புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014

தமிழர்களுக்கு எதிராக நாம் யுத்தம் செய்யவில்லை; பயங்கரவாதிகளுக்கு எதிராகவே யுத்தம் செய்தோம்

களுத்துறை பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை
உள் விவகாரங்களில் சர்வதேசம்  தலையிடக் கூடாதென்பதற்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்

நாம் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை. நாம் உலகின் மிகக் கொடிய பயங்கரவாதிகளுக்கு எதிராகவே யுத்தம் செய்தோம். நாம் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில் சில நம்நாட்டு அரசியல் கட்சிகள் எல்.ரி.ரி.ஈயின் கையாட்களாகக் கூட செயல்பட்டனர். 30 ஆண்டு காலமாக எங்கள் நாட்டின் சகல இனமக்களையும் துன்பத்தில் ஆழ்த்தி வந்த பயங்கரவாதிகளின் கொடுமையில் இருந்து மக்களை விடுவித்து நாம் அவர்களின் அச்சத்தை நீக்கி சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் களுத்துறை வேனன் பெர்ணான்டோ மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாண சபை வேட்பாளர்களை ஆதரிக்கும் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பை நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றும் ஜனாதிபதி கூறினார்.
ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்; சில அற்பத்தனமான குணம் உடைய உள்ளூர் அரசியல்வாதிகள் அரசியல் மூலம் மக்களின் ஆதரவை பெற முடியாத காரணத்தினால் தனக்கும் இந்நாட்டுக்கு எதிராக சர்வதேச சமூகத்தில் போலிப் பிரசாரங்களை செய்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற எடுக்கும் முயற்சிகள் பயனளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.
எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும் தேர்தலில் சர்வதேச சமூகம் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற செய்தியை அறிவிக்கக்கூடிய வகையில் அரசாங்கக் கட்சிக்கு மாபெரும் வெற்றியை ஈட்டிக் கொடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மக்கள் இந்தத்தடவை பெரும் பேராதரவை வழங்குவார்கள் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்றும் இத்தேர்தலில் வெற்றிலைச் சின்னம் வெற்றிவாகை சூடி மக்களின் சுதந்திரத்தையும், சமாதானத்தையும் பேணிப் பாதுகாக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டி மக்களுக்கு சமாதானத்தையும் சுதந்திரத்தையும் ஏற்படுத்தியமை குறித்து அதிருப்தி அடைந்திருக்கும் சர்வதேச சமூகம் இலங்கை மீது அநாவசியமான அழுத்தங்களைக் கொண்டு வருகின்றன என்று தெரிவித்த ஜனாதிபதி யுத்தத்தின் பின்னர் அரசாங்கம் நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஏற்படுத்தியிருக்கும் அபிவிருத்தியினைப் பார்த்த பின்னரும் சர்வதேச சமூகம் இவ்விதம் குறிப்பிடுவது தவறு என்றார்.
இன்று நாட்டில் விமான நிலையங்கள், துறைமுகங்கள் , நெடுஞ்சாலைகள், கடுகதி நெடுஞ்சாலைகள் பாலங்கள் போன்ற பாரிய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் அரசாங்கத்தின் கல்விக் கொள்கையும் சீரமைக்கப்பட்டு மாணவர்களின் கல்வித்துறை மேம்பாட்டுக்கான புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
நவீன தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை பாடசாலைகளில் ஏற்படுத்தி விஞ்ஞான தொழில்நுட்ப கல்வியை பாடசாலை பாடவிதானங்களில் அறிமுகம் செய்து அரசாங்கம் கல்வித்துறையில் பெரும் புரட்சியை செய்து வருகின்றது எனவும் ஜனாதிபதி கூறினார்.
நாட்டுப்பற்றுடைய மக்கள் அர சாங்கத்துக்கு எதிரான துர்ப்பிரசாரங் களுக்கு இத் தேர்தலில் நல்ல பதில் அளிப்பார்கள் என்றும் ஜனாதிபதி கூறினார். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் குமார வெல்கம, ராஜித சேனாரத்ன, வாசுதேவ நாணயக்கார, பவித்ரா வன்னியாராச்சி, ரெஜினோல்ட் குரே நிர்மல கொத்தலாவல உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள்

ad

ad