புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2014

உலகக் கிண்ண சாதனை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு: வீதியெங்கும் மக்கள் வெள்ளம் ; தேசியக்கொடி ஏந்தி மகிழ்ச்சி ஆரவாரம்

குமார் சங்கக்கார

ஒருநாள் போட்டிகளில் மட்டுமன்றி டெஸ்ட் போட்டிகளிலும் நாம் கவனம் செலுத்துவோம்

லசித் மாலிங்க

இது நல்லதோர் ஆரம்பம் அடுத்து வரும் போட்டிகளிலும் நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுப்போம்

மஹேல ஜயவர்தன

20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்தும் நாட்டுக்கு கிரிக்கெட் மூலம் புகழ் ஈட்டிக் கொடுப்பேன்
பங்களாதேஷில் 20க்கு 20ஓவர் உலக கிண்ணப் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்த இலங்கை அணி வீரர்கள் நேற்று பி.ப. 3.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய போது அவர்களுக்கு மலர்மாலை அணிவித்து மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிய பின்னர் கிரிக்கட் அணி வீரர்கள் திறந்த இரட்டைத்தட்டு பஸ்ஸில் விமான நிலையத்தில் இருந்து வாகன பவனியில் கட்டுநாயக்க, கொழும்பு பழைய வீதியின் ஊடாக அழைத்து வரப்பட்ட போது பாதையின் இரு மருங்கிலும் குழுமியிருந்த நூற்றுக்கணக்கான
மக்கள் பட்டாசுகளை கொளுத்தி தேசியக்கொடியை ஏந்தி, மேளவாத்தியங்களுடன் மகிழ்ச்சியான வரவேற்பை வீதியில் இருமருங்கிலும் இருந்தவாறு வழங்கினார்கள்.
நேற்றைய தினம் இலங்கை வீரர்களை கெளரவிக்கும் முகமாக பட்டாசுகள் ஆயிரக்கணக்கில் வெடிக்கப்பட்டதனால் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் ஒருவர் புத்தாண்டு பண்டிகைக்கு தாங்கள் தயாரித்த பட்டாசுகள் முடிவடைந்துவிடும் என்றும் இதனால் அடுத்த ஓரிரு தினங்களுக்குள் பட்டாசுகளை தயாரிக்க வேண்டியேற்படும் என்றும் அந்தளவுக்கு கொழும்பு கட்டுநாயக்க பழைய வீதியில் பட்டாசு சத்தம் காதை அடைக்கச் செய்தது.
இலங்கை அணி வீரர்களை அழைத்து வந்த வாகனப் பேரணி கட்டுநாயக்க, சீதுவை, ஜா-எல, வத்தளை, பொரளை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி ஊடாக காலிமுகத் திடலை அடைந்தவுடன் அவர்களுக்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது. அவர்களுடன் தொடர்ந்து சென்று கொண்டிருந்த தினகரன் நிருபர்கள் தெரிவித்தனர்.
சிறுவர் முதல் வயோதிபர் வரையில் முகத்தில் மகிழ்ச்சியுடன் இலங்கை அணி வீரர்களை, வீதியின் இருமருங்கிலும் நின்று வரவேற்றனர். விமான நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய இலங்கை அணியின் கப்டன் லசித் மாலிங்க “நாங்கள் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் ஒற்றுமையாக விளையாடியதனால் இன்று இந்த உலக சாதனையை நிலைநாட்ட முடிந்தது” என மகிழ்ச்சி தெரிவித்தார்.
இலங்கை அணியின் சிரேஷ்ட உறுப்பினர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, தினேஷ் சந்திமால், அஞ்சலோ மெத்தியூஸ், திலகரட்ண டில்சான், இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர்களும் கலந்து கொண்டார்கள்.
“இந்தியாவுடனான இறுதி ஆட்டத்தில் அர்ப்பணிப்புடன் விளையாடியதனால் தான் இன்று நாங்கள் சாதனை வீரர்களாக மாறியிருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
