புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014


இனியும் அப்படி பேசுவதை நிறுத்திக்கொள்ளாவிட்டால்.... : ஜெயலலிதாவுக்கு கலைஞர் எச்சரிக்கை
திமுக  தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’கள்ளக்குறிச்சியில் 16ஆம் தேதி பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, "மத்திய அரசில் அங்கம் வகித்தபோது தமிழ்நாட்டிற்கே தலைக்குனிவை
ஏற்படுத்தும் வகையில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அலைக்கற்றை இமாலய ஊழலை முன்னின்று நடத்திய கட்சி தி.மு.க.” என்று அவருக்கே உரிய பாணியில் நம் மீது பழி சுமத்தியிருக்கிறார்.


அலைக்கற்றை பற்றிய வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. விசாரணை தான் நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஆ. இராசா உள்ளிட்டோர், ஜெயலலிதாவைப் போல வாய்தா வாங்காமல், விசாரணைக்கு முறையாக ஒத்துழைத்து வருகிறார்கள். ஆனால் ஜெயலலிதா கலந்து கொள்ளும் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் கழகம் ஊழல் புரிந்ததாக வேண்டு மென்றே திட்டமிட்டுக் குற்றஞ்சாட்டி வருகிறார். ஆனால் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில், அவர் மீது, அவருடைய ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு, அவை நீதிமன்றத் திலும் விசாரிக்கப்பட்டு, என்னென்ன தீர்ப்புகள் நீதிமன்றங்களால் கூறப்பட்டன என்ற விவரத்தை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன்.
ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஜெயலலிதாவும் சசிகலாவும். இவர்கள் அரசுக்குச் சொந்தமான டான்சி பவுண்டரியின் 3.0786 ஏக்கர் நிலத்தையும் அதிலே உள்ள 2,698 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள கட்டிடத்தையும் வழிகாட்டி மதிப்பீட்டிற்குக் குறைவான விலையில் 29-5-1992 அன்று வாங்கினார்கள் என்பதை ஜெயலலிதாவே 30-6-1992 மதுரையிலே நடைபெற்ற மாநாட்டில் திட்டவட்டமாக ஒப்புக் கொண்டு அவ்வாறு வாங்கியது  குற்றம் இல்லை என்று பேசி அனைத்து ஏடுகளிலும் அது வெளிவந்துள்ளது.


இவ்வாறு வாங்கியதின் மூலம் 3 கோடியே 50 லட்சத்து 91 ஆயிரத்து 429 ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டது. மேலும் விற்பனை பத்திரத்தில் முறைகேடு செய்து அதன் வாயிலாகவும் 43 லட்சத்து 9 ஆயிரத்து 474 ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, இறுதியாக தனது தீர்ப்பில் "ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக் கப்பட்டு ள்ளதாகத் தீர்மானிக்கப்படுகிறது” என்று கூறி மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அபராதம் பத்தாயிரம் ரூபாயும் விதித்து 9-10-2000 அன்று அறிவித்திருக்கிறார்.
அதேநாளில் டான்சிக்குச் சொந்தமான மற்றொரு இடத்தை "சசி எண்டர்பிரைசஸ்” நிறுவனத்திற்கு வாங்கியதற்காக இதே நீதிபதி இரண்டாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 5ஆயிரம் ரூபாய் வீதம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அதைப்போல ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 1-11-1991 அன்று கொடைக்கானல் ப்ளசண்ட் ஸ்டே ஓட்டலுக்கு தரைத்தளம் மற்றும் மேலும் ஒரு தளத்துடன் ஓட்டல் டிக் கொள்ள உரிமம் வழங்கப்பட்டது.


