புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2014


ஊடக கொலையாளிகள் சிக்காத நாடுகளின் பட்டியலில் 4வது இடத்தில் இலங்கை-பி பி சி 
இலங்கையில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் அதற்கு முன்னர் பிரதமராகவும் ஆட்சியில் இருந்துள்ள காலத்தில் 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், கொலையாளிகள் சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருக்கின்ற நிலைமையை மாற்றுவதற்கு அரசாங்கம் எந்தவிதமான அரசியல் ரீதியான விருப்பத்தையும் வெளிப்படுத்தவில்லை என்று சிபிஜே என்ற ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு (CPJ) சுட்டிக்காட்டியுள்ளது.
ஊடகவியலாளர்கள் பலர் கொலையுண்டும் வழக்கு விசாரணைகள் முழுமையாக தீர்க்கப்படாத நாடுகளின் பட்டியலில் இராக், சோமாலியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் இலங்கை உள்ளதாக சிபிஜே பட்டியல் வெளியிட்டுள்ளது.
கடுமையான மோதல்கள் நடந்துவரும் சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் பாகிஸ்தான், ரஷ்யா, நைஜீரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் இலங்கைக்கு அடுத்த படியாக முதல் 13 நாடுகளின் பட்டியலில் அடங்குகின்றன.
கடந்த 10 ஆண்டு காலம் கடந்துள்ள ஐயாத்துரை நடேசனின் படுகொலைச் சம்பவம் முதற்கொண்டு 2009-ம் ஆண்டில் நடந்த லசந்த விக்ரமதுங்க படுகொலை வரை பல ஊடகவியலாளர்களின் கொலைகளின் பின்னணியில் அரசாங்கமும், இராணுவமுமே இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் சிபிஜே சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் சிக்காத நிலைமை உள்ளமையே பெருமளவிலான ஊடகவியலாளர்கள் நாடு கடந்து வாழ்வதற்குக் காரணம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் யுத்தம் முடிந்து 5 ஆண்டுகள் கடந்துள்ள சூழ்நிலையிலும் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை என்று ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக அரசாங்கத்தை விமர்சிக்கக்கூடிய அல்லது தமிழ் மக்கள், சார்ந்து எழுதக்கூடிய ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்ற அல்லது அச்சுறுத்தப்படுகின்ற சூழ்நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றார் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த அ. நிக்ஸன்.
புலிகளின் காலத்துக்குப் பொறுப்பேற்க முடியாது
கடந்த 10 ஆண்டுகளில் 9 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும் ஒருவர் கூட சட்டத்தின் முன்னால் தண்டனை பெறவில்லையே என்ற தகவலைச் சுட்டிக்காட்டி பிபிசி  இலங்கை காவல்துறையிடம் வினவியது.
கடந்த 10 ஆண்டுகாலத்தில் விடுதலைப் புலிகளுடனான 6 ஆண்டு காலத்தையும் உள்ளடக்க வேண்டும். அந்தக் காலத்தில் அவர்கள் தான் பெரும்பாலும் இந்தக் கொலைகளை செய்திருக்கிறார்கள் என்று பதிலளித்தார் காவல்துறைப் பேச்சாளர் எஸ்எஸ்பி அஜித் ரோஹண.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலும் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பிலும் காவல்துறை தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
யுத்தகாலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளால் கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் எம்மால் பதில் கூறமுடியாது. அவற்றுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய நபர்கள் இப்போது இந்த உலகில் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போயிருக்கக்கூடும். ஆனால் நாங்கள் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம் என்றும் அஜித் ரோஹண கூறினார்.
சிபிஜே அமைப்பின் தகவலின்படி, பல ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பில் இராணுவத்தின் மீதும் அரசாங்கத்தின் மீதும் தான் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது என்று தமிழோசை சுட்டிக்காட்டியது.
விடுதலைப்புலிகள் பல கொலைகளை செய்துவிட்டு இராணுவம் அல்லது அரசாங்கத்தின் மீது அந்தப் பழிகளைப் போட்டு பிரச்சாரம் செய்திருந்தனர். இந்த அமைப்பும் அந்த குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டிருக்கிறது' என்றார் காவல்துறை பேச்சாளர்.
தனிப்பட்ட காரணங்களுக்காக ஊடகவியலாளர்கள் தாக்கப்பட, அச்சுறுத்தப்பட அல்லது கொலைசெய்யப்பட வாய்ப்பிருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டாலும் ஊடகத் தொழில் காரணமாக ஊடகவியலாளர்களுக்கு அப்படியான அச்சுறுத்தல்கள் இலங்கையில் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் காவல்துறை பேச்சாளர் கூறினார்.
இலங்கையில் ஊடக சுதந்திரம் உயர்ந்த அளவில் பேணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால், சர்வதேச அழுத்தத்தின் காரணமாக இலங்கையில் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் நிறுத்தப்பட்டுள்ள போதிலும், ஊடக நிறுவனங்களும் தனித்தனியான ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்படுவது இன்னும் நிறுத்தப்படவில்லை என்று ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் ஆசியாவுக்கான இணைப்பதிகாரி பாப் டியேட்ஸ் பிபிசியிடம் கூறினார்.

ad

ad