புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2014

“தமிழன் தலையில் மிளகாய் அரைக்கலாமா?”
'91 வயதில், உச்சி வெயிலில் தேர்தல் பிரசாரம் செய்யப் போகிறேன்’ என்று கருணாநிதி புறப்பட்டதே பெரிய விஷயம்!
நாடு முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் முழக்கங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் போது, கோபாலபுரம் வீட்டில் முடங்கிக்கிடப்பாரா கருணாநிதி?

இதோ கோவையில் இருந்து தன்னுடைய கொள்கை முழக்கங்களைத் தொடங்கிவிட்டார்!
''எந்த உடல்நிலையில் நான் இங்கு வந்துள்ளேன் என்பதை நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள். கடந்த சில மாதங்களாகவே மிகுந்த உடல்நலிவுற்றுச் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிற நான், தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சியினரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுப்பதற்காகவே வந்துள்ளேன்.
கடந்த ஓராண்டு காலமாக என் உடல் நலிவுற்று உள்ளதையும், அதன் காரணமாகத்தான் பல நிகழ்ச்சிகளை ரத்துசெய்து, கழகத்தினரை மனச் சங்கடத்துக்கு ஆளாக்கி இருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். தவிர்க்கவே முடியாத சூழலில்தான் அப்படிச் செய்ய வேண்டியதாகிறது. யார் கண்டார்..? ஒருவேளை இதுவே நான் கலந்துகொள்கிற கடைசித் தேர்தலாக இருக்கலாம்!'' என்று சொல்லும்போது மேடையில் இருப்பவர்கள், எதிரில் இருப்பவர்கள்... என அத்தனை பேரின் இதயங்களும் கனத்துப்போகின்றன. அந்த வார்த்தைகள் வெறும் தேர்தல் ஸ்டன்ட் அல்ல என்பதை கருணாநிதியின் பிரசாரத்தை நேரில் கண்டவர்களால் உணர முடியும்.
உடன்பிறப்புகளை ஒரே சொடுக் கில் உற்சாகம் கொள்ளவைக்கும், 'எனது உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...’ என்ற வரியை, திருப்பூர் பொதுக்கூட்டத்தில் சொல்ல மறந்துவிட்டார் கருணாநிதி. அந்த வரிக்காக ஆவலுடன் கருணாநிதியின் முகம் பார்த்திருந்த தி.மு.க-வினருக்கு ஏக ஏமாற்றம். அருகில் இருந்த ஆ.ராசா, கருணாநிதியிடம் நினைவுபடுத்த, 'எனது உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...’ என்ற வரியை ஒன்றுக்கு மூன்று முறை சொல்லிச் சமாளித்தார் கருணாநிதி. அவரின் பிரசாரம் முழுக்க, இப்படியான உருக்கமான நிமிடங்கள்தான்.
இந்தத் தேர்தல் முடிவு தி.மு.க-வுக்கு எப்படி இருந்தாலும், நீலகிரியில் ஆ.ராசா வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் கருணாநிதி. அதனால்தான் நீலகிரியை ஒட்டி கோவையில் தன் முதல் பிரசாரப் பயணத்தை அமைத்துக்கொண்டார். வீதி வீதியாக அலைய முடியாது என்பதால், கோவை, பொள்ளாச்சி, நீலகிரி என மூன்று தொகுதி தி.மு.க. வேட்பாளர்களையும் ஆதரித்து ஒரே மேடையில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டார்கள். தேர்தல் கமிஷனின் தேர்தல் செலவுக் கெடுபிடியும் இன்னொரு காரணம்!
கருணாநிதி உற்சாகமாகத்தான் கோவை வந்து இறங்கினார். ஆனால், கொங்கு மண்டல வெற்றி வாய்ப்பு குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை அந்த உற்சாகத்தைக் குறைத்துவிட்டது. கம்யூனிஸ்ட்கள் மற்றும் கொங்கு பெல்ட் கட்சிகள் வாக்குகளைக் கணிசமாகப் பிரித்தால் மட்டுமே கோவை, திருப்பூரில் வெற்றியை நோக்கி முன்னேறலாம் எனச் சொந்தக் கட்சியினரே சொன்னதை அவர் ரசிக்கவில்லை. 'இதை என்கிட்டயே சொல்லிட்டு நிக்கிறீங்க. தேர்தல் வேலையை வேகப்படுத்துங்கய்யா!’ எனச் சீறிவிட்டுத்தான் பிரசாரத்துக்குக் கிளம்பியிருக்கிறார்.
