக்கக்கோரி அவர்களது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.  அதைத்தொடர்ந்து நீதிபதி, அரசு சிறப்பு வழக்கறிஞர்பவானிசிங்கை பார்த்து இறுதி வாதத்தை தொடரும்படி கூறினார்.

அதைத்தொடர்ந்து பவானிசிங் தனது வாதத்தை தொடங்கினார்.


அவர் தனது வாத்தில் கூறியதாவது:
‘’தமிழகத்தைச்சேர்ந்த டாக்டர் சுப்பிரமணிய சுவாமி என்பவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 1996 ஜூன் 14ம் தேதி தாக்கல் செய்த மனுவில் 1.7.1991 முதல் 30.4.1996 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறியிருந்தார்.  அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டது.   அதை அப்போது போலீஸ் அதிகாரியாக இருந்த  லத்திகா சரண், புகார் மீது விசாரணை நடத்தும்படி போலீஸ் அதிகாரி வி.சி. பெருமாளுக்கு26.6.1996 அன்று உத்தரவிட்டார்.  அவர் விசாரணை அறிக்கை கொடுத்தபின், இவ்வழக்கு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.  போலீசார் விசாரணைநடத்தி 1997 ஜூன் 4ம் தேதி சென்னை தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.


மறுநாள், வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன்,இளவரசி ஆகியோருக்கு சம்மன்கள் அனுப்பப்பட்டன.  1997 அக்டோபர் 21ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.  259 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். அதில், 39 சாட்சிகளைத்தவிர மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் 2001 மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.  வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.   அப்போது சென்னையில் நடந்து வந்த விசாரணையில் ஏற்கனவே சாட்சியம் அளித்த 76 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்து, 2002 நவம்பர் முதல் 2003 பிப்ரவரி 21ம் தேதி வரை விசாரணை நடந்தது.  அதைத்தொடர்ந்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313 விதியின்படி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகாமல், நீதிமன்ற உத்தரவின்படி நேரில் சென்று கேள்வி கேட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.
இதனிடையே இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்யக்கோரி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.  அதையேற்று சென்னை தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணைக்கு 2003 பிப்ரவரி 28ம் தேதி இடைக்கால தடை விதிக்கப்பட்டது.     இம்மனுவை விசாரணை நடத்திய நீதிமன்றம், இவ்வழக்கை பெங்களூருக்கு மாற்றம் செய்து 2003 நவம்பர் 18ம் தேதி உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று சென்னை தனி நீதிமன்றம், வழக்கை பெங்களூருக்கு மாற்றம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை 2004 செப்டம்பர் 10ம் தேதி பிறப்பித்தது.  அதைத்தொடர்ந்து கர்நாடக அரசின் சார்பில் தனி நீதிமன்றம், தனி நீதிபதி, தனி அரசு வழக்கறிஞர் என நியமனம் செய்யப்பட்டு 2005 பிப்ரவரி முதல் விசாரணை நடந்து வருகிறது.   இவ்வழக்கு தொடர்பாக பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளன.   அவை பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கு 1.7.1991க்கு முன் இருந்த சொத்துக்கள் 1.7.1991 முதல் 30.4.1996 வரியிலான சேர்த்த சொத்துக்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன.  வழக்கு காலத்திற்கு முன் 2 கோடியே ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 953 மதிப்புள்ள சொத்து இருந்ததும், வழக்கு காலத்திற்கு பின் சொத்து மதிப்பு 64 கோடியே 42 லட்சத்து 89 ஆயிரத்து 616 சேர்த்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.  வழக்கில், குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள் ளவர்களில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ரத்த சம்பந்தமான உறவினர்கள் ஆவார்கள்.
கூட்டுக்கொள்ளை:

முதல் குற்றவாளியும் இரண்டாவது குற்றவாளியும் ஒரே வீட்டில் குடியிருந்தார்கல் என்பதற்கான 9 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.  மேலும், 1 முதல் 4 வரையிலான குற்றவாளிகள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் என்பதற்கான பல கம்பெனிகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.   அதன் மூலம் நான்கு குற்றவாளிகளும் கூட்டுச்சதி செய்து, முதல் குற்றவாளி முதலமைச்சராக இருந்தபோது, அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவருக்காகவும், அவரைச்சார்ந்த மற்ற 3 குற்றவாளிகளூக்காகவும் சேர்த்து தங்களது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்திருக்கிறார்கள் என்பதுதான் இந்த வழக்கின் நோக்கமாகும்.
பிரம்மாண்டமான திருமணம்:
மூன்றாவது குற்றாவளியாகச் சேர்க்கப்பட்டுள்ள வி.என்.சுதாகரனை முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்(ஜெயலலிதா)தத்துப் பிள்ளையாக ஏற்றுக்கொண்டு பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து வைத்துள்ளார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்திருப்பதற்கான ஆவணங்கள் உள்ளன.  - இவ்வாறு அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் வாதிட்டார்.


