புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2014


''அ.தி.மு.க-வினருக்கு 'அம்மா’ என்ற பெயரைவிட அலெக்சாண்டர், ஆர்.நடராஜ் என்ற இரண்டு பெயர்களும்தான் அதிகப்படியான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது!'' என்றபடியே உள்ளே வந்தார் கழுகார்.


''அதிகாரிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள்... ஏன் உளவுத் துறை அதிகாரிகள் உள்பட அனைவருமே இவர்கள் இருவரின் வருகையை அச்சத்துடன்தான் பார்க்கிறார்கள்.''
''உளவுத் துறையிலுமா?''நன்றி விகடன் 
''உளவுத் துறையில் உயர் அதிகாரி அசோக்குமார் நீங்கலாக மற்றவர்கள் பதற்றம் அடைந்து இருப்பதாகக் கேள்வி. பொதுவாகவே அசோக்குமார் இந்த இடத்​துக்கு வந்த பிறகு, தனக்கு முழுமையான தகவல்கள் வந்துசேர்வதாக முதல்வர் நினைக்கிறார். எல்லாத் தகவல்களையும் தனக்கு கொண்டு​வந்து சேர்க்கிறார் என்பதைவிட, தான் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கான பதிலை உடனடியாகவும் விளக்க​மாகவும் அசோக்குமார் தந்துவிடுகிறார் என்பதும் ஜெயலலிதாவுக்குத் திருப்தியைக் கொடுத்துள்ளதாம். ஆனால், மாவட்டங்களில் இருந்து வரும் தகவல்கள் பல இட்டுக்கட்டியதாகவும், பொய்யாகவும் இருப்பதை முதல்வர் உணர்ந்துள்ளார். அதனால்தான் உளவுத் துறையைக் கண்காணிக்க ஒரு உளவுத் துறை இருந்தால் நல்லது என்று நினைத்து ஆர்.நடராஜ், அலெக்சாண்டர் இருவரையும் இணைத்துக்கொண்டார்!''
''அவர்கள் இருவரும் அ.தி.மு.க-வில் சேர்க்கப்பட்டது விமர்சனத்துக்கு உரியது ஆகிவிட்டதே?''
''இதுவும் முதல்வர் அறியாதது அல்ல. அவர்கள் இருவருமே பணி ஓய்வுக்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு ஆலோசனை சொல்பவர்களாகத்தான் இருந்தார்கள்.  'இப்படியே மறைமுகமாகவே இருந்துவிட்டுப் போகிறோம்’ என்றுதான் அவர்களும் சொன்னார்களாம். ஆனால் முதல்வர்தான், 'நீங்கள் வெளிப்படையாகவே கட்சியில் இணைவதுதான் நல்லது’ என்றாராம்!''
''ஏனாம்?''
''தவறான தகவல்கள் தன்னை வந்துசேருவது குறையும் என்று நினைக்கிறாராம் முதல்வர். 'அவர்கள் இருவரும் கார்டனில் இருந்து செயல்பட்டால், பொய் தகவல்களைத் தருபவர்கள் பயப்படுவார்கள். எனக்கு எதுவும் வந்துசேராது என்று நினைத்து பலரும் தேர்தல் வேலை பார்க்காமல் இருக்கிறார்கள். தங்களை எல்லாம் கண்காணிக்க இரண்டு போலீஸ் அதிகாரிகளை நியமித்திருக்கிறார்கள் என்று தெரிந்தால் பயப்படுவார்கள்'' என்று நினைக்கிறாராம் முதல்வர்!''
''அப்படியா நடந்துகொள்கிறார்கள் அ.தி.மு.க-வினர்?''
