புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2014

இராணுவத்திடம் சரணடைந்த முழுக் குடும்பத்தையும் காணவில்லை! முல்லை. நீதிமன்றில் பெண் ஒருவர் சாட்சியம்- பி.பி.சி 
இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான வழக்கில், சம்பவத்தின்- நிகழ்வுகள் பற்றிய விசாரணை இன்று புதனன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள், இறுதி யுத்தத்தின் போது அரசாங்கத்தின் பாதுகாப்பு உத்தரவாதத்தை அடுத்து, இராணுவத்தினரிடம் சரணடந்தனர்.
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அவர்கள் சரணடைந்ததை பல்லாயிரக்கணக்கான மக்கள் நேரடியாகக் கண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவ்வாறு சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது, எங்கே வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற தகவல்கள் இன்னும் தெரியவில்லை என சரணடைந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் சிலர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் 14 ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருக்கின்றனர்.
அவற்றில் முதல் ஐந்து வழக்குகள் தொடர்பிலான நிகழ்வுகள் பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.
முதலாவது வழக்கின் நிகழ்வு பற்றிய விசாரணையில் சாட்சியமளித்த பெண் ஒருவர்,
தனது மகளும் மருமகனும் அவர்களின் 4 மற்றும் 6 வயதான இரண்டு பிள்ளைகளும் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர், தனது மகளின் முழு குடும்பமும் இப்போது காணாமல் போயிருப்பதாக கூறியிருக்கின்றார்.
சரணடைந்ததாக தகவல் இல்லை: அரச தரப்பு
வவுனியா நீதிமன்றம் முதல் ஐந்து ஆட்கொணர்வு மனுக்களின் நிகழ்வுகள் பற்றிய விசாரணை அறிக்கையை முல்லைத்தீவு நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.
எனினும், இந்த சம்பவம் பற்றி யுத்தம் முடிவடைந்து ஓர் ஆண்டுக்குப் பின்னர் 2010 ஆம் ஆண்டிலேயே பதிவாகியுள்ளதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இறுதி யுத்தத்தின் போது எவரும் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக தகவல்கள் இல்லையென்றும் அரச தரப்பினரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மன்றில் சாட்சியமளித்த குறித்த பெண், இறுதி யுத்தத்தின் போது தான் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தேவிபுரம் வைத்தியசாலை எறிகணை தாக்குதலுக்கு உள்ளாகியதாகவும், பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்காலுக்குச் சென்றிருந்த போது யுத்தம் முடிவுக்கு வந்ததாகவும் கூறினார்.
அப்போது, லட்சக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து இருந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் சட்ட ரீதியான மன்னிப்பும் வழங்கப்படும் என்றும் உத்தரவாதமளித்து, அவர்களை சரணடையுமாறு ஒலிபெருக்கிகளில் அறிவிக்கப்பட்டதையடுத்தே, தனது மகளின் குடும்பம் முழுமையாக இராணுவத்தினரிடம் சரணடைந்தது என்றும் அந்தப் பெண் கூறினார்.
அவர்கள் சரணடைந்ததைத் தான் நேரில் கண்டதாகவும், அதேபோன்று தனக்குத் தெரிந்த பலர் இராணுவத்தினரிடம் சரணடைந்ததையடுத்து, அவர்கள் இராணுவ வாகனங்களில் இராணுவத்தினரால் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
அத்துடன் யுத்தம் முடிவடைந்ததையடுத்து காணாமல் போனவர்கள் தொடர்பில் செஞ்சிலுவைக்குழு, காவல்துறையினர் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் முறையிட்டிருந்ததாகவும், வட்டுவாகலில் இருந்து ஏனைய இடம்பெயர்ந்த மக்களுடன் செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாமில் ஒரு வருடம் தான் தங்க வைக்கப்பட்டிருந்த படியால், காணாமல் போனவர்கள் பற்றி உடனடியாக முறையிட முடியவில்லை என்றும் அவர் சாட்சியமளித்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை மே மாதம் 7 ஆம் 8 ஆம் திகதிகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எம்.கணேசராஜா ஒத்தி வைத்துள்ளார்.
மனுதரார்கள் சார்பில் கே.எஸ்.ரட்னவேல், அன்டன் புனிதநாயகம், பரஞ்சோதி ஆகியோர் வாதிட்டனர். எதிர் தரப்பில் அரச சட்டத்தரணி சிஹான் டி சில்வா ஆஜராகியிருந்தார்.

ad

ad