29-1-1992 அன்று மேலும் ஆறு தளங்கள் கட்ட அனுமதி கோரிய போது கொடைக்கானல் பெருந்திட்ட விதிமுறைகளுக்கு முரணாக இருந்ததால் 7-2-1992 அன்று கொடைக் கானல் நகரியச் செயல் அலுவலரால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஓட்டல் அதிபர் அரசுக்கு மேல் முறையீடு செய்து கொண்டார். அரசு அதிகாரிகள் இது விதி மீறல் என்று சுட்டிக்காட்டி மனுவை நிராகரிக்கலாம் என்று எழுதி வைத்தனர். அந்தக் கோப்பில் எழுதப்பட்டிருந்த ஆட்சேபணை களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருப்பது அந்தக் கோப்பிலே சாட்சியமாக உள்ளது.
சட்டத்திற்குப் புறம்பாக ஆணையிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி துறையின் செயலாளராக இருந்த சிரியாக், ஐ.ஏ.எஸ்., அமைச்சரைச் சந்தித்துக் கூறியிருக்கிறார். ஆனால் உடனடியாக சிரியாக் அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, 10-5-1994 அன்று எச்.எம். பாண்டே என்பவர் அந்தப் பதவியிலே நியமிக்கப்பட்டு, 13-5-1994 அன்றே அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டது. இதனை எதிர்த்து பழனி மலைப் பாதுகாப்புக் கவுன்சில் உயர்நீதிமன்றத்திலே அப்போதே அ.தி.மு.க. ஆட்சியிலேயே வழக்குத் தொடுத்தது.


உயர்நீதிமன்ற நீதிபதி விதிகளை மீறி கட்டப்பட்ட ஓட்டல் பகுதி களை இடித்துத் தள்ள வேண்டுமென்று தீர்ப் பளித்ததோடு "சட்டத்தின் நடைமுறையிலிருந்து சட்டத்தை உடைப்பதற்கு அரசு விதி விலக்கு அளித்துள்ளது. இது கட்டிலின் அளவுக்கேற்ப மனிதனின் அளவை வெட்டுவது போன்றதாகும்” ((The Government had exempted the law-breaker from the operation of the law, which would tantamount to cutting a man to the size of a cot”)”) வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தத் தீர்ப்பின் முடிவிலேதான் "நாடொறும் நாடி முறை செய்யா மன்னவன் நாடொறும் நாடி கெடும்” என்ற திருக்குறளை நீதிபதி எழுதியிருந்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்தபோது அங்கும் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.


சிறப்பு நீதிமன்றத்திலே இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, 2-2-2000 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பிலே, "குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேரும் ஒருவரோடொருவர் கூட்டுச்சதி புரிந்து ஊழல் மற்றும் கிரிமினல் குற்றங்கள் புரிந்ததை அறிய முடிகிறது. உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தெரிவித்த பலத்த கண்டனத்தையும் மீறி பொது நலனைக் கருத்திற்கொள்ளாமல், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பொது ஊழியர்கள் குற்றம் புரிந்துள்ளனர். செய்த குற்றத்தை மறுத்து அவர்கள் கூறும் காரணம், சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது. கூட்டுச் சதி புரிந்து ஆவணங்களைத் திருத்தி ஊழலில் ஈடுபட் டுள்ளனர் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று கூறி, ஜெயலலிதா உட்பட ஐந்து பேருக்கு ஓராண்டு கடுங்காவலும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதி மன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் ப்பளித்தார்.