''வேலை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும், பணம் செலவு செய்தாலும் செய்யாவிட்டாலும் நாம் ஜெயித்துவிடுவோம் என்று ஆளுங்கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் மிதப்பு வந்துவிட்டதாக ஜெயலலிதாவுக்குத் தகவல் வந்துள்ளது. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பலரும் அப்படித்தான் நினைக்கிறார்களாம். எந்தத் தொகுதியில் எல்லாம் மந்திரிகளுக்கு வேண்டிய வேட்பாளர்கள் நிற்கிறார்களோ... அங்கெல்லாம் மந்திரிகளுக்கு எதிர் கோஷ்டி வேலை பார்ப்பது இல்லை. 'இந்த வேட்பாளர் தோற்றால், அந்த ஆளுக்கு மந்திரி பதவி போய்விடும். நமக்கு நல்லதுதானே?’ என்று அந்த எதிர் கோஷ்டியினர் லாஜிக் சொல்லிவிட்டு சும்மா அலைகிறார்களாம். அமைச்சர்களுக்கு கை காசை எதற்கு செலவுசெய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களாம். வேட்பாளர்களிடம் 'நாளைக்கு இவ்வளவு வேணும்... நாளை மறுநாள் அவ்வளவு வேணும்’ என்று கறார் கண்டிஷன் போடுகிறார்களாம். இதனால், வேட்பாளர்கள் மிரண்டுபோய்க் கிடக்கிறார்கள். 'என்னிடம் பணம் கிடையாதுன்னு அம்மாட்ட சொல்லிட்டேன். மந்திரி, பார்த்துப்பாருன்னு அவங்க சொன்னாங்க’ என்று வேட்பாளர்கள், அமைச்சர்களுக்கும் காய்ச்சல் ஏற்படுத்தி வருகிறார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் நான்கைந்து அமைச்சர்கள் தவிர மற்றவர்கள் பணத்தை இறக்கவில்லையாம்!''
''இது தலைமைக்குத் தெரியாதா?''
''ஏன் தெரியாது? ஒவ்வொரு தொகுதியிலும் என்ன நடக்கிறது என்று தினமும் ஜெயலலிதாவுக்கு ரிப்போர்ட் வந்திருக்கிறது. டேக்கா கொடுக்கும் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மீது நெருப்பு பாய்ச்ச ஆரம்பித்துள்ளாராம் அவர். சம்பந்தப்பட்ட தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயிக்கவில்லை என்றால், மந்திரியோ மாவட்டச் செயலாளரோ பதவியில் தொடர முடியாது என்று எச்சரிக்கை செய்துவிட்டாராம். அதோடு, 'வி.என்.சுதாகரன் கதி ஆயிடும்’ என்று உதாரணம் காட்டியதாகவும் சொல்கிறார்கள்!''
''அப்படின்னா?''
'' 'மிஞ்சி மிஞ்சிப் போனா பதவியைப் பறிப்பாங்க... அவ்வளவுதானே?’ என்று அ.தி.மு.க-வினருக்குள் அலட்சியமும் மிதப்பும் இருக்கிறது அல்லவா! 'வி.என்.சுதாகரன் கதி என்றால் பதவி போகும், அதோடு பணம் பறிக்கப்படும், நடவடிக்கை பாயும், நிம்மதியும் போய்விடும்’ என்று ஒருவர் விளக்கமாகச் சொல்கிறார். இதைக் கேள்விப்பட்ட அமைச்சர்கள் வெலவெலத்துக் கிடக்கிறார்கள். அக்னி நட்சத்திர வெயில் கிளப்பிய சூட்டைவிட, அம்மா கிளப்பிய அனல் இவர்களை அடிக்கடி பாத்ரூமை நோக்கி ஓடவைத்துள்ளது. '35 சீட் என்னோட லட்சியம்; 30 சீட் வந்தாகணும்’ என்று அடிக்கடி சொல்கிறாராம் முதல்வர். நிலைமை அப்படி இல்லை என்ற தகவல்கள் தினமும் வருவதால்தான், அவரது கோபம் அதிகமாகி வருகிறது.''
''இன்னும், 30 சீட் என்று சொல்லி வருகிறாரே?''