பிரசாரக் கூட்டத்தில் கருணாநிதிக்கு முன் பேசிய அனைவருமே, 'கடல் போல கூட்டம்... வெள்ளம் போல எழுச்சி’ என்று பேசிச் செல்ல, பேசத் தொடங்கியதுமே அந்த 'எழுச்சி மகிழ்ச்சி’க்குத் தடை போட்டார் கருணாநிதி.
'' 'கடல் போலக் கூட்டம்’ என்று இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். இதைவிடப் பிரமாண்டமான கூட்டத்தை இதே கோவையில் செம்மொழி மாநாட்டில் கண்டோம். வெள்ளம் போல தமிழர் திரண்ட அந்தச் செம்மொழி மாநாட்டு மகிழ்ச்சியையும், அதன் பின்னர் வந்த தேர்தல் கொடுத்த மனக்கசப்புகளையும் நாம் மறந்துவிடக் கூடாது. செம்மொழி மாநாட்டுக்குத் திரண்ட கூட்டத்தால் அடைந்த மகிழ்ச்சிக்கும் எல்லை இல்லை; அதன் பிறகு பெற்ற தோல்விகளுக்கும் எல்லை இல்லை. அந்த மாநாட்டால் நமக்கு என்ன பலன் கிடைத்தது என்பதை நாம் இப்போது நினைத்துப் பார்க்க வேண்டும்!'' என்று சற்றே கடுகடுப்புடன் குறிப்பிட்டார்.
'91 வயதில் சக்கர நாற்காலியில் அமர்ந்து சக்கரம் போல் சுழன்று பணியாற்றக்கூடிய ஒரே தலைவர் எங்கள் தலைவர்தான்!’ என முன்னாள் கொறடா முபாரக் பேசியதைக் குறிப்பிட்ட கருணாநிதி, ''தள்ளாடும் பருவத்தில் இருந்தாலும் என்னுடைய மொழி தள்ளாடக் கூடாது; என்னுடைய இனம் தள்ளாடக் கூடாது; என்னுடைய சுயமரியாதை தள்ளாடக் கூடாது. பெரியார், அண்ணா வழியிலும் சிந்தித்து, அவர்கள் இட்ட கட்டளையை என் வாழ்நாள் முடிகிற வரையில் உழைக்க வேண்டும் என்ற உறுதி எடுத்துக்கொண்டவன் இந்தக் கருணாநிதி. அதே சமயம், எனக்கு 91 வயது என்பதை வெளியில் சொல்லிக்கொள்ள விருப்பம் இல்லை. அதுவும் எனது துணைவியாரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு எனக்கு 91 வயது என்று சொல்வது சங்கடம்தான்!'' என்று கருணாநிதி சிரித்துக்கொண்டே சொல்ல, ராஜாத்தி அம்மாள் முகத்தில் வெட்கம்.
வென்றால் அண்ணா வழி... தோற்றால் பெரியார் வழி என இரு வழிப் பாதையை வைத்தி ருக்கும் கருணாநிதி, இந்தத் தேர்தல் பிரசாரத்தில் கையில் எடுத்திருப்பது பெரியார் வழியான இன நலன்.
''தமிழகம், திறந்த வீடு அல்ல. மோடிகளுக்கு இங்கே வேலை இல்லை. இங்கே யார் வேண்டுமா னாலும் நுழையலாம் என்றால், இந்தியா சீர் குலைந்துபோகும். தமிழ்நாட்டின் சிறப்பே திராவிட இயக்கம் கட்டிக்காத்த வீரமும் சுயமரியாதையும்தான். அந்தக் கொள்கைகளுக்குப் பங்கம் வரும் என்றால், இந்திய ஒருமைப்பாடு சீர்குலைந்துபோகும். நாங்கள் கட்டபொம்மன்கள். இங்கே எட்டப்பன்களுக்கு இடம் இல்லை. தமிழ்நாட்டில் போக்கொடி தூக்கிய வர்கள் நாம். அந்தக் கொடி இன்னும் தளரவில்லை. தளரவும் விட மாட்டோம்!'' என்று தமிழ் உணர்வுக்குத் திரி கிள்ளினார்.
