புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014




ந்தியப் பிரதமர்களில் 5 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவுசெய்த பிறகு, மீண்டும் தனது கட்சியை வெற்றி பெறச் செய்து இரண்டாம் முறையாகப் பிரதமர் பொறுப்பை ஏற்றவர் என்ற பெருமை, டாக்டர் மன்மோகன் சிங்கிற்குரியது.
2009-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கருத்து கணிப்புகளை மீறி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் சொந்த பலமும் நாடாளுமன்றத்தில் உயர்ந்தது. 2004-ஆம் ஆண்டு முதன் முறை ஆட்சி அமைந்தபோது உடனிருந்த இடதுசாரி கட்சிகள், ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் இந்த முறை காங்கிரஸ் அணியில் இல்லை. தி.மு.க, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் நீடித்தன. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரசும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றது.

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது அரசு திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றிய அதே வேளையில், பலவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளானது. எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத் திற்குள்ளானது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் நடத்தமுடியாத நிலை பல முறை ஏற்பட்டது. கூட்டணிக் கட்சிகளே அதிருப்தியடைந்து வெளியேறும் சூழல்களும் ஏற்பட்டன. இவற்றிற்கிடையே பல திட்டங் களும் கொண்டு வரப்பட்டன.

கல்வி உரிமைச் சட்டம்

இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகின்றபடி நாட்டில் உள்ள 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வியை உரிமையாக்கும் சட்டம் 2010-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. கல்வி உரிமைக்கான இச்சட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் தங்கள் குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் எந்த நிலையில் இருந்தாலும் பள்ளிக்கூடத்தில் படிக்க முடியும் என்ற நிலை உருவானது. 

லோக்பால் சட்டம்


ஜனநாயக முறையும் பல கட்சி அரசியலை யும் கொண்டுள்ள இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும் அம்சங்களில் ஊழலும் முக்கியமானது. பிரதமரில் தொடங்கி அமைச்சர்கள், அதிகாரிகள் என அரசாங்க ஊதியம் பெறும் எவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு வந்தால் அது தொடர்பாக முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க ஒரு வலிமையான சட்ட அமைப்பு தேவை என்ற கோரிக்கை வலுப்பெற்றது. சமூக ஆர்வலர் அன்னாஹசாரே தலைமையில் டெல்லியில் மிகப்பெரிய அளவில் பேரணி, உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவை நடைபெற்றன. இதைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்டவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக்பால் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான லோக் அயுக்தா நீதி மன்றங்களை உருவாக்குவதற்கான சட்டமும் கொண்டுவரப்பட்டது. 



தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்


சுமார் 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள். அதிலும் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவான சம்பளம் பெறுகிறவர்கள் 40 கோடிக்கு மேல் இருக்கிறார்கள். இந்நிலையில், அவர்களுக்கும் உணவு கிடைக்கச் செய்யும் வகையில் தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவை நாடாளு மன்றத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்தின் மூலம் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்ந்து வரும் குடும்பங்கள் மாதம் 35 கிலோ உணவு தானியத்தை மானிய விலையில் பெறும். மற்ற குடும்பங்களில் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோ உணவுதானியம் மானிய விலையில் கிடைக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் பாதுகாப்பு


தலைநகர் புதுடெல்லியில் இரவு நேரத்தில் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவியை பேருந்தின் ஓட்டுனர் உள்ளிட்டவர்கள் பாலியல் கொடுமைக்குள்ளாக்கி குற்றுயி ராக்கினர். சிகிச்சை பலனின்றி அந்த மாணவி இறந்ததையடுத்து, டெல்லியில் பெரும் போராட்டம் வெடித்தது. நாடு முழுவதும் இத்தகையப் போராட்டங்கள் பரவின. இதையடுத்து, பெண்கள் மீதான பாலியல் வன்முறையைத் தடுப்பது குறித்து நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரையின் பேரில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து நீதி கிடைக்கவும், நியாயம் கிடைக்கவும் வகையில் குற்றவியல் சட்டத் திருத்தம்-2013 நிறைவேற்றப்பட்டது. 

வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல்  துன்புறுத்தல்களைத் தடுக்கவும் தடை செய்யவும்,  இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, பெண்களுக்கான பாதுகாப்பான வேலைச்சூழலை உருவாக்கவு மான சட்டமுன்வடிவு 2013 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டது.