''ம்! அவருக்கு ஒரு கணக்கு இருக்கிறது. எதிர்த்து நிற்பவர்கள் நிச்சயம் ஜெயிக்கக்கூடிய தொகுதிகள் எது எது என்று ஒரு பட்டியல் எடுத்துள்ளார். அதில் மத்திய சென்னை, தஞ்சாவூர், நீலகிரி, விருதுநகர், கன்னியாகுமரி, தர்மபுரி, நாகை, சேலம், கோவை, புதுச்சேரி ஆகிய பத்து தொகுதிகளை எதிர்க்கட்சிகள் உறுதியாகக் கைப்பற்றிவிடும் என்று நினைக்கிறாராம் முதல்வர். 'சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் அ.தி.மு.க-தான் ஜெயிக்க வேண்டும். தே.மு.தி.க. போட்டியிடக் கூடிய 14 தொகுதிகளிலும், அது தோற்க வேண்டும். அன்புமணி வெற்றிபெறக் கூடாது’ என்று கட்டளையிட்டதாகச் சொல்கிறார்கள். சென்னையைக் கைப்பற்றுவதை தனது பிரெஸ்டீஜ் ஆக நினைக்கிறாரம். 'தனித்துப் போட்டியிடத் தயாரா?’ என்று கேட்டவர் விஜயகாந்த். 'நம்மால்தான் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். நாம் இல்லாவிட்டால் இந்த சட்டமன்றத்துக்குள் அவர் வந்திருக்கவே முடியாது என்பதை அவருக்குக்குக் காட்ட வேண்டும்’ என்றாராம். 'அன்புமணி ஜெயித்தால் பா.ம.க. மீது நாம் எடுத்த நடவடிக்கை தவறு என்று ஆகிவிடும்’ என்று நினைக்கிறாராம். எனவேதான், அந்தத் தொகுதிகளை மறந்துவிட்டு, பலவீனமான தொகுதிகளை மட்டும் கணக்கெடுத்து அதில் முழு கவனத்தையும் செலுத்தலாம் என்று கட்டளையிட்டாராம் முதல்வர். '32 தொகுதி நிச்சயம் ஜெயிப்போம்’ என்று இந்த டூ மேன் ஆர்மியும் உத்தரவாதம் கொடுத்துள்ளதாம்!''
''தி.மு.க?''
''தி.மு.க. கள நிலவரம் பற்றி கடந்த முறையே விளக்கமாகச் சொல்லியிருக்கிறேன். 'ஐந்து இடங்களிலாவது ஜெயிக்க வேண்டும்’ என்பது ஸ்டாலின் இலக்காக ஒரு மாதத்துக்கு முன்பு வரைக்கும் இருந்தது. ஆனால், ஆளுங்கட்சி வீக் ஆகிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றுவதால், 10 தொகுதிகளைக் குறிவைத்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். மத்திய சென்னை, தஞ்சாவூர், நாகை, ஸ்ரீபெரும்புதூர், நீலகிரி, பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, நாமக்கல், வேலூர், காஞ்சிபுரம்... போன்றவை அவர்களது இலக்காக உள்ள தொகுதிகள்!''
''விருதுநகரைப் பற்றி சொல்லவில்லையே?''
''ஆமாம்! விருதுநகரை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்று ஸ்டாலினும், அந்த மாவட்டத்தின் தி.மு.க. செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும் நினைக்கிறார்களாம். வைகோ இந்தத் தேர்தலில் தோற்றால், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனக்கு நெருக்கடி தருபவராக இருக்க மாட்டார் என்பது ஸ்டாலினின் நினைப்பு. வைகோவை ஜெயிக்க விட்டால் அந்த மாவட்டத்தில் தனக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை என்று ராமச்சந்திரனும் நினைக்கிறாராம். வைகோவுக்கு அழகிரி ஆதரவு தருவதும் ராமச்சந்திரனை வீழ்த்துவதற்குத்தான். எனவே விருதுநகர் களம் விறுவிறுப்பாக இருக்கிறது!''
''ஓஹோ!''
''ம.தி.மு.க. வேட்பாளர்கள் செலவழிக்க பணம்  இல்லாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலேயே, 'பி.ஜே.பி. கூட்டணியில் சேர்ந்துவிட்டோம்; அதனால் பணம் வரும் என்று யாரும் பெரிய கற்பனையில் இருக்க வேண்டாம். நம்மிடம் இருப்பது மொத்தமே 11 கோடிதான். இதை வைத்துத்தான் ஏழு தொகுதிகளுக்கும் செலவு செய்ய வேண்டும். நான் எந்த தொழிலதிபரிடமும் பணம் கேட்டுப் போக மாட்டேன். நீங்களும் யாரிடமும் போய் வசூல் செய்யாதீர்கள். யாராவது நிதி கொடுக்க முன்வந்தால், வாங்கிக்கொள்ளுங்கள். கடந்த வாரத்தில் மலேசியாவில் ஒரு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள். ஒரு கோடி ரூபாய் தேர்தல் நிதி வசூல் செய்து தருவதாகவும் சொன்னார்கள். ஆனால் நான் போகவில்லை’ என்று வைகோ பேசினாராம். எனவே, விருதுநகர் உள்பட ம.தி.மு.க. தொகுதிகள் பணக்கஷ்டத்தில் இருக்கிறது ஆனால், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஏராளமாக இறைக்கத் தயார் ஆகிவிட்டார் என்கிறார்கள்!''