பேச்சின் இடையே கருணாநிதியின் வார்த்தைகள் அவ்வப்போது குழற, கையில் இருந்த பேப்பரைப் புரட்டக்கூட சிரமப்பட்டார். அப்போதெல்லாம் அருகில் அமர்ந்திருந்த ஆ.ராசா, கருணாநிதி பேசவேண்டிய வரிகளை தாளில் சுட்டிக்காட்டி உதவினார். இடையிடையே வெதுவெதுப்பான வெந்நீரை அருந்தியபடியே பேச்சைத் தொடர்ந்தார் கருணாநிதி.
திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாகத் திரண்டிருந்த தொண்டர்களை முறைப்படுத்த போதுமான போலீஸார் இல்லை. இருந்த சொற்ப போலீஸாரும் கடமைக்கு நின்று கூட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
 
கோவையில் இன உணர்வு ஊட்டிய கருணாநிதி, அவிநாசியில் தி.மு.க. அரசு நிறைவேற்றிய திட்டங்களை அடுக்கினார். ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியலை எல்லாக் கூட்டங்களிலும் தவறாமல் நினைவுபடுத்திய கருணாநிதி, ''மின்வெட்டால் இருண்டுகிடக்கும் தமிழகத்துக்கு ஒளி வேண்டாமா?'' என்று மறக்காமல் மின்வெட்டைச் சுட்டிக் காட்டினார். முன் எப்போதையும்விட ஜெயலலிதா மீது கடும் காட்டம் காட்டுகிறார் கருணாநிதி.
''தமிழக முதல்வர்தான் ஏதோ இளைஞர் போல மற்றவர்களைப் பற்றி பேசுகிறார். ஒன்று மட்டும் சொல்கிறேன். நாம் எப்படிப்பட்ட முதல்வரைப் பெற்றிருக்கிறோம் என்பதற்கு பெங்களூரிலே நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்றே போதும். ஜெயலலிதாவுக்கு சென்னை வாலாஜாபாத்தில் 100 ஏக்கர், சிறுதாவூரில் 25 ஏக்கர், நீலாங்கரையில் இரண்டு ஏக்கர், கொடநாட்டில் 898 ஏக்கர், கோவையில் ஒரு ஏக்கர், காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர், கன்னியாகுமரியில் 1,190 ஏக்கர், தூத்துக்குடியில் 200 ஏக்கர், 30 வண்ணங்களில் கார், நகை, வைரம், முதலீடு... எல்லாம் சேர்த்து 5,107 கோடி ரூபாய் சொத்து உள்ளது. இதை நான் சொல்லவில்லை; அரசு வக்கீல் கூறுகிறார். இவ்வளவு சொத்துகளைக் குவித்து வைத்துக்கொண்டு 'நான் ஏழை’ என்று சொல்வதில் என்ன அர்த்தம்? தமிழன் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்றுதானே அர்த்தம்.
'இவ்வளவு சொத்தா?’ என்று நீங்கள் மூக்கின் மீது விரலை வைக்க வேண்டாம். இந்தத் தேர்தலிலே வென்றால், இன்னும் பல கோடி ரூபாய் சம்பாதிப்பார்கள்!'' என்று ஏகத்துக்கும் ஜெயலலிதாவை விமர்சிப்பவர், அதே கோபத்தை வாக்காளர்கள் மீதும் காட்டினார்.
