புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2014

பாலியல் வல்லுறவு விவகாரம் ரோசியுடன் கரலியத்த வாய்த்தர்க்கம்

சிறுவர் - சிறுமியர் - யுவதிகள் - பெண்கள் மீதான துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வல்லுறவுகள் தொடர்பில் இன்று வியாழக்கிழமை ஐக்கிய தேசியக்கட்சியினால் எழுப்பப்பட்ட
கேள்வியால் சபையில் அமளி  ஏற்பட்டுள்ளது.
அதன்போது  ரோசிசேனாநாயக்க எம்.பி.யும் அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவும் கடும் வாய்த்தர்க்கத்தில்  ஈடுபட்டனர்.
பாராளுமன்றம் இன்று வியாழக்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் பிற்பகல் ஒருமணிக்கு கூடியது. சபையின்  பிரதான நடவடிக்கைகளின் பின்னர் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  ரோசிசேனாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்வியை அடுத்தே மேற்படி அமளி  ஏற்பட்டது.
முன்னதாக இடைக்கேள்வியொன்றை எழுப்பிய ரோசிசேனாநாயக்க எம்.பி.   சிறுவர் - சிறுமியர் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கும்   பாலியல் வல்லுறவுகளுக்கும் உட்படுத்தப்படுவது தொடர்பில் 26 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சரே இந்த சபையில் கூறியிருக்கின்றார்.
பெண்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்ற ரீதியிலே நான் இந்த கேள்வியை எழுப்புகின்றேன்.
மேற்படி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தப்பித்து வருகின்றனர். அதன் பின்னணியில் அரசியல் சக்தி இருக்கின்றதா? இவர்கள் மீது எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் என்ன? குற்றவாளிகள் தண்டனைக்குட்படுத்தப்படுகின்றனரா போன்ற கேள்விகளைத் தொடுத்தார்.
திஸ்ஸ கரலியத்த
எனினும் இதற்குப்பதிலளித்த சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த கூறுகையில்:- ரோசி எம்.பி.யினால் கேட்கப்பட்ட கேள்வியானது பொருத்தமில்லாததாகும். எனவே அதற்குப்பதிலளிக்க முடியாது எனக்கூறினார்.
அமைச்சர் கரலியத்த இவ்வாறு கூறியதையடுத்து ரோசி எம்.பி. மீண்டும் மீண்டும் கேள்விகளை தொடுத்துக் கொண்டிருந்தார். பின்னர் அவருக்கான கேள்வி நேரம் முடிவடைந்த பின்னர் ரோசி எம்.பி. ஆளும் தரப்பைப்பார்த்து ஏதோ ஆவணம் ஒன்றைக் காட்டி கூறவே ஆவேசமடைந்த அமைச்சர் திஸ்ஸ கரலியத்த உச்ச குரலில் ரோசி எம்.பி. யைப்பார்த்து ஆவேசமாகக் கத்தினார்.
இதனால் சபையில் பெரும் அமளி நிலையேற்பட்டது.
 அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவுடன் பிரதியமைச்சர் லலித் திசாநாயக்க ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி ஆகியோர் இணைந்து  சத்தமிட்டனர்.
மறுபுறத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ரோசி சேனாநாயக்க, சஜித் பிரேமதாச, புத்திக்க பத்திரன அஜித் பி. பெரேரா ஆகிய எம்பி.க்களும் ஏதேதோ சத்தமாக  கூறி கத்தினர்.
எனினும் ரோசி எம்பியும் அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவும் நீண்ட நேரமாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதையும் அவதானிக்க முடிந்தது.

ad

ad