''அழகிரிக்கு முதல் எதிரியே அவர்தானே?''
''கன்னியாகுமரி, தென் சென்னை, கோவை ஆகிய மூன்று தொகுதிகளை பி.ஜே.பி-யும், சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பூர் ஆகிய மூன்று தொகுதிகளை தே.மு.தி.க-வும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆரணி ஆகிய மூன்று தொகுதிகளை பா.ம.க-வும் குறிவைத்து செயல்பட்டு வருகின்றன!''
''காங்கிரஸ்?''
''காங்கிரஸும் மோசம் இல்லை. கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தர்மபுரி, திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, கரூர், மயிலாடுதுறை, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் கணிசமான வாக்குகளை வாங்கும் என்று சொல்கிறார்கள். 'காங்கிரஸுடன் கூட்டணி வைக்காமல் போனதற்காக வருத்தப்படுவீர்கள்’ என்று ப.சிதம்பரம் அடிக்கடி சொல்லி வருகிறார் அல்லவா? அதனுடைய உள்ளர்த்தம் இதுதான். 'காங்கிரஸுடன் தி.மு.க. கூட்டணி சேர்ந்திருந்தால், இந்த 10 தொகுதிகளும் நிச்சயம் ஜெயிக்கலாம்’ என்பதுதானாம். 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வாக்குகள் வரை இந்தத் தொகுதிகளில் காங்கிரஸ் வாங்கும் என்கிறார்கள். டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்களுக்கு ஒரு தாக்கீது வந்துள்ளது. 'காங்கிரஸ் கட்சிக்கு எம்.பி-க்களை தருகிறீர்களோ இல்லையோ, 10 சதவிகித வாக்கு வங்கி தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதைக் காட்டுங்கள். அது மட்டுமே போதும்’ என்று சோனியா சொல்லிவிட்டாராம். அதனால்தான் 40 தொகுதிகளிலும் களத்தில் இறங்கி, வாக்கு சதவிகிதத்தை நிரூபிக்க நிற்கிறார்களாம். ஜி.கே.வாசனும் அதனால்தான் எல்லா ஊருக்கும் பிரசாரம் போகிறாராம்!''
''சோனியா பிரசாரம் செய்ய வருகிறாரா?''
''அநேகமாக கோவையில் சோனியா பிரசாரம் செய்யலாம். அங்கு போட்டியிடும் முன்னாள் அமைச்சர் பிரபு இதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார். சிவகங்கை தொகுதிக்கு ராகுலை அழைத்துவந்து, அவரை சில கிலோ மீட்டருக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சியும் எடுத்தார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக அதனை ஒதுக்கிவிட்டார்கள். கல்விக் கடன் வாங்கிய மாணவர்கள் சிவகங்கை தொகுதியில் அதிகமாம். அவர்களை மட்டும் கூட்டி வைத்து, அதில் ராகுலை பங்கேற்க வைக்கவும் முயற்சித்தார்கள். அதுவும் சரியாக வரவில்லை. ஒரு கூட்டமாவது பேசுங்கள் என்று ராகுலைக் கேட்டு வருகிறார்கள். ஆனால் தேதி முடிவாகவில்லை!''
''மோடி வருகை உறுதியாகிவிட்டதா?''
''நரேந்திர மோடி இரண்டு முறை தமிழகம் வருகிறார். ஏப்ரல் 14 என்று ஒரு தேதி மட்டும் முடிவாகி இருக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தமிழர்களின் உடையான வேட்டி, சட்டையில் அவரை அழைத்துவரப் போகிறார்களாம். இன்னொரு தேதி முடிவாகவில்லை. ஒரே நாளில் மூன்று கூட்டம் பேச ஏற்பாடாம். கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளும் கவர் ஆகிற மாதிரி பயணத் திட்டத்தை வகுத்து வருகிறார்கள்'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.
