சனி, ஏப்ரல் 05, 2014இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம் : இலங்கை அணியின் சாதனைகள்

 
இருபது ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2007ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வருகிறது. தற்போது நடைபெறுவது 5ஆவது இருபதுக்கு -20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியாகும்.
 
இதுவரை இடம்பெற்ற இருபதுக்கு-20 உலகக் கிண்ணத்தை முறையே இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய அணிகள் கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில் இந்த இருபதுக்கு -20 உலகக் கிண்ண போட்டிகளில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அந்த வகையில் பல சாதனைகளுக்கு சொந்தமாக இலங்கை அணியும் அணி வீரர்களும் காணப்படுகின்றனர்.
 
இதன்படி நோக்கும் போது இருபது ஓவர் உலகக் கிண்ண போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர், அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமையை இலங்கை அணி வீரர்களே பெற்றுள்ளனர்.
 
அந்த வகையில் மஹேல ஜெயவர்தன தற்போது 4ஆவது உலகக் கிண்ண போட்டியில் விளையாடி வருகிறார். 
 
இதுவரை 30 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 992 ஓட்டங்களை குவித்துள்ளார். இதுவே இருபதுக்கு -20 உலகக் கிண்ண போட்டியில்  ஒரு வீரரின் அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும். இதில் ஒரு சதம், 6 அரைசதங்கள் அடங்குகின்றன.
 
இதற்கு அடுத்தபடியாக மேற்கிந்தியத்தீவுகளின் கிறிஸ் கெயில் 23 போட்டிகளில் பங்கேற்று 807 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் ஒரு சதம், 7 அரைச்சதங்கள் அடங்கும்.
 
இதேவேளை, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இலங்கையின் லசித் மலிங்க முதலிடத்திலுள்ளார். 30 போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
 
அவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சயிட் அஜ்மல் உள்ளார். இவர் 23 போட்டிகளில் பங்கேற்று 36 விக்கெட்டுகளை எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.
 
அணிகளின் சாதனையிலும் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற இருபதுக்கு-20 உலகக் கிண்ணப் போட்டியில் அதிகபட்சமாக அந்த 6 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இச் சாதனையை கென்யா அணிக்கு எதிராக இலங்கை அணி படைத்தது.
 
இருபதுக்கு -20 உலகக் கிண்ண போட்டியில்  மிகக் குறைந்த ஓட்டங்கள் எடுத்த மோசமான சாதனை இந்த உலகக் கிண்ணத்தில் தான் படைக்கப்பட்டுள்ளது. அதனையும் இலங்கை அணியே நிகழ்த்தியிருந்தது.
 
நெதர்லாந்து அணி இலங்கை அணிக்கு எதிராக 10.3 ஓவர்களில் 39 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததே மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை ஆகும்.
 
இதற்கு அடுத்தபடியாக இலங்கைக்கு எதிராக நியூஸிலாந்து 15.3 ஓவர்களில் 60 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தமையாகும்.