1995-96இல் 45,302 வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வாங்குவதற்கு முடிவெடுக்கப் பட்டது. அப்போது வெளிமார்க்கெட்டில் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியின் விலை ரூ. 12,500. ஆனால் அரசு ஒவ்வொரு பெட்டிக்கும் 14,500 ரூபாய் விலை என்று நிர்ணயித்து வாங்கியது. இதன்மூலம் அரசாங்கத்திற்கு ஒன்பது கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் 11 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபோதே தங்களை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று 9 பேர் மனுக் கொடுத்தனர். அதன்மீது 14-5-98 அன்று தீர்ப்பளித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், "இந்த வழக்கில் எல்லா எதிரிகளும் சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு போதுமான ஆதாரம் உள்ளது. சட்டத்திற்குப் புறம்பாக அரசாங்கப் பணத்தை கையாடல் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் செயல்பட்டுள்ளனர்.
நம்பிக்கை மோசடி மூலமாக தங்களுக்கும் மற்றவர்களுக்கும் பண ஆதாயம் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என்பது ஆவணங்களிலிருந்து தெளிவாகப் புலனாகிறது. இந்த வழக்கில் கலர் டி.வி. மூலம் அரசுக்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளனர் என்பது கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு ஆவணங்களைப் பார்க்கிற போது கண்கூடாக வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. ஜெயலலிதாவும் மற்ற ஆறு பேரும் பொது ஊழியர்களாக இருந்து கொண்டே அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து சட்ட விரோதமாக சதித் திட்டம் தீட்டி 45,302 கலர் டி.வி. பெட்டிகளை வெளி மார்க்கெட்டில் 12,500 ரூபாய்க்குக் கிடைத்தும், 14,500 ரூபாய் வீதம் வாங்கி அரசுக்கு 9 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்” என்றெல்லாம் கூறித்தான் வழக்கைப் பதிவுசெய்தார்.
ஜெயலலிதா முதல் அமைச்சராக ஆவதற்கு முன்பு அவருக்கு இருந்த சொத்து மதிப்பு அதாவது 1-7-1991 அன்றைய தேதியில் 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய். ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை ஐந்தாண்டுகள் அனு பவித்து முடிந்த பிறகு 12-5-1996 அன்று ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395 ரூபாயாகும். திரு. சுப்பிரமணிய சுவாமி அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டது. விசாரணையைத் தடுத்திட ஜெயலலிதா உயர்நீதிமன்றத்திலே வழக்குத் தொடுத்து விசாரணை சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்த போதிலும் பின்னர் தடையை நீக்கி விசாரணை யைத் தொடர உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.



இந்த வழக்கிலே ஜெயலலிதா பிறகு உயர்நீதி மன்றத்தில் தனக்கு எதிர்பார்ப்பு ஜாமீன் கோரினார். அதனை நிராகரித்து உயர்நீதிமன்றம் ஜெயலலிதா மீது சாட்டப்பட்டுள்ள ஊழல் வழக்கிற்கு அடிப்படை ஆதாரம் உள்ளது என்றும் அரசியல் பகை காரணமாக இவ்வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுவது சரியல்ல என்றும் தீர்ப்புக் கூறியது. ஏனென்றால் ஜெயலலிதா வீட்டைச் சோதனையிட்ட போது கண்டு பிடிக்கப்பட்ட நகைகள், வெள்ளிச் சாமான்கள், ஏனைய சொத்துக்கள், மற்றும் திருவான்மியூர் தொடங்கில்லபுரம் வரை வாங்கப்பட்டுள்ள பங்களாக்களின் பத்திரங்கள் ஆகியவைகளைக் கணக்கிட்டு எடுக்கப்பட்ட ஆதாரங்களின் பேரில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.


