புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014


தென் மாவட்டங்களுக்கு இணையாக சாதி கணக்குப் போடப்படும் தொகுதிகளில் ஒன்று வட மாவட்டத்தில் இருக்கும் அரக்கோணம் தொகுதி. அரசியல் கட்சிகளும் சாதி கணக்கைப் போட்டுத்தான் இங்கே வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளன.

 இந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்களையே அ.தி.மு.க-வும், பா.ம.க-வும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன. அடுத்த இடத்தில் இருக்கும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவரை தி.மு.க., வேட்பாளராக்கி இருக்கிறது.  
பா.ம.க. வேட்பாளர் அரங்க.வேலு, கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி பலத்துடன் வென்று, ரயில்வே இணை அமைச்சர் ஆனவர். 2009 தேர்தலில் தோல்வியடைந்த இவர், இப்போது பி.ஜே.பி. கூட்டணி வேட்பாளராகக் களம் காண்கிறார். வேலூர் மாவட்டத்துக்கு மட்டுமே 40 ரயில்வே மேம்பாலங்கள் கட்டியது, ரயில் பாதையை அகலப்படுத்தியது என அவருடைய சாதனைகள் இப்போது நன்றாகவே கைகொடுக்கின்றன. 'வாலாஜாரோடு ரயில் நிலையத்தில் அதிவேக ரயில்கள் நிற்பதற்கு அவரே முக்கியக் காரணம். வாலாஜா, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் பகுதிகளில் இருந்து வேலைக்காக சென்னைக்கு செல்வோர் ஏராளம். அவர்களுக்கு ஏதுவாக ரயில் போக்குவரத்தை மேம்படுத்தினார்’ என்று வேலு புராணம் பாடுகிறார்கள் மக்கள்.
அ.தி.மு.க. வேட்பாளர் கோ.அரி, அ.தி.மு.க. அரசின் சாதனைகளைச் சொல்லி தொகுதி முழுக்க சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். ஆளுங்கட்சி பலமும் வன்னியர் சமூக வாக்குகளும் தன்னைக் கரைசேர்க்கும் என்று நம்புகிறார். ஆனால், வன்னியர் சமூக வாக்குகள் இலையைவிட மாம்பழம் பக்கமே அதிகம் சாய்கிறது.
தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.இளங்கோ, உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவர் தந்தை ரங்கநாதன் சோளிங்கர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. இந்த முகவரியை மட்டுமே வைத்துக்கொண்டு உதயசூரியன் சின்னத்தை நம்பி களம் காண்கிறார். அவர் சார்ந்த முதலியார் சமூக வாக்குகள் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். தொகுதியில் கணிசமாக இருக்கும் தலித் வாக்குகளும், முஸ்லிம் வாக்குகளும் தி.மு.க-வுக்கே சாதகமாக உள்ளன. தொகுதிக்கு தொடர்பே இல்லாத வேட்பாளர், புதுமுகம் ஆகியவை அவரைப் பின்னுக்குத் தள்ளுகின்றன. இரண்டு முறை இங்கு எம்.பி-யாக இருந்த ஜெகத்ரட்சகன் தொகுதிக்கு சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை என்ற மக்களின் கோபமும் தி.மு.க-வுக்கு எதிராக இருக்கின்றன. அதனால், தி.மு.க. பின்தங்குகிறது.
காங்கிரஸ் சார்பில் களம் இறங்கியுள்ள நாசே ராஜேஷ், பசையுள்ள பார்ட்டி. நாசே என்ற தொண்டு நிறுவனம் மூலம் தொகுதியில் ஓரளவு பரிச்சயமானவர். அதனால், கணிசமான வாக்குகளைப் பெற வாய்ப்பு உள்ளது.  
சாதி பலம், கூட்டணி பலம் ஆகியவை காரணமாக தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு டெல்லிக்குச் செல்ல ரயில் ஏறப்போவது அரங்க.வேலு!
 கத்திரி வெயில் சூட்டைக் காட்டிலும் தேர்தல் சூட்டில் அனலாகக் கொதிக்கிறது வேலூர். பி.ஜே.பி. சார்பில் புதிய நீதிக்கட்சி ஏ.சி. சண்முகம், தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம் லீக் அப்துல் ரஹ்மான், அ.தி.மு.க. வேட்பாளராக வழக்கறிஞர் செங்குட்டுவன் ஆகியோர் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளராக விஜய் இளஞ்செழியன் களமிறங்கியுள்ளார்.
துரைமுருகன் தன் மகனுக்காக எதிர்பார்த்த தொகுதி இது. ஆனால், கட்சித் தலைமை, கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிவிட்டது. அந்தப் புகைச்சல் தி.மு.க. பிரசாரத்தில் எதிரொலிக்கிறது. துரைமுருகனின் ஆதரவாளர்கள் பலரும் ஏனோ தானோ என்றுதான் வேலை செய்கிறார்கள். தேர்தல் நேரத்தில் நிர்வாகிகள் சிலரைக் கட்சியைவிட்டு நீக்கியது, தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் அப்துல் ரஹ்மான் அதைப்பற்றிக் கவலைப்படாமல் சுற்றிச் சுழல்கிறார். ஜமாத் ஓட்டுகள் எப்படியும் தன்னைக் கரை சேர்த்துவிடும் என்பது அப்துல் ரஹ்மானின் நம்பிக்கை. ஆம்பூர், வாணியம்பாடி தொகுதிகளில் பெருவாரியாக உள்ள முஸ்லிம் ஓட்டுக்கள் அப்துல் ரஹ்மானுக்குப் ப்ளஸ்.
செலவைப் பற்றி கவலையே படாமல் பலம்காட்டுகிறார் ஏ.சி.சண்முகம். பா.ம.க-வும், தே.மு.தி.க-வும் இங்கே சளைக்காமல் வேலை செய்கின்றனர். சின்னத்திரை பிரபலங்கள் பலரும் சண்முகத்துக்காகத் தொகுதியில் ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள். இதனால், ஏறுமுகத்தில் நடைபோடுகிறார் சண்முகம். படித்தவர்கள், மத்தியத்தர வர்க்கத்தினர் வாக்குகளை மொத்தமாக அள்ள முடியும் என்று சண்முகம் நினைக்கிறார்.
போட்டி இவர்கள் இருவருக்குள் பலமாக இருக்க... திருவிழாவில் காணாமல்போன குழந்தையைப்போல தவிக்கிறார் அ.தி.மு.க. வேட்பாளர் செங்குட்டுவன். மேயர் கார்த்தியாயினி மீதுள்ள அதிருப்தி, சர்ச்சைக்குரிய வேட்பாளர், பிரசாரத்தில் சுணக்கம், மின்வெட்டு பிரச்னை என அத்தனை பாரங்களும் அ.தி.மு.க. வேட்பாளர் மீது ஏறியுள்ளது. அதை சுமக்கவே முடியாமல் தடுமாறுகிறார் அவர்.
காங்கிரஸ் காட்சியோ இவர்கள் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தனி ரூட்டில் 'உங்கள் பொன்னான வாக்குகளை...’ என்றபடி சுற்றி வந்துகொண்டு இருக்கிறது. வேலூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் போட்டியிடாததால் ஆம் ஆத்மி வேட்பாளருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
கூட்டணி பலம், மோடியின் அலை, சண்முகத்தின் பண பலம், சுறுசுறுப்பான தேர்தல் வேலைகள் என அத்தனையும் சேர்ந்து வேலூர் தொகுதி சண்முகத்துக்கு சபாஷ் சொல்ல வைக்கும்!