அட்டைப் படம்: எம்.விஜயகுமார்
படங்கள்: சு.குமரேசன், என்.ஜி.மணிகண்டன்,  
ஜெ.முருகன், எம்.திலீபன்,
ரமேஷ் கந்தசாமி

திருச்சி கூட்டம்... கோபத்தில் ஜெ.!

திருச்சியில் நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில் கூட்டம் மிகக் குறைவாக இருந்தது, ஜெயலலிதாவுக்கு கடுமையான கோபத்தைக் கிளப்பி உள்ளது!
மார்ச் 19-ம் தேதி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் கூட்டம் என்று அறிவித்தார்கள். அதன் பிறகு ஏப்ரல் 5-ம் தேதி எடமலைப்பட்டி புதூர் மைதானத்தில் ஜெயலலிதா பேசுவார் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு திருச்சி ஜி கார்னர் மைதானத்துக்கு இடத்தை மாற்றினார்கள். இப்படி ஏக குழப்பத்தில் இருந்த திருச்சி பொதுக்கூட்டத்துக்குக் கூட்டம் அவ்வளவாக இல்லை! அதுதான் வில்லங்கம்.
'கடந்த தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சியாக இருந்தபோது, திருச்சி ஜி கார்னர் மைதானத்தில்தான் பொதுக்கூட்டம் நடத்தினார். அப்போது கூடிய கூட்டம்தான், ஆட்சி மாற்றத்துக்கே வழிவகுத்தது. கடந்த செப்டம்பர் மாதம் அதே இடத்தில் மோடி கலந்துகொண்ட பி.ஜே.பி-யின் இளந்தாமரை மாநாடு நடந்தது. அந்த மாநாடு தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி, மூன்றாவது அணி உருவாக வழிவகுத்தது. அதுமாதிரி முக்கியமான கூட்டமாக இதனை நடத்த நினைத்தார்கள். ஆனால், அது நிறைவேறவில்லை.
தஞ்சையில் இருந்து வந்த ஜெயலலிதா, திருச்சியில் கூட்டம் குறைவாக இருப்பதைப் பார்த்து கடுப்பானார். அது அவரது முகத்தில் தெரிந்தது. யார் யார் பெயரை எல்லாமோ சொன்னவர், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரும் அரசுத் தலைமைக் கொறடாவுமான ஆர்.மனோகரன் பெயரைச் சொல்லவே இல்லை!


இனி, டிரான்ஸ்ஃபர் மேளா?
சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உட்பட ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலரை தேர்தல் கமிஷன் திடீரென மாற்றி அதிர்ச்சி அளித்திருக்கிறது.
திருட்டுப் பொருட்களை மீட்டு, குற்றவாளிகளைக் கைதுசெய்யும் போலீஸ், அதுபற்றிய செய்திகளை மீடியாக்களுக்கு வழங்குவது வழக்கம். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகும், சென்னை மாநகர போலீஸ் அதைத் தொடர்ந்து செய்தது. 'சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்கிறது, காவல் துறை சிறப்பாக செயல்படுகிறது என்கிற தோற்றம் ஏற்பட்டு அது வாக்குகளாக மாற வேண்டும்’ என்பதற்காகத்தான் இப்படி செய்கிறார்கள் என்று சிலர் தேர்தல் கமிஷனிடம் புகார் சொன்னார்கள். அதைத் தொடர்ந்துதான் கமிஷனர் மாற்றம். ஜார்ஜுக்கு பதிலாக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அதுபோல, தேர்தல் டி.ஜி.பி-யாக அனூப் ஜெய்ஸ்வாலை நியமித்திருக்கிறது தேர்தல் கமிஷன். 'பதவி நீட்டிப்பில் இருக்கும் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. ராமானுஜத்தை மாற்ற வேண்டும் என தி.மு.க. தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்திருந்தது. இதன் ரியாக்ஷன்தான் ஜெய்ஸ்வால் நியமனம். ராமானுஜத்தை மாற்றுவதற்கு சில சிக்கல் இருந்ததால் இந்த முடிவு எடுத்திருக்கிறது’ என்றும் சொல்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 140 உயர் அதிகாரிகள் மீது தேர்தல் கமிஷனிடம் புகார்கள் குவிந்துள்ளதாம். இனி, டிரான்ஸ்ஃபர் மேளாவை எதிர்பார்க்கலாம்.