அவரது வாதம் 24ம் தேதிக்கு அதாவது நேற்றைக்கு மீண்டும் தொடரும் என்று கூறி நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா விசாரணையை ஒத்தி வைத்தார். 
சொத்துக்குவிப்பு வழக்கில் 7 மாதங்களுக்கு பின் நேற்று அரசு வழக்கறிஞர் பவானிசிங் தனது வாதத்தை தொடங்கினார்.   உடல்நிலை பாதிப்பு காரணமாக 5 நிமிடம் மட்டுமே வாதம் செய்த பவானிசிங், ‘’தொடர்ந்து தனது உதவியாளர் முருகேஷ் மரடி வாதம் செய்வார்’’ என்று நீதிபதியிடம் கூறினார்.  அதையேற்று நீதிபதி அனுமதி வழங்கினார்.
முருகேஷ் மரடி தனது வாதத்தைத் தொடங்கியதும், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார், சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர் ஆகியோர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
’’தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீசார் தொடர்ந்த ஒரு வழக்கில் அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் மட்டுமே வாதம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே, உதவியாளர் வாதம் செய்வதை அனுமதிக்கக்கூடாது’’ என்றார்.
குமரேசன் விளக்கம்:

அப்போது நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, கழக பொதுச்செயலாள பேராசிரியரின் வழக்கறிஞரான பி.குமரேசனிடம்,  ‘’கர்நாடக உயர்நீதிமன்றம், இது போன்ற வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞரின் உதவியாளர் ஆஜராகக்கூடாது என தீர்ப்பு ஏதும் வழங்கியிருக்கிறதா?’’ என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்து பி.குமரேசன் குறிப்பிட்டதாவது:
இந்த வழக்கே 2011ம் ஆண்டு நாங்கள் தொடர்ந்த வழக்குதான்.   அன்றைய அரசு சிறப்பு வழக்கறிஞரான ஆச்சார்யாவை தவிர்த்து விட்டு, ஊழல் தடுப்பு பிரிவினர், தங்களுக்காக டெல்லியில் இருந்து ஒரு மூத்த வழக்கறிஞரை நியமித்தார்கள்.   அதை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம், ‘’ஊழல் தடுப்பு பிரிவு தொடுக்கும் வழக்குகளில் அரசி சிறப்பு வழக்கறிஞர் ஆஜராக வேண்டுமேயல்லாமல், வேறு யாரும் அவ்வழக்கில் ஆஜராகக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியது.  ஆனால் இப்போது அரசு சிறப்பு வழக்கறிஞரும் சரி, அவரது உதவி வழக்கறிஞரும் சரி, இருவருமே குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 24ன் கீழ் நியமிக்கப்பட்டவர்கள்.
மேலும், அரசு சிறப்பு வழக்கறிஞர் ( பவானிசிங்) இன்று நீதிமன்றத்தில்தான் இருக்கிறார்.   அவரே தான் தனது உதவியாளரை வழக்கை நடத்தும்படி அறிவுறுத்துகிறார்.  அதனால், ஏற்கனவே கர்நாடக உயர்நீதிமன்றம் அரசு வழக்கறிஞர் ஆஜராக வேண்டியது குறித்து குறிப்பிட்டிருந்தது இந்த வழக்கிற்குப்பொருந்தாது.
அந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி மேற்கோள் காட்டியது அரசு தரப்பு வழக்கறிஞருக்கு தெரியப் படுத்தாமல் வேறு எந்த வழக்கறிஞரையும் நியமிக்க முடியாது’’ என்பதுதான்.