அதைப்போலவே ஜெயலலிதாவின் வங்கிக் கணக்கிலே மூன்று லட்சம் டாலர் வரவு வைக்கப் பட்டது. அன்னியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் இதன் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. டாலரை அனுப்பியது யார் என்றே தனக்குத் தெரியாது என்று ஜெயலலிதா கூறிவிட்டார். அதுகுறித்த வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் மீது ஜெய லலிதா ஜாமீன் மனு தாக்கல் செய்த போது 6-12-1996 அன்று நீதிபதி சிவப்பா அவர்கள் வழங்கிய தீர்ப்பிலே, "வேண்டுமென்றே அரசியலில் காழ்ப்புணர்ச்சியோடு தன் மீது பொய் வழக்குகள் போடப்பட்டிருப்பதாக ஜெயலலிதா தரப்பிலே கூறப்பட்ட வாதத்தை ஏற்க முடியாது. இந்தக் குற்றச்சாட்டுக்கான ஆரம்ப ஆதாரங்கள் உள்ளன. தனி மனித சுதந்திரத்தைவிட கூறப்பட்ட ஊழலைக் கண்டுபிடிப்பது விசாரணையில் ஈடுபட்ட அதிகாரி களுக்கு முக்கியமாகும். அரசுத் தரப்பு ஆவணங் களை ஆராய்ந்த போது இந்த வழக்குகள் உள்நோக் கத்துடன் போடப்படவில்லை என்று தோன்றுகிறது” என்று தீர்ப்பளித்து அதுவும் அனைத்து ஏடுகளிலும் வெளிவந்த செய்தியாகும்.
மைலாப்பூர் கனரா வங்கியிலும் ஸ்ரீராம் நிதி நிறுவனத்திலும் ஜெயலலிதா பெயரில் மூன்று கோடியே 58 இலட்சம் ரூபாய் இருந்தது முடக்கி வைக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலே ஜெயலலிதா தொடுத்த வழக்கின் மீது நீதிபதி ராமமூர்த்தி அளித்த தீர்ப்பிலே, "ஜெயலலிதா வின் சொத்து சம்மந்தப்பட்ட வழக்கு விசாரணை முக்கியக் கட்டத்தில் உள்ளது. ஜெயலலிதா தனது பெயரில் வங்கியில் உள்ள பணம் முறைகேடாகச் சம்பாதிக்கப்பட்டது அல்ல என்று கூறுவதை இப்போது ஏற்க முடியாது” என்று தெரிவித்தார். டான்சி வழக்கிலே 12-9-1995 அன்று ஜெயலலிதா, முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும்போதே, தொடுத்த மேல் முறையீட்டையொட்டி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி. பரூச்சா, பைஜானுதீன், எஸ்.பி. மஜூம்தார் ஆகியோர் தெரிவித்த கருத்து :- "இந்த மேல் முறையீட்டு மனு கால தாமதத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்த உயர்நீதிமன்றம், மேல் முறையீட்டாளர் (ஜெயலலிதா) பதவியிலே தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும் நிலையிலே, இந்த வழக்கில் எந்தவிதமான கால தாமதத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளது. சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவுகளின்படி ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க இந்த வழக்கிலே பூர்வாங்க ஆதாரங்கள் இருப்பதாகவே தெரிகிறது”.


டான்சி வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி 25.11.2003 அன்று அளித்த தீர்ப்பில் – "பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் குறைந்த பட்ச நடத்தை மற்றும் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதை குற்றவியல் சட்டம் வலியுறுத்து கிறது. இத்தகைய நிலையில் உயர் பதவியில் இருப்ப வர்கள் அந்தச் சட்டத்தில் ஒளிந்து கொள்ளாமல் உயர்ந்தபட்ச நாணயத்துடன் டந்து கொள்ள வேண்டும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் நடத்தை நெறிமுறைகளை மதித்து நடக்க வேண்டுமே தவிர குற்றவழக்குகளில் உள்ள நெளிவு சுளிவுகளில் ஒளிந்து தப்பித்துக் கொள்ளக் கூடாது. உயர் பதவியில் இருப்பவர்கள் அரசின் சொத்தைப் பயன்படுத்தி தங்கள் செல்வங்களை அதிகரிப்பது அல்லது அரசுக்குரியதை தங்களுக்குரியதாக மாற்றிக் கொள்வது என்கிற போக்கு அதிகரித்து வருகிறது. அத்தகைய போக்கை நாங்கள் கடுமை யாகக் கண்டிக்கிறோம்”. ஜெயலலிதாவைப் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துத்தான் இது. ஜெயலலிதா மீது தனி நீதிமன்றங்கள் அமைத்து விசாரணை நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று ஜெயலலிதா உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தார். அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி லிபரான் மற்றும் நீதிபதி பத்மநாபன் ஆகியோர் அளித்த தீர்ப்பு :-