இது நல்லதோர் ஆரம்பம் என்று தெரிவித்த லசித் மாலிங்க, இதுபோன்று ஏனைய கிரிக்கட் போட்டிகளிலும் நாம் சிறப்பாக விளையாடி நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுக்க திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என்றும் கூறினார்.
குமார் சங்கக்கார கருத்து தெரிவிக்கையில், 2015ம் ஆண்டில் அவுஸ்திரேலியா, நியுசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள உலககிண்ண 50 ஓவர் கிரிக்கட் போட்டிகளில் இத்தகைய சாதனைகளை மீண்டுமொரு தடவை செய்வதற்காக எமது அணியைச் சேர்ந்தவர்கள் பயிற்சி பெறுவதற்கு தங்களை தயாராக்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஒருநாள் போட்டிகள் மட்டுமன்றி நாம் டெஸ்ட் போட்டிகளிலும் எதிர்கால த்தில் கூடுதல் கவனத்தை செலுத்தவுள்ள தாகவும் சங்கக்கார தெரிவித்தார்.
எனது தேக ஆரோக்கியம் இடமளிக்கும் பட்சத்தில் அடுத்த உலகக்கிண்ணப் போட்டியிலும் நாம் இலங்கையின் சார்பில் விளையாட தயாராக இருப்பதாகவும் குமார் சங்கக்கார மேலும் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த மஹேல ஜயவர்தன, 20ஓவர் போட்டிகளில் இருந்து தாம் ஓய்வு பெறுவதென்ற முடிவை கிரிக்கட் சபைக்கு அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய 20 ஓவர் உலக சம்பியன் அணியின் தலைவர் லசித் மாலிங்க, முதலில் தன்னுடைய மகளை தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொள்ளும் காட்சியைப் பார்த்த எங்கள் நாட்டின் கிரிக்கட் ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள்.
அவரைப் போன்றே இந்த இறுதிப் போட்டியில் ஆகக்கூடுதலான ஓட்டங்களை எடுத்த குமார் சங்கக்காரவும் தன்னுடைய இரட்டை பிள்ளைகளில் ஒரு பெண் பிள்ளையை தூக்கி முத்தமிட்ட போது அந்த சிறுமி வெட்கத்தினால் ஒருவரையும் பார்க்காமல் தனது தந்தையின் கழுத்தை கட்டிப்பிடித்துக் கொண்ட காட்சியையும் பலரும் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்கள்.
திறந்த பஸ் வண்டி மெதுவாக பயணித்துக் கொண்டிருந்த போது அதில் அமர்ந்திருந்த லசித் மாலிங்கவின் கையில் உலக வெற்றிக் கிண்ணம் கம்பீரமாக காட்சியளித்தது.
அதனைப் பார்த்து ஊடகவியலாளர் ஒருவர் வெற்றிக் கிண்ணத்தை எத்தனை தடவைகள் முத்தமிட்டீர்கள் என்று கேட்ட போது, அவர் சிரித்துக் கொண்டே அந்த எண்ணிக்கை எனக்கு தெரியாது. நான் மட்டுமல்ல எனது அணியைச் சேர்ந்த அனைத்து வீரர்களும் எமது பயிற்றுவிப்பாளரும் எமது அணியினரும் அதனை நெஞ்சோடு வைத்துக் கொண்டு பல தடவைகள் முத்தமிட்டார்கள்.
18 வருட இடைவெளிக்குப் பின்னர் நாம் உலக சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியிருக்கிறோம். இது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. இந்த அணிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்ததை நான் பெருமையாக கருதுகிறேன் என்று லசித் மாலிங்க கூறினார்.
இன்னுமொரு நிருபர், திலகரட்ன தில்சானைப் பார்த்து; இப்போது மழை பெய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். அதற்கு தில்சான் சிரித்துக் கொண்டு பதிலளிக்கையில்; கடந்த தடவை நாம் தோல்வியடைந்து இங்கு வந்த போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் எங்கள் ரசிகர்கள் எங்களைப் பாராட்டினார்கள். இந்தத் தடவை மழை பெய்தாலும் கொட்டும் மழையிலும் எமது இரசிகர்களை சந்திக்க உள்ளோம் என்றார்.

ad

ad