சனி, ஏப்ரல் 05, 2014

க.பொ.த உயர்தரம் கற்க 1,76,534 மாணவர்கள் தகுதி

* 5737 பேர் 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தி
* 9444 பேர் எந்தவொரு பாடத்திலும் சித்தியில்லை
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு கடந்த 2013ஆம் ஆண்டு தோற்றிய மாணவர்களில் 66.67 வீதமானவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 176,534 மாணவர்கள் இவ்வாறு
தகுதி பெற்றிருப்பதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
இவர்களில் 5737 பேர் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்திபெற்றிருப்பதுடன், பரீட்சைக்குத் தோற்றிய 264,772 மாணவர்களில் 9,444 மாணவர்கள் எந்தவொரு பாடத்திலும் சித்திபெறவில்லையென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உயர்தரத்திற்கு தகுதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 2016ஆம் ஆண்டில் 75 வீதமாக உயர்த்துவதுடன், எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறத் தவறும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒரு வீதமாகக் குறைப் பதுமே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித் தார். கல்வியமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
கல்வி அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, பரீட்சைகள் ஆணையாளர் புஷ்பகுமார ஆகியோரும் இந்த ஊடகவி யலாளர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
1994ஆம் ஆண்டிலிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி, உயர்தரத்துக்கு தகுதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. 94ஆம் ஆண்டு சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 22.5 வீதமானவர்களே உயர்தரத்துக்குத் தகுதி பெற்றனர். எனினும், 2010 இல் இந்த எண்ணிக்கை 60.57 வீதமாகவும், 2011இல் 60.80 வீதமாகவும், 2012இல் 64.74 வீதமாகவும் அதிகரித்துள்ளது.
விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்கள் தொடர்பில் அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்தப் பாடங்களில் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது.
விஞ்ஞான பாடத்தில் 67.53 வீதமானவர்கள் தோற்றியிருப்பதுடன், கணித பாடத்தில் தோற்றியவர்களின் எண்ணிக்கை 57.23 வீதமாகவும், கணித பாடத்தில் தோற்றியவர்களின் எண்ணிக்கை 48.86 வீதமாகவும் அதிகரித்துள்ளது.
இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையிலேயே ஆயிரம் பாடசாலைத் திட்டத்தின் கீழ் கணித ஆய்வுகூடங்கள், விஞ்ஞான ஆய்வுகூடங்கள் மற்றும் மொழி ஆய்வுகூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மஹிந்தோதய ஆயிரம் பாடசாலைத் திட்டத்தின் கீழ் 888 பாடசாலைகளுக்கு தகவல்தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை பாடசாலைகளுக்கு 65,000 கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தச் செயற்பாட்டின் ஊடாக குறித்த பாடங்களில் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
எந்தவொரு பாடத்திலும் தோற்றத் தவறியவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது. 2010ஆம் ஆண்டு 14,411 ஆகக் காணப்பட்ட எண்ணிக்கை, 2011ஆம் ஆண்டு 12,795 ஆகவும், 2012ஆம் ஆண்டு 11,100 ஆகவும், 2013ஆம் ஆண்டு 9,444 ஆகவும் குறைந்துள்ளது. இதனை மேலும் குறைப்பதே நோக்கமாகும்.
அதேநேரம், 72 பிரதேச செயலாளர் பிரிவில் விஞ்ஞானப் பிரிவு இல்லாத 149 பாடசாலைகளில் முதன்முறையாக விஞ்ஞானப் பிரிவுகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. இதன்மூலம் விஞ்ஞானப் பிரிவில் உயர்தரம் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.