       

ஆந்திரா, கர்நாடகம் ஆகிய இரண்டு மாநில எல்லைகளைத் தொடும் தொகுதி கிருஷ்ணகிரி.
பி.ஜே.பி. கூட்டணியில் பா.ம.க. சார்பில் ஜி.கே.மணியும், அ.தி.மு.க-வில் அசோக்குமாரும், தி.மு.க-வில் சின்னபில்லப்பாவும் களமிறங்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் டாக்டர் செல்லக்குமார்.
பி.ஜே.பி. கூட்டணி அமைவதற்கு முன்பே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஜி.கே.மணி. அதனால் கடந்த நான்கு மாதங்களாக தொகுதியை நான்கு ரவுண்டு வந்துவிட்டார். மணி மாநிலத் தலைவராகவும் இருப்பதால் தொகுதி மக்களிடம் நல்ல அறிமுகம் இருக்கிறது. மோடி, விஜயகாந்த்தின் பிரசாரம் மணிக்கு கூடுதல் பலம். 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சிதான் அமையும். பா.ம.க. இங்கே ஜெயித்தால் நீங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்!’ என்று கிராமம் கிராமமாகப் பிரசாரம் செய்கிறது பா.ம.க. அதற்கும் நல்ல ரெஸ்பான்ஸ்.
அ.தி.மு.க. வேட்பாளர் அசோக்குமார் தொகுதி முழுக்க அறிமுகம் இல்லாதவர். அமைச்சர் கே.பி.முனுசாமியின் தீவிர ஆதரவாளர். அ.தி.மு.க-வுக்காக இருக்கும் வாக்கு வங்கி எப்படியும் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை முனுசாமிக்கு. கிராமங்களில் ஆளுங்கட்சிக்கு எதிரான பிரச்னைகள் இங்கேயும் எதிரொலிக்கிறது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லாமல், அசோக்குமாரும் முனுசாமியும் கைகோத்தபடி தொகுதியை வலம் வருகிறார்கள்.
இங்கே சிட்டிங் எம்.பி-யாக இருந்தவர் தி.மு.க-வின் சுகவனம். ஸ்டாலினுக்கு செல்லப்பிள்ளை. ஆனாலும், தொகுதிக்குள் இவருக்கு நல்லபிள்ளை என்ற பெயர் இல்லை. அதனால்தான் மாநில அரசியலில் கவனம் செலுத்துவதாகச் சொல்லி ஒதுங்கிவிட்டார் சுகவனம். தற்போது வேட்பாளர் ஆகியிருக்கும் சின்னபில்லப்பா கட்சிக்காரர்களுக்கே அறிமுகம் இல்லாத புதுமுகம். சுகவனம் மீது இருக்கும் அதிருப்திகள் சின்னபில்லப்பாவுக்குத்தான் சிக்கலை உண்டாக்கும்.
ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் காங்கிரஸுக்கு கணிசமான வாக்கு வங்கி உண்டு. அதை நம்பித்தான் அந்தக் கட்சி செல்லக்குமாரை அங்கே நிறுத்தியிருக்கிறது. செல்லக்குமாரும் பிரசாரத்தைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறார். கௌரவமான வாக்குகளுடன் நிச்சயமாக டெபாஸிட் வாங்குவார் என்று அடித்துச் சொல்கிறார்கள் கதர் வேட்டிகள். அதேபோல கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இங்கே குறிப்பிட்ட செல்வாக்கு உண்டு. தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்​சந்திரன் மீது அ.தி.மு.க. ஆட்சியில் வழக்குகள் பாய்ந்தது. இதனால் கோபத்தில் இருக்கிறார்கள் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள். கிருஷ்ணகிரியில் அசோக்குமார்தான் அசத்துகிறார். 

ad

ad