திங்கள், ஏப்ரல் 28, 2014

ஐ.நா தீர்மானத்தை இலங்கை இலகுவாக எடுக்கக் கூடாது. 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தீர்மானத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு செயற்படாது விட்டால் அது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்று
இலங்கைக்கு சீனா அறிவுறுத்தியுள்ளது.
 
கடந்த வாரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சீனத்துணை வெளிவிவகார அமைச்சர் லியூ சென்மின்னே இந்த எச்சரிக்கையை இலங்கை அரசுக்குக் கூறியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
 
""தீர்மானத்தைத் தீவிரமாக எடுத்துச் செயற்பாடது விட்டால் இலங்கை அரசு பாதகமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி ஏற்படும். அவ்வாறானதொரு நிலையில் சீன அரசால் இலங்கைக்கு உதவ முடியாத சந்தப்பங்களும் ஏற்படக் கூடும். எனினும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கையை சீனா கைவிடாது'' என்று அவர் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றே இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.