"ஜெயலலிதாவின் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் நிறுவப் பட்டிருப்பது சட்ட ரீதியாக முறையானதே. இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. தனி நீதி மன்றங்களை அமைத்து கடந்த 30-4-1997இல் வெளியிடப்பட்ட அரசின் உத்தரவு சட்டத்துக்கு முரணானது அல்ல. ஊழல் சம்பந்தப்பட்ட வழக்கு களில் விசாரணையை நாள்தோறும் நடத்தி முடிப்பதற் காகவே இந்த ஏற்பாடு. அதைவிட இவ்வழக்குகளில் பூர்வாங்க ஆதாரங்கள் காணப்படுவதால் விசார ணையை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.”


அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை முதலமைச்சர் ஜெயலலிதா பதவியில் இருந்தபோது வாங்கியது, மீனா விளம்பர நிறுவனத்திற்குச் சலுகை அளித்தது, கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஓட்டலுக்கு விதிகளை மீறி அனுமதி வழங்கியது, தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியதில் ஊழல் போன்ற ஏழு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட போது தன்னை கைது செய்யாமலிருக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஒட்டுமொத்த முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதி சிவப்பா 11-10-1996இல் அளித்த தீர்ப்பு வருமாறு :-


"கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக் குநரகம் ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ள பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கிலும், மீனா அட்வர்டைசிங் வழக்கிலும் - வழக்குத் தொடர்வதற் கான அடிப்படை இருப்பது தெளிவாகப் புலனாகிறது. ஜெயலலிதா கூறுவது போல பொய்யான குற்றச்சாட்டுகள் மீது வழக்குத் தொடரப்படவில்லை என்பது தெளிவாகிறது” ஸ்பிக் நிறுவனப் பங்குகளை விற்றது குறித்து ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி உயர்நீதிமன்றத்திலே தொடுத்த வழக்கில் நீதிபதி வெங்கடாசலம், 15-12-1997 அன்று அளித்த தீர்ப்பு :-


"எத்தனையோ அரசு நிதி நிறுவனங்கள் பங்கு களை வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கும்போது தனியார் ஒருவருக்கு மட்டும், அப்போதைய அரசு பங்குகளை விட்டுக் கொடுத்தது ஏன் என்ற கேள்விக்கு விடை இல்லை. பங்குகளை வாங்கிக் கொள்வதற்கான உரிமையை ஸ்பிக் நிறுவனத்துக்கு விட்டுக் கொடுக்க நியாயமான காரணமோ, கட்டாயமோ ஏதும் இல்லை. 100 பாய் மதிப்புள்ள சாதாரணப் பொருட்களை வாங்கும்போதும், விற்கும்போதும் கூட இரு தரப்பினரும் பேரம் பேசுவர். ஆனால் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள டிட்கோ பங்கு விற்பனையில் பேரம் பேசுவதற்கான முயற்சி கூட எடுக்கப்படவில்லை. இவ்வளவு பெரிய தொகை சம்மந்தப்பட்ட விஷயத்தை அமைச் சரவையைக் கூட்டி முடிவு செய்திருக்க வேண்டும். அப்போதைய அரசு அதுபோலச் செய்யவில்லை. தனக்கிருந்த அரசு அதிகாரத்தை ஜெயலலிதா தவறாகப் பயன்படுத்தி சட்ட விரோதமாக நடந்து கொண்டுள்ளார். அவரது நடவடிக்கை நீதித் துறைக்கு வேதனை அளிக்கிறது. அரசுக்கு ஏற்பட்ட 28.29 கோடி ரூபாய் நஷ்டத்தை எம்.ஏ. சிதம்பரம், ஏ.சி. முத்தையா, ஜெயலலிதா ஆகியோர் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ ஆறு மாதத்திற்குள் ஈடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.”


