புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2014

உலகக் கிண்ண வெற்றி வீரர்களுக்கு பாராளுமன்றத்தில் பெரு வரவேற்பு:

சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பிக்கள் சபையில் வாழ்த்துரை: புகழாரம்
உலகக்கிண்ண வெற்றி வீரர்களுக்கு நேற்று பாராளுமன்றத்தில் வரவேற்பளிக்கப் பட்டதோடு, வாழ்த்துக்களும் தெரிவிக்கப் பட்டன.நேற்று பிற்பகல் 4.30 அளவில் அதிசொகுசு பஸ் வண்டியில்
பாராளுமன்ற வளாகத்தை வந்தடைந்த கிரிக்கெட் வீரர்கள் பாராளுமன்ற சபாநாயகர் கலரிக்கு அழைத்து வரப்பட்டனர். அதனையடுத்து விசேட பிரேரணையொன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டதோடு அமைச்சர்கள், எம்.பிக்களின் வாழ்த்துரைகளும் இடம்பெற்றன.

முன்னதாக பாராளுமன்ற வளாகத்தை வந்தடைந்த உலகக்கிண்ண வீரர்களை பிரதான விருந்தினர் நுழைவாயில் அருகே பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க ஆகியோர் தலைமையிலான குழுவினர் இலங்கை அணியினரை வரவேற்றனர்.
பிரதான நுழைவாயில் இருபுறமும் பாடசாலை மாணவர்கள், பாராளுமன்ற ஊழியர்களின் மகிழ்ச்சி ஆரவாராத்துக்கு மத்தியில் பாராளுமன்றத் திற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். பாராளுமன்றத்திலுள்ள சபாநாயகர் கலரிக்கு கிரிக்கெட் வீரர்கள் அழைத்துச் செல்லப்பட்ட போது சபாநாயகர் ஆசனத்தில் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் நியதிச்சட்டம் தொடர்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
4.45 மணியள வில் நியதிச் சட்டங்கள் திருத்த ங்களுடன் நிறைவேற்றப் பட்டது. இதனையடுத்து சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சபாநாயகர் ஆசனத்துக்கு வந்தார். சரியாக 5.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, இலங்கை கிரிக்கெட் அணி சபாநாயகர் கலரியில் அமர்ந்துள்ளனர் என்றும் இந்தச் சபை அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது என்றும் அறிவித்தார்.
இதனையடுத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பிரேரணையை சமர்ப்பித்து பேசினார். இதனையடுத்து எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோன் அமரதுங்க பிரேரணையை முன்மொழிந்து பேசினார். தொடர்ந்து எதிர்த்தரப்பு, ஆளும்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் உரையாற்றி னார்கள்.
1996ஆம் ஆண்டுக்கு பின்னர் 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி கொண்டு இலங்கையின் பெயரை உலக அரங்கில் மிளிரச் செய்த இலங்கை கிரிக்கெட் அணிக்கும் பயிற்றுவிப்பாளர்கள், தெரிவுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த பாராளுமன்றம் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சபாநாயகர் கலரியில் அமர்ந்திருக்கும் வேளையில் அவர்களை பாராட்டுவதற்காக வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக இந்தப் பிரேரணையை சபையில் மிகவும் பெருமையுடன் சமர்ப்பிக்கிறேன் என சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
நேற்று மாலை 5.00 மணியளவில் லசித் மாலிங்க தலைமையிலான கிரிக்கெட் அணியினர் அமர்ந்திருக்க சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அவர்களை வரவேற்று பிரேரணையை சமர்ப்பிக்குமாறு சபை முதல்வரை பணித்தார். 1996ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை அணி கலந்து கொண்ட அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் திறமையை உலகிற்கு எடுத்துக் காட்டியது.
உலகில் எந்த விளையாட்டரங்கில் தாங்கள் விளையாடினாலும் அவர்களது ரசிகர்கள் அவர்களை ஊக்குவித்து வருகிறார்கள். இந்த நாட்டின் பெருமையை, உலகெங்கும் பறை சாற்றி இருக்கிறார்கள். இன, மத, மொழி பேதமின்றி அனைவரும் இன்று எமது அணியை அன்பாக வரவேற்கிறார்கள்.
அவர்களை இந்த சபைக்கு அழைத்து அவர்கள் முன்னாலேயே ஒரு பிரேரணையை சபையில் சமர்ப்பித்து அவர்களை வாழ்த்துவதற்கு வழங்கிய சந்தர்ப்பத்திற்காக சபாநாயகர் அவர்களுக்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் கலந்து கொண்ட வீரர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக விளையாடாமல் அணிக்காக ஒன்றிணைந்து செயற்பட்டார்கள்.
அணிக்கு தேவையான நேரத்தில் தனது தலைமைப்பதவியை விட்டுக் கொடுத்து செயற்பட்ட தினேஷ் சந்திமாலுக்கும் நாம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். அத்துடன் சிரேஷ்ட வீரர்களுக்கு என்னதான் மன உளைச்சல்கள் இருந்தாலும் அதனை பொருட்படுத்தாது அணிக்காக செயற்பட்டதையும் மறக்க முடியாது என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்தார்.
இலங்கை மக்களுக்கும் எமது தாய் நாட்டிற்கும் கீர்த்தி மிக்க பெயரை பெற்று தந்து உலக சாம்பியனாக திகழும் இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு பாராளுமன்றத்தின் ஆளும் மற்றும் எதிர்தரப்பு சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அவர்கள் பிரேரணையின் இறுதியில் தெரிவித்தார். குழு உணர்வு அர்பணிப்பு பரஸ்பர ஒத்துழைப்பு ஐக்கியம் மற்றும் ஒருமைப்பாட்டை கடைப்பிடித்ததாலேயே இந்த வெற்றியை பெற முடிந்தது.
எதிர்வரும் உலக கிண்ணத்தை சுவீகரிக்கும் இலக்கு வரை இந்த ஒற்றுமை தொடர வேண்டும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார். அத்துடன் அணியினருக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்க பிரார்த்திப்பதாகவும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட வாழ்த்து பிரேரணையின் பிரதிகளை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் உட்பட அனைவருக்கும் அனுப்பி வைக்குமாறும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு சபாநாயகர் பணிப்புரை விடுத்தார்.

ad

ad