புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஏப்., 2014


இந்தியாவை தீர்மானிக்கும் 25 பிரபலங்கள் -ஒரு  தேர்தல் கால சிறப்பு கட்டுரை 
அரசியல் எவ்வளவு கீழானதாக மாறிப்போனாலும், தேர்தல்தான் ஜனநாயகத்துக்கு உயிர் செலுத்தும். அம்பானிக்கும் ஒரே ஓட்டு; அய்யாசாமிக்கும் ஒரே ஓட்டு. வாக்குச்சாவடிக்கு வெளியே இவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தாலும், ஓட்டின்
மரியாதை ஒன்றுதான். அதனால்தான் அதிகார மமதை கொண்டவர்கள்கூட சந்து பொந்துகளுக்கு வந்து வாக்குப் பிச்சை கேட்கிறார்கள்.
இந்தியா எனப்படும் பரந்த பரப்பில், சமீப 'தெலங்கானா’வையும் சேர்த்து 29 மாநிலங்கள். ஆனால், 543 உறுப்பினர்கள் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தை ஆறு பெரியண்ணன்கள்தான் ஆட்சி செலுத்துகிறார்கள்.
ஆறு பெரியண்ணன்கள்!
பிரதமர்களை தனது உதிரத்தில் உற்பத்தி செய்யும் பிரதேசம், உத்தரப்பிரதேசம். நம்மைவிட இரண்டு மடங்கு பெரியது.
80 எம்.பி-க்கள் இந்த மாநிலத்தில். இதை மொத்தமாகக் கைப்பற்றித்தான் காங்கிரஸ் உயிர் வாழ்ந்தது; முலாயம் சிங், மாயாவதி வந்த பிறகுதான் அதில் மண் விழுந்தது. இப்போது அமித்ஷா ஆபரேஷன்களில் கதிகலங்கி... 52 தொகுதிகளை பா.ஜ.க. பிடிக்கும் என எல்லா கருத்துக் கணிப்புகளும் சொல்கின்றன. அதனால்தான் குஜராத் மோடி, இங்குள்ள வாரணாசியில் பிடிவாதமாக நிற்கிறார். உ.பி. ராசி, பிரதமர் ஆக்கும் என்ற நம்பிக்கையில், ராகுலும் இங்குதான் போட்டியிடுகிறார்.
உ.பி. (80), மகாராஷ்டிரா (48), ஆந்திரா (42), மேற்கு வங்கம் (42), பீகார் (40), தமிழ்நாடு (39)... ஆகிய 6 மாநிலங்களில் உள்ள தொகுதிகளைக் கூட்டிப் பார்த்தால், 291 எம்.பி-க்கள். மொத்த இந்தியா அளிக்கும் எம்.பி-க்களில் இது சரிபாதியைவிட அதிகம். இந்த ஆறு மாநிலங்களில் ஒரு தேசியக் கட்சி, ஒழுங்காகக் கட்சி நடத்தினாலே போதும்... மத்தியில் ஆட்சியைப் பிடித்துவிடலாம்!
முலாயம், மாயாவதி, காங்கிரஸ், பா.ஜ.க. என நான்கு முனைப் போட்டி உ.பி-யில். இதில் காங்கிரஸ் பின்தங்கியே இருக்கிறது. மற்ற இருவரையும் மோடி, முந்திக்கொண்டு இருக்கிறார். மகாராஷ்டிராவில் காங்கிரஸுடன் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டு. பா.ஜ.க-வுடன் சிவசேனா கூட்டு. பால் தாக்கரே மகன் உத்தவ் தாக்கரேவும், மருமகன் ராஜ் தாக்கரேவும் தனித்தனிக் கட்சிகள் நடத்தினாலும் பா.ஜ.க-வை ஆதரிப்பதில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆக, யார் வென்றாலும் லாபம் பா.ஜ.க-வுக்குத்தான்.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸும் பா.ஜ.க-வும் பின்தங்கியே இருக்கின்றன. அங்கே திரிணாமுல் காங்கிரஸ் மம்தாவுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மட்டுமே போட்டி. மம்தாவுடன் கூட்டுச்சேர மோடி நினைத்தார். ஆனால், சிறுபான்மையினர் வாக்கு போய்விடும் என்பதால் மம்தா மறுத்தார். ஆனாலும் இவரை மோடி விமர்சிக்கவில்லை. சகோதர சகோதரிகளாகவே பாவித்துக்கொள்கிறார்கள். ஏற்கெனவே பா.ஜ.க. கூட்டணியில் மம்தா இருந்தவர் என்பதாலும், அவர் காங்கிரஸுடன் சேர மாட்டார் என்ற நம்பிக்கையிலும் மோடி இருக்கிறார்.