நிலம் கையகப்படுத்தும் சட்டம்


விவசாய நிலங்களைத் தொழில்வளர்ச்சி போன்றவற்றிக்காகக் கையகப்படுத்தும்போது அதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிப்படையாமல் இருக்கவும், அவர்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படாமல் இருக்கவும் வழி செய்யும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் கடைசிக் கட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 

ஆதார் அடையாள அட்டை


அரசின் திட்டத்தின் பலன்கள் உரியவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதிலும் அதில் தாமதமோ, மோசடிகளோ இருக்கக் கூடாது என்பதற்காக இந்திய குடிமக்களுக்கு தனிப்பட்ட எண்ணுடன் கூடிய ஆதார் அடையாள அட்டை திட்டத்தை ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு கொண்டுவந்தது. குடிமக்களின் புகைப்படம், எண், கைரேகை கருவிழி உள்ளிட்டவற்றைக் கொண்டு இந்த அடையாள அட்டை உருவாக்கப்பட்டது. இந்த அட்டையைக் கொண்டு அரசின் திட்டங்களையும் மானியங்களையும் பெறுவதற்கு வழி செய்யப்பட்டது. எனினும், ஆதார் அடையாள அட்டையின் நோக்கம் குறித்த அச்சங்களும் அய்யங்களும் உருவானதால் எதிர்பார்த்த வகையில் இத்திட்டம் வெற்றிபெறவில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தனிமனித வருமானம் ஆகியவற்றில் வளர்ச்சி ஏற்பட்டது. எனினும், பொருளாதார வளர்ச்சி என்பது எதிர்பார்த்த அளவில் இல்லை. இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பு சர்வதேச அளவில் மதிப்பு குறைந்து கீழே சென்றது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பெட்ரோலியப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்ந்த காரணத்தால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்தன. பன்னாட்டு நிறுவனங் களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் காரணமாக உள்நாட்டு வணிக நிறுவனங்கள் இழப்பை சந்தித்தன. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசின் முயற்சிக்கு கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை உருவானது. 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல், இஸ்ரோ தொடர்பான அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஊழல் உள்ளிட்ட பல குற்றச் சாட்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி  அரசைத் திணறடித்தன. பிரதமர் மீதே குற்றச் சாட்டுகள் வைக்கப்பட்டன. இத்தகைய குற்றச் சாட்டுகளை நேரில் சந்திப்பதைத் தவிர்க்கும் வகையில் கூட்டணிக் கட்சிகளையும் சொந்தக் கட்சியில் உள்ளவர்களையும் பலிகொடுத்தது காங்கிரஸ் தலைமை. திரிணாமூல் காங்கிரஸ், தி.மு.க போன்ற கூட்டணிக் கட்சிகளும் ஒரு கட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசியலிருந்து விலகின.

ஈழத்தமிழர் நலன், தமிழக மீனவர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் தமிழக மக்களின் மனநிலைக்கு எதிராகவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்பட்டது. அதுபோலவே, ஆந்திராவிலிருந்து தெலுங்கானாவைத் தனிமாநிலமாக்கும் பிரச்சினையிலும் காங்கிரசின் அணுகுமுறைகளால் பெரும் வன்முறைகள் வெடித்தன. இப்படி பல மாநிலங்களின் உணர்வுகளையும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு புறக்கணித்தது. இவையெல்லாம் அந்த அரசின் இறுதிக் காலத்தில் பெரும் எதிர்ப்புகளாக மாறின. 

இந்தியாவின் முதல் பிரதமர் நேருவுக்குப் பிறகு 10 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி செய்த பிரதமர் என்ற பெருமை டாக்டர் மன்மோகன்சிங்கிற்கு உண்டு. ஆனால், நேருவைப்போல அவர் மூன்றாவது முறை பிரதமராகும் வாய்ப்புக்கு பெரும் சவால் உருவான நிலையில், காங்கிரஸ் தலைமை யிலான கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றாலும் பிரதமராகப் போவதில்லை என அறிவித்தார் மன்மோகன்சிங். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வழி நடத்துபவரும் காங்கிரஸ் தலைவருமான சோனியாகாந்தி 2004-இல் மக்களிடம் பெற்ற அளவுக்கு 2014-இல் செல்வாக்கு பெற்றவராக இல்லை. 

நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி தனது பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை முன்னிறுத்தி தேர்தல் களத்தை சந்திக்கிறது. காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்றத் தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்றுள்ளார். இடதுசாரிகளான கம்யூனிஸ்ட்டுகளோ காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்குவதில் முனைப்பாக உள்ளனர். எனினும், சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. உத்தரபிரதேச முன்னாள் முதல்வர்களான முலாயம்சிங் யாதவ், மாயாவதி, தமிழக முதல்வர் ஜெய லலிதா, பீகார் முதல்வர் நிதீஷ்குமார் உள்ளிட்ட பலரும் பிரதமராகும் எண்ணத்துடன் இந்தத் தேர்தல் களத்தை எதிர்கொள்கின்றனர். மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி உள்ளிட்டவர்கள் மத்தியில் தங்கள் வலிமையை நிரூபிக்கத் தயாராகி வருகின்றனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பத்தாண்டுகால அரசு நிறைவுக்கட்டத்திற்கு வந்துள்ளது. 16-ஆவது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா.

ad

ad