ஐதராபாத்தில் உள்ள திராட்சைத் தோட்டத்தில் 1987ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரையி லான காலத்தில் விளைந்த திராட்சை விற்பனை மூலம் 60 இலட்ச ரூபாய் வருமானம் வந்ததாக ஜெயலலிதா கூறினார். ஆனால் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ள காலத்தில் அங்கே திராட்சை விளைச்சலே நடைபெறவில்லை என்று வருமான வரித்துறை சுட்டிக்காட்டி அது பற்றியும் ஒரு வழக்கு!


1993-94ஆம் ஆண்டிற்கு ஜெயலலிதா வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை. இதன் மூலம் ஒரு கோடி ரூபாய் வருமானத்தை மறைத்தார். இந்த வழக்கில் ஜெயலலிதா மீது ஏற்கனவே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இவ்வழக்கு தற்போது நீதிமன்றத்திலே நிலுவையிலே உள்ளது. இந்த வழக்கில் 24-2-2006 அன்று ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதே, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.என். அகர்வால், ஏ.கே. மாத்தூர் ஆகியோர், "“You (Jayalalithaa) are making a mockery of the Judicial Process. How long you can drag the proceedings?”?” (நீதி பரிபாலன முறைகளையே நீங்கள் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
விசாரணை நடைமுறைகளை எவ்வளவு காலத்திற்கு இழுத்தடிப்பீர்கள்) என்று விமர்சனம் செய்யப்பட்ட பெருமையும் ஜெயலலிதாவுக்கு உண்டு. தர்மபுரியில் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் கொளுத்தப்பட்ட வழக்கில் 20.9.2003 அன்று உயர்நீதிமன்ற நீதிபதி கனகராஜ் :-


"வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆளுங் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவ்வழக்கை அனாதைக் குழந்தையைப் போல போலீஸ் அதிகாரிகள் நடத்தியுள்ளனர். போலீஸ் மீதான நம்பிக்கை, நன்மதிப்பைக் குலைக்கும் வகையில் அவர்கள் நடந்துள்ளனர். இந்த இமாயலத் தவறுக் காக உள்துறைச் செயலாளர் மற்றும் சி.பி., சி.ஐ.டி., கூடுதல் எஸ்.பி., ஆகியோரை இந்த நீதிமன்றம் கண்டிக்கின்றது.’’
தற்போது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி உச்ச நீதி மன்றம் அளித்த ஒரு தீர்ப்பில்,
"இந்த வழக்கில் 76 சாட்சிகள் மீண்டும் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே குறுக்கு விசாரணை நடத்தி முடிக்கப்பட்டவர்கள். ஏன் அவர்களை மீண்டும் அழைத்தீர்கள் என்று கேட்டதற்கு, ஜெயலலிதாவின் மூத்த வழக்கறி ஞருக்கு வேறு பல வழக்குகளில் ஆஜராக வேண்டிய பணிகள் இருந்த காரணத்தினால் மீண்டும் அந்தச் சாட்சிகள் திரும்ப அழைக்கப் படுகிறார்கள் என்று காரணம் சொல்லியிருக் கிறார்கள். ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சாதாரணமான ஏதோவொரு காரணத்தைக் கூறி இந்தச் சாட்சிகள் மீண்டும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு ஜெய லலிதாவின் அரசினால் நியமிக்கப்பட்ட அரசாங்க வழக்கறிஞர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அனுமதி கொடுத்திருக்கிறார். இது ஒன்றே எந்த அளவிற்கு நீதி இந்த வழக்கிலே திசை திருப்பப் பட்டுள்ளது என்பது நன்றாக விளங்குகின்றது. புதிய அரசு வழக்கறிஞர் குற்றவாளிகளோடு (ஜெயலலிதா குழுவினரோடு) இணைந்து செயல் படுவது நன்றாகத் தெரிகிறது.