பீகார் மாநிலத்தில், லாலுவுடன் கூட்டுசேர்ந்து போராடுகிறது காங்கிரஸ். 11 சீட்டை அவரிடம் இருந்து வாங்குவதற்குள், 'போதும் போதும்’ என்றாகிவிட்டது காங்கிரஸுக்கு. இனி ஜெயிக்க வேறு வேண்டும். நம் ஊரைப் போலவே லாலுவும் நிதிஷ்குமாரும் மாறி மாறி ஆண்டு வரும் மாநிலம் பீகார். பா.ஜ.க. கூட்டணியில் இருந்த நிதிஷ்குமார், மோடியைப் பிடிக்காமல் கூட்டணியைவிட்டு விலகினார். காங்கிரஸ் தன்னைக் கடத்திச் செல்லும் என்று நினைத்தார். ஆனால், அவரது எதிரியான லாலுவோடு அவர்கள் சேர்ந்துவிட்டார்கள். மோடியாவது தன்னைச் சமாதானம் செய்வார் என்று நினைத்தார். அதுவும் நடக்கவில்லை. 'மோடி, பிரதமர் ஆக முடியாது. ஜனாதிபதி மாளிகை படத்துக்கு முன்னால் வேண்டுமானால் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளலாம்’ என்று நிதிஷ் பிரசாரம் செய்து வருகிறார்.
அங்கு லாலு, நிதிஷை விட்டால் யார் இருக்கிறார்கள் என்று தேடிய மோடி, பஸ்வானைப் பிடித்தார். ஒருகாலத்தில் நிதிஷ் விசுவாசியாக இருந்து, இன்று மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவராக இருக்கும் உபேந்திர குஷ்வஹாவையும் சேர்த்துக்கொண்டார். பீகாரில் ஒரு மோடி இருக்கிறார். அவர் பெயர் சுசில்குமார் மோடி. அவர்தான் இந்த வேலைகள் அனைத்தையும் பார்க்கிறார்.
ஆந்திராவை தெலங்கானா, சீமாந்திரா என இரண்டாகப் பிரித்து, தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக்கொண்டது காங்கிரஸ். தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய காங்கிரஸை, தெலங்கானா மக்கள் ஆதரிப்பார்கள் என்று ராகுல் நினைக்கிறார். ஆனால், இதற்காகத் தொடர்ச்சியாகப் போராடிய 'தெலங்கானா ராஷ்ட்ரீய சமீதி’ சந்திரசேகர ராவ் அந்த வாக்குகளை அள்ளிக்கொள்வார். இவரை காங்கிரஸுடன் இணைக்க முயற்சித்தார்கள். முடியவில்லை என்றதும் அவரோடு இருந்த நடிகை விஜயசாந்தியை இழுத்துப் போய்விட்டது காங்கிரஸ். பா.ஜ.க., சாமர்த்தியமாக இரண்டு மாநிலங்களிலும் செல்வாக்குக்கொண்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தனியாக நிற்கிறார். இவர் வென்றாலும் காங்கிரஸை ஆதரிக்க மாட்டார் என்பது இவர்களது திருப்தி.
தமிழ்நாட்டின் கதை அனைவரும் அறிந்ததுதான். ஜெயலலிதா, கருணாநிதியின் ஆளுகையில் மாறி மாறி இருக்கும் தீவு இது. இங்கு காங்கிரஸ் தனித்துவிடப்பட்டுள்ளது. தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்துள்ளது பா.ஜ.க. தங்களுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதைவிட தங்கள் எதிரியான காங்கிரஸுக்கு எந்தத் தொகுதியும் கிடைக்காது என்ற சந்தோஷம் அவர்களுக்கு. ஜெயலலிதா, கருணாநிதி யார் வென்றாலும் தங்களை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை வேறு!
இப்படி 29 சதவிகித எம்.பி-க்கள் கொண்ட இந்த ஆறு மாநிலங்களில் இருந்து காங்கிரஸும் பா.ஜ.க-வும் எத்தனை இடங்களைப் பிடிப்பார்கள் என்பதே முக்கியம். உ.பி, மகாராஷ்டிரா, ஆந்திரா... மூன்றை பா.ஜ.க-வும், உ.பி., பீகார், மகாராஷ்டிரா ஆகிய மூன்றை காங்கிரஸும் மலை போல நம்பி இருக்கின்றன. மேற்கு வங்கத்தை இருவருமே மறந்து விட்டார்கள். தமிழ்நாட்டை காங்கிரஸ் நினைப்பதே இல்லை!
ஆறு சின்னண்ணன்கள்!
அந்த ஆறு பெரிய அண்ணன்களுக்கு அடுத்த சின்ன அண்ணன்கள் ஆறு பேர். ஆட்சிக் கட்டிலை எட்டிப் பிடிக்கப் போகிறவர்களின் காலைப் பிடித்துத் தூக்கிவிடவேண்டிய மாநிலங்கள் மத்தியப்பிரதேசம் (29), கர்நாடகம் (28), குஜராத் (26), ராஜஸ்தான் (25), ஒடிசா (21), கேரளா (20) ஆகியவை.