என்.ஆர்.காங்கிரஸுக்கு அல்வா?
தமிழகத்தில் பி.ஜே.பி., தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் எல்லாம் ஓரணியாக தேர்தலைச் சந்திக்கின்றன. ஆனால், புதுச்சேரியில் பி.ஜே.பி-யை ஆதரிக்கும் புதுவை என்.ஆர்.காங்கிரஸ், பா.ம.க. ஆகிய கட்சிகள் அங்கே தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரம் செய்கின்றனர். இதனால், புதுச்சேரி பி.ஜே.பி. கூட்டணியில் குழப்பம். அதனாலேயே கடந்த 24-ம் தேதி தனது பிரசாரத்தை விஜயகாந்த் ரத்து செய்துவிட்டார். மேலும், புதுச்சேரி தேர்தலில் யாரும் தன்னுடைய படத்தையோ, கட்சிப் பெயரையோ போடக் கூடாது என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார். அவரும் அங்கு வேட்பாளரை நிறுத்தவில்லை. அதனால், விஜயகாந்த் ஆதரவைப் பெற பா.ம.க. முயற்சித்து வருகிறது. அதே நேரத்தில் புதுவை பா.ம.க. வேட்பாளருக்கு ம.தி.மு.க. ஆதரவு தரும் என்று வைகோ அறிவித்துள்ளார். இது பி.ஜே.பி-க்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. 'புதுவை தேர்தலில் நடுநிலை வகித்துவிடலாம்’ என்று பி.ஜே.பி. முடிவு செய்யப் போவதாகச் சொல்கிறார்கள்!

மணிரத்தினம் தந்திரமா?
சிதம்பரம் தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தவர் மணிரத்தினம். ஆனால், அவரது மனுவை அரியலூர் மாவட்ட ஆட்சியர் சரவண வேல்ராஜ் தள்ளுபடி செய்தார். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தால், அந்தக் கட்சியின் வேட்பாளரை ஒருவர் முன்மொழிய வேண்டும். அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்தால் 10 நபர்கள் முன்மொழிந்திருக்க வேண்டும். பா.ம.க., தேர்தல் கமிஷனில் பதிவுசெய்யப்பட்ட கட்சிதானே தவிர, அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல. அதனால், மணிரத்தினம் மனுவை 10 பேர் முன்மொழிந்திருக்க வேண்டும். ஆனால் ஒருவர்தான் முன்மொழிந்திருந்தார் என்ற அடிப்படையில் அவரது மனு தள்ளுபடி ஆனது.
மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்திருந்தவர் அவரது மனைவி சுதா மணிரத்தினம். அவரது மனுவில் 10 நபர்கள் முன்மொழிந்து உள்ளனர். அதனால், அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ''இது ஏதோ வேண்டுமென்றே செய்ததுபோல இருக்கிறது. மற்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் சரியாக மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். மணிரத்தினத்தின் மனைவியும் சரியாக விண்ணப்பம் தயாரித்துள்ளார். ஆனால், இவருக்கு மட்டும் அந்த விதி தெரியாமல் போனது ஏன்? மனைவியை நிறுத்துவதற்காக அவர் செய்த தந்திரம்!'' என்கிறார்கள்.
அவஸ்தையில்கருணாநிதி!
கோவையில் 6-ம் தேதி பிரசாரத்தைத் தொடங்கிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, மறுநாள் ஈரோட்டுக்கு வந்து சேர்ந்தார். அங்கே கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திக்கவில்லை. காரணம், கருணாநிதிக்கு கோவையில் இருந்து கிளம்பும்போதே, வாயில் புண் ஏற்பட்டுவிட்டதாம். அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஈரோட்டில் பேசிவிட்டு சேலத்துக்கும் கிளம்பிவிட்டார். பிரசாரத்தில் கருணாநிதியின் மருத்துவர் கோபால் அருகிலேயே இருந்து அவரை கவனித்துக்கொள்கிறார்

ad

ad