அதன் காரணமாக பொதுவாக நீதி கிடைக்காது என்ற ஒரு நம்பத் தகுந்த ஐயம் மக்கள் மனதிலே எழுந்துள்ளது. நீதி திசை திரும்பிச் செல்வது நிச்சயமாகத் தெரி கின்றது. 313வது விதிப்படி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும்போது, ஜெயலலிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் இருக்க தாக்கல் செய்த தவறான மனுவிற்கு அரசு வழக்கறிஞர் எதிர்ப்பே தெரிவிக்காமல் இருந்து வேடிக்கை த்துக் கொண்டிருந்தது வருந்தத்தக்கது. ஜெயலலிதா நேரில் ஆஜராகாமல் இருக்க விசாரணை நீதிமன்றம் அனுமதி கொடுத்ததற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களுடைய கடுமையான எதிர்ப்பை இந்தத் தீர்ப்பிலே தெரிவித்திருப்பதோடு, "நீங்கள் எவ்வளவு பெரியவராக இருந்த போதிலும், களை விட சட்டம் பெரியது. நேரில் ஆஜராகாமல் இருக்க விதிவிலக்கு கொடுக்கக் கூடிய அளவிற்கு அவரது மனுவிலே காரணங்கள் கூறப்படவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டு மென்றால், நீதியின் பாதையிலே குறுக்கிட்ட செயல்தான் நடைபெற்றுள்ளது” .


நீதிபதிகள் தீர்ப்பின் முடிவில் கூறுகிறார்கள். "“In our view, the petitioner has raised many justifiable and reasonable apprehensions of miscarriage of justice and likelihood of bias, which would require our interference”” அதாவது "எங்களின் கருத்தின்படி; மனுதாரர் (பேராசிரியர்) நியாயப்பூர்வமான, அர்த்தம்
 பொதிந்த சந்தேகங்களை எழுப்பி, அதாவது நீதி திசை திரும்பியும், பாரபட்சமாகவும் செல்வதால் எங்களுடைய குறுக்கீடு அவசியம் தேவை என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளே தெரிவித்திருக்கிறார்கள்.
ஜெயலலிதா மீது உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல வழக்குகளில் தங்கள் கருத்துகளை, தீர்ப்புகளை அவ்வப்போது வழங்கியிருக்கிறார்கள். அதன்பின்னர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், அவர் மீது தண்டனை வழங்கப்பட்ட ஒருசில வழக்குகளை மேல் முறையீடு செய்து, அந்தத் தண்டனையிலிருந்து அவர் விடுதலை பெற்ற சில நிகழ்வுகளும் உண்டு. வேறு நீதிமன்றங்களில், பல நீதிபதிகளால் குற்றஞ்சாட்டப்பட்டு, தண்டனை பெற்ற ஜெயலலிதா, தி.மு. கழகத்தின் மீது அலைக்கற்றை ஊழல் என்றெல்லாம் ஊருக்கு ஊர் சென்று பேசுவது என்பது "சாத்தான் வேதம் ஓதுவதைப் போல்” இருக்கிறதா? இல்லையா? இனியும் அவர் அவ்வாறு பேசுவதை நிறுத்திக் கொள்ளாவிட்டால், இந்த வழக்குகளைப் பற்றிய முழு விவரங்களும், அந்த வழக்குகள் விசாரணை களின் போது என்னென்ன நடைபெற்றது என்ற விவரங்களும் தொடர்ச்சியாக வெளியிடப்படும். எனவே உடன்பிறப்பே, ஜெயலலிதா மீது நீதியர சர்கள் கூறிய இந்த விமர்சனங்களையெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெளிவாகக் கூறி நினைவூட்ட வேண்டிய கடமை உனக்குண்டு. அந்தக் கடமையினை நீ செய்வதற்காகவே இத்தனை விவரங்களையும் திரட்டித் தந்துள்ளேன்’’என்று தெரிவித்துள்ளார்.

ad

ad