அடுத்து பா.ஜ.க. ஆட்சிதான் என்று அந்தக் கட்சியின் தலைவர்கள் சொல்வது, மத்தியப்பிரதேசம், கர்நாடகம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களை வைத்துத்தான். இதில் கர்நாடகம் நீங்கலாக மற்ற மூன்றிலும் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. கர்நாடகாவில் கட்சியை இரண்டாக உடைத்த எடியூரப்பா மீண்டும் உள்ளே வந்துவிட்டார்.
எடியூரப்பா உள்ளே வருவார் என்று கர்நாடகா காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லை. குஜராத்தில் மோடிக்கு எதிராக இப்போதுதான் 'விகாஸ் கோஜ்’ பாத யாத்திரையைத் தொடங்கியுள்ளது அந்த மாநில காங்கிரஸ். ஆதித்திய ராஜே சிந்தியாவை மட்டுமே மத்தியப்பிரதேச காங்கிரஸ் நம்புகிறது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு சமீபத்தில்தான் தோற்கடிக்கப் பட்டது. எனவே, இந்த மாநிலங்களில் மூச்சுத் திணறுகிறது காங்கிரஸ்.
இந்தப் பட்டியலில் காங்கிரஸுக்கு நம்பிக்கை தருவது கேரளா மட்டும்தான். மார்க்சிஸ்ட்டும் காங்கிரஸும் மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கும் மாநிலம் இது. அடுத்த பெரிய கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவும் காங்கிரஸுக்கு இருக்கிறது. எனவே, தெம்போடு இருக்கிறது காங்கிரஸ். இங்கு பா.ஜ.க. இல்லை என்பது காங்கிரஸுக்குக் கூடுதல் மகிழ்ச்சி. மாதா அமிர்தானந்த மயி பிறந்த நாளில் கலந்துகொண்டு எப்படியாவது அங்கும் அக்கவுன்ட் திறந்துவிடப் பார்க்கிறது பா.ஜ.க.
ஒடிசாவைப் பொறுத்தவரை அங்கு எப்போதும் பட்நாயக் ஆட்சிதான். பிஜு பட்நாயக் மகன் நவீன் பட்நாயக்தான் எப்போதும் வெல்வார். காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணியின் பலம் இவர்.
இந்த ஆறு மாநிலங்களின் மொத்த தொகுதிகள் 149.
ஆபத்பாந்தவன்கள்!
ஐந்தாறு சீட்டுகளில் ஆட்சி ஊசலாடும் போது, காப்பாற்றும் மாநிலங்கள் என்று இவற்றைச் சொல்லலாம்.
அசாம் (14), ஜார்கண்ட் (14), பஞ்சாப் (13), சட்டீஸ்கர் (11), ஹரியானா (10), டெல்லியும் ஜம்மு-காஷ்மீரும் தலா 7 என மொத்தம் 76 தொகுதிகள் இந்தச் சிறுபான்மைக் கணக்குக்கு!
டெல்லியை பா.ஜ.க-வும் ஆம் ஆத்மியும் பங்கு போட்டுக்கொள்ளும். காங்கிரஸைக் காப்பாற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி, ஜம்மு- காஷ்மீரில் இருக்கிறது. பா.ஜ.க-வைக் காப்பாற்றும் சிரோன்மணி அகாலிதளம் பஞ்சாபில் இருக் கிறது. இரண்டுக்குள்ளும் வராத பிரபுல்ல குமார் மகந்தாவின் அசாம் கன பரிஷத், அசாமில் வேர் கொண்டுள்ளது. சிபு சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸை ஆதரிக்கலாம். ஹரியானாவில் இப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் ஓம்பிரகாஷ் சௌதாலாவின் ஹரியானா ஜன்தி காங்கிரஸ் கட்சிக்கு மிரட்டல் விடுத்துக்கொண்டே இருக்கும். சட்டீஸ்கரில் தொடர்ந்து பா.ஜ.க. ஆட்சி!
இவை போக உத்தரகாண்ட் முதல் புதுச்சேரி வரையுள்ள 16 குட்டி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து மொத்தமே 27 எம்.பி-க்கள்தான் தேர்வு செய்யப்படுவார்கள். ஆக, இந்தக் கணக்கின்படி வரும் 543-ல் 272-ஐ இழுப்பதுதான் இந்தியத் தேர்தல். இதில் 272 ... என்று இலக்கு அறிவித்துள்ளார் ராஜ்நாத் சிங். அதை நம்புகிறார் நரேந்திர மோடி. ஆனால், ராகுல் எதையும் சொல்லிக்கொள்ளவில்லை. இந்தியாவில் மிக அதிகமாக அலையும் இந்த மூன்று பேருமே விருச்சிக ராசிக்காரர்கள். யாருக்கு யோகம் என்று ஜாதகம் அல்ல... ஜனங்கள் சொல்ல, மே 16 வரை இடைவேளை!

ad

ad