சனி, ஏப்ரல் 05, 2014

நடிகர் கார்த்திக் - ஞானதேசிகன் மீண்டும் சந்திப்பு :
காங்கிரஸுக்கு பிரச்சாரம் செய்ய அழைப்பு

நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் நடிகர் கார்த்திக் காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிட விரும்பினார். இதற்காக அவர் டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்களை
சந்தித்து பேசினார். ஆனால் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து விட்டதால், அவருக்கு தொகுதி ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் நடிகர் கார்த்திக்கை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், காங்கிரஸ் கட்சியில் தென் சென்னை தொகுதி மட்டும் தான் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் உள்ளது. எனவே அந்த தொகுதியில் போட்டியிட உங்களுக்கு விருப்பமா? என்று அவர் கேட்டார். ஆனால் இதற்கு கார்த்திக் தரப்பு யோசித்து சொல்வதாக தெரிவித்தது.
நேற்று காலை 11 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கார்த்திக் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் கார்த்திக்கை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, கார்த்திக்கிடம், காங்கிரஸ் கட்சி சார்பில் உங்களுக்கு மதுரை தொகுதி ஒதுக்க வாய்ப்பு இல்லை என்றும், தென் சென்னையில் போட்டியிடுகிறீர்களா? என்று ஞானதேசிகன் வலியுறுத் தியுள்ளார். ஆனால் அதற்கு கார்த்திக், தென் சென்னையில் போட்டியிட விருப்பம் இல்லை என்று தெரிவித்தாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து அவரிடம், நீங்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை ஞானதேசிகன் விடுத்தார்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வது சம்பந்தமாக இன்று (சனிக்கிழமை) நடிகர் கார்த்திக் தனது முடிவை அறிவிக்க இருக்கிறார்.