-இவ்வாறு பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் வாழக்கறிஞர் பி.குமரேசன் நீதிபதியிடம் கூறினார்.
22 ஏக்கர் பங்களா:
அதனைத்தொடர்ந்து பவானிசிங், ‘’அரசு வழக்கறிஞர் சார்பில் உதவியளார் வாதம் செய்ய அனுமதிக்கலாம் என்று பல்வேறு வழக்குகளீல் கர்நாடக நிதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.   மேலும் நான் நீதிமன்றத்தில் இல்லாத சமயத்தில் வேண்டுமானால் எனது உதவியாளர் வாதிட அனுமதிக்காமல் இருக்கலாம்.  நான் இருக்கும்போது எனது சார்பில் அவர் வாதம் செய்வதில் தவறில்லை என்றார்.   இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மைக்கேல் டின்.குன்ஹா அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் முருகேஷ் மரடி வாதிட அனுமதி வாங்கினார்.
 அதனைத்தொடர்ந்து வழக்கறிஞர்முருகேஷ் மரடி,  பல ஆண்டுகளுக்கு முன்பு  பதியப்பட்ட சாட்சிகளின் விபரங்களை நீதிபதி முன்பு படித்துக் காண்பித்தார்.  அதில், குற்றாளிகள் பல நிறுவனங்களை வாங்கியதற்கான ஆவணங்கள் குறித்தும் , அந்த நிறுவனங்களின் பெயரிலேயே பல அசையாச்சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ள  விவரங்களையும் அவர் படித்துக்காண்பித்தார்.
குறிப்பாக இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு சொந்தமான சென்னையை அடுத்த ஊரில் 22 ஏக்கர் நிலத்தினை சுதாகரன் மிரட்டி வாங்கியது குறித்து அளிக்கப்பட்ட சாட்சியத்தினை நீதிமன்றத்தில் படித்துக் காண்பித்தார்.
அத்துடன் சனிக்கிழமை வாதம் முடிவுற்றது.   மீண்டும் நேற்றய தினம் அவ்வாதம் தொடங்கியது.  அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராகி, ஏற்கனவே இவ்வழக்கு தொடர்புடைய சாட்சிகள் வழங்கியிருந்து, பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களை படித்துக்காண்பித்தார்.  அதில் குறிப்பாக,  சசிகலாவும், இளவரசனும் சென்று நீலாங்கரையில் உள்ள ஒரு பங்களாவை சுற்றிப்பார்த்து அதை வாங்கியது சம்பந்தமாக அந்த இடத்தின் உரிமையாளர் வழங்கியிருந்த  சாட்சியத்தை படித்துக் காண்பித்தார். 
அதே போன்று நீலாங்கரையில் நீச்சல் குளம் உள்ளிட்ட ஒரு பங்களா அமைந்த இடத்தினைசுதாகரன் வாங்கியது சம்பந்தமாக அந்த இடத்தின் உரிமையாளர் அளித்திருந்த சாட்சியத்தையும் நீதிமன்றத்தில் பவானிசிங் படித்தார்.
மேலும், ஜெயலலிதா கொடநாட்டில் வாங்கிய 800 ஏக்கர் நிலத்தினை சீரமைக்க வேளாண்மைத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணனை அழைத்தது பற்றி அந்த அதிகாரியே சாட்சியம் அளித்துள்ளதைப் படித்து காண்பித்தார்.

மேலும் அதே வேளாண்மைத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன், சுதாகரனால் முறைகேடாக சொந்த தேவைகளுக்காக  அனுப்பப்பட்டு, அவர் திருநெல்வேலியில் 1190 ஏக்கர் நிலத்தினை ஆய்வு செய்த பிறகு, வாங்கியது குறித்த சாட்சியத்தையும் பவானி சிங் நீதிமன்றத்தில்  படித்துக்காண்பித்தார்.
அதுமட்டுமல்லாமல், சென்னை அருகே உள்ள வாலாஜாபாத்தில்  100 ஏக்கர் நிலத்தினை அந்த இடத்தின் உரிமையாளர்கலை அணுகி, வாங்கிக்கொடுத்த நிலத்தரகர் ராஜாராம் வழங்கியிருந்த சாட்சியத்தையும் படித்துக்காண்பித்தார்.
-இவ்வாறு ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகளால் வாங்கப்பட்ட பல சொத்துக்கள் தொடர்பான விவரங்களையும், அது தொடர்பான சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் படித்துக்காண்பித்த அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங்.
வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்களின் பொருளாதார நிலைக்கும் அவர்கள்  வாங்கி குவித்துள்ள நிலங்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை.  இவை அனைத்தும் வருமானத்திற்கு  அதிகமாக சொத்து  சேர்த்துள்ளதன் மூலம் வாங்கப்பட்ட நிலங்கள் எனப்து சாட்சியங்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
‘’சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான 5 ஆண்டுகளில் பல லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டசொத்துக்கள் இன்றைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ளவையாக விளங்குகின்றன’’ என்று  குறிப்பிட்டார்.

ad

ad