''எங்கள் பேச்சை, வேட்பாளரை, அலட்சியப்படுத்தினால், ஏமாறத் தயாராகி விட்டோம் என்றால் அவர்களை ஆதரியுங்கள். தமிழ்நாடு பொட்டல் காடு ஆக வேண்டுமென்றால், அவர்களுக்கு வாக்கு அளியுங்கள். இல்லையென்றால், எங்கள் பேச்சைக் கேளுங்கள். எங்களை அலட்சியப்படுத்தினால், 'வந்ததை அனுபவியுங்கள்’ எனச் சாபம் இடுவதைத் தவிர வேறு வழி இல்லை. ஆனால், நீங்கள் அந்த நிலைமைக்கு ஆளாக மாட்டீர்கள் என நம்புகிறேன். உங்கள் முன் என் உணர்வுகளைக் கொட்டிய திருப்தியோடு விடைபெறுகிறேன்'' என்று கூறி விடைபெறுகிறார் கருணாநிதி.
தன் அரசியல் வாழ்வில் யாருடைய உதவியும் இன்றி கருணாநிதி துள்ளித் திரிந்த காலம் ஒன்று உண்டு. கருணாநிதி, காலத்தைக் கைபிடித்து அழைத்துச் சென்ற நாட்கள் அவை. இப்போது கருணாநிதியை, காலம் கைபிடித்து அழைத்துச் செல்கிறது. ஒரு குழந்தையைக் காணும் குதூகலத்துடன்தான் தொண்டர்கள், கருணாநிதியின் பிரசாரத்துக்குக் கூடுகிறார்கள். ஆனால், கரகரக் குரலில் பேசும் அந்தக் குழந்தையின் பணிச்சுமை இப்போதைக்கு இறங்காது போல!

களத்தில் ராஜாத்தி அம்மாள்!
இப்போது கருணாநிதியின் பிரசாரப் பயணம் என்பது ஒரு குழுவின் பயணம். அவரது தனி மருத்துவர் டாக்டர் கோபால், பிசியோதெரபிஸ்ட் டாக்டர் பெருமாள், சமையல்காரர் பிரகாஷ் ஆகியோருடன் அவரை சக்கர நாற்காலியில் வைத்துப் பத்திரமாக அழைத்து வருபவர்கள் என ஒரு குழுவே கருணாநிதிக்காக இயங்குகிறது.
 வழக்கமாகக் கட்சிக் கூட்டங்களில் மேடையில் பின்வரிசையில் அமர்வார் ராஜாத்தி அம்மாள். ஆனால், இந்தப் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கருணாநிதிக்கு அருகில் முதல் வரிசையிலேயே அமர்ந்திருந்தார். கருணாநிதியின் உடல்நிலை காரணமாக அவரை ஒவ்வொரு நிமிடமும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு.  
கோவையில் துரைமுருகன், ஆ.ராசா, முபாரக், 'பொங்கலூர்’ பழனிச்சாமி... எனக் கட்சிப் பிரமுகர்கள் வெகுசிலர் மட்டுமே கலந்துகொண்ட ஆலோசனையில், கருணாநிதிக்கு அருகில் அமர்ந்திருக்கிறார் ராஜாத்தி அம்மாள்.
 கருணாநிதியின் உடல் நலம் கருதி பகல் பிரசாரத்தைத் தவிர்த்து மாலை தொடங்கி இரவு வரை பிரசாரத்தை வடிவமைத்தி ருக்கிறார்கள். இரவுப் பிரசாரங்கள் பகல் பிரசாரங்களைவிட மூன்று மடங்கு செலவு பிடிப்பவை. இதனால் பிரசாரப் பொதுக்கூட்டம் என்று அறிவிக்காமல், மினி மாநாடு போல கோவைப் பிரசாரத்தை வடிவமைத்திருந்தார்கள். ஆனாலும் மொத்த மாநாட்டுச் செலவையும் மூன்றாகப் பிரித்து மூன்று வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் தேர்தல் கமிஷன் வரவு வைத்தால் என்ன செய்வது என்று குழப்பத்திலேயே இருந்தார்கள் உடன்பிறப்புகள். அந்தச் சூழ்நிலையைச் சமயோஜிதமாகச் சமாளித்தார் கருணாநிதி. மேடையில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும்போது, 'இவர்களுக்கு வாக்களியுங்கள்’ என்று சொல்லாமல் 'கட்சிக்காகக் களப்பணியாற்றிய இவர்களுக்கு உங்கள் ஆதரவு தேவை’ என்றரீதியில் பேசி சமாளித்தார்!

ad

ad