புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

வெட்டி வீழ்த்திய மரத்தின்கீழ் சிக்கி பொரளை OIC பலி

ஹங்வெல்ல, துன்னானயில் சம்பவம்
தொழிற்சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
சம்பவத்தின் பின்னணியில் சில சதிகாரக் கும்பல்; ஜெனீவா அமர்வை இலக்கு வைத்து குழப்ப முயற்சி
எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட
ஆர்ப்பாட்டக்காரர்கள் வெட்டி வீழ்த்திய மரத்தில் சிக்கி பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் சிறிவர்தன நேற்று உயிரிழந்துள்ளார்.
ஹங்வெல்ல துன்னான பிரதேசத்தில் நேற்றுக் காலை 6.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு தாக்குதல்களில் ஏழு பொலிஸார் காயமடைந்துள்ளதுடன் பொலிஸ் வாகனத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொது மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் வெட்டி வீழ்த்திய மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக விஷேட கடமையின் நிமிர்த்தம் பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அங்கு சென்றபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டங்கள் நடைபெறுகின்ற நிலையில் சட்டத்தையும் ஒழுங்கையும் சீர்குலைத்து பொலிஸாருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்குடன் சிலர் பின்னணியில் இருந்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த சம்பவம் எதேர்ச்சையாக நடைபெற்ற ஒரு சம்பவம் அல்ல மாறாக திட்டமிட்ட அடிப்படையில் இடம்பெற்ற சம்பவம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:-
ஹங்வெல்ல, துன்னான பிரதேசத்தில் இயங்கி வரும் இறப்பர் தொழிற்சாலைக்கு எதிராக நேற்று முன்தினம் காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் மாலை ஹைலெவல் வீதி, பஹத்கம மற்றும் மீப்பே வரையிலான வீதியை இடை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் ஏழு கிலோ மீற்றர் தூர பிரதேசத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் இதனால் அந்த பிரதேசத்தை ஊடறுத்து செல்லும் பொது மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுக்கும் நிலை ஏற்பட்டது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டதை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து கலைத்து செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்தபோது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதை அடுத்து பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டதுடன் தண்ணீரை பீச்சியடைத்து கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்போது பொலிஸாரை இலக்கு வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீச்சு நடத்தியுள்ளனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களால் மரங்கள் வெட்டப்பட்டு வீதியெங்கும் குறுக்காக வைக்கப்பட்டு வாகனங்கள் செல்வதை தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பாதுக்கை பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு மேலதிகமாக ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விஷேட கடமைகளுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் சிறிவர்தனவும் அடங்குவார்.
வீதிகளில் வெட்டி வீழ்த்திய மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ஆர்ப்பாட்டக்காரர்களால் திட்டமிட்ட அடிப்படையில் பாதி வெட்டி வைக்கப்பட்டிருந்த மரத்தை வெட்டி, தள்ளி வீழ்த்தியதில் மரம் பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மீது வீழ்ந்ததில் படுகாயமடைந்த அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் உயிரிழந்துள்ளார். யுத்தத்திற்கு பின்னர் கொல்லப்பட்ட ஆறாவது பொலிஸ் அதிகாரி இவராவார்.
இந்தச் சம்பவம் அந்தப் பிரதேசத்தில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதனை அடுத்து நிலைமையை கட்டுப்படுத்தும் பொருட்டு 1500 ற்கும் மேற்பட்ட பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் விஷேட பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சம்பவத்தை அடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன் இது தொடர்பிலான விரிவான விசாரணை நடத்தும் பொறுப்பை குற்றப் புலனாய்வு பிரிவு (சி.ஐ.டி)பொலிஸாரிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து நேற்றுப் பிற்பகல் விஷேட சி. ஐ. டி குழு அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.
சம்பவம் தொடர்பில் 47 சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார் வாக்கு மூலங்களை பதித்த பின்னர் மீண்டும் விடுவித்துள்ளனர். இவர்களில் 40 ஆண்களும் 7 பெண்களும் அடங்குவர்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் பொலிஸாருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்குடன் சில சக்திகள், குழுவாக பின்னணியில் இருந்து செயற்பட்டு வருகின்றமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சட்டத்தையும், ஒழுங்கையும் குழப்பும் நோக்குடன் திட்டமிட்ட அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது போன்ற சந்தர்ப்பங்களில் சட்டத்தை அதிகாரத்தை பயன்படுத்த பொலிஸாருக்கு அனுமதி இருக்கின்ற போதிலும் மிகவும் குறைந்த பலத்தைப் பயன்படுத்தியே நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்ததாக தெரிவித்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள், பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், அது தொடர்பில் விஷேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.

ad

ad