செவ்வாய், ஏப்ரல் 08, 2014

டெல்லி பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் 'பளார்'; முகம், கண் வீங்கியது!

புதுடெல்லி: டெல்லியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டெல்லியின் சுல்தான்பூரி என்ற இடத்தில் கெஜ்ரிவால் இன்று  தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வ வீதியாக நகர்வலம் வந்து வாக்கு சேகரித்தார். அவர்
செல்லுமிடங்களில் எல்லாம் கட்சியினர் குவிந்தனர். அவருக்கு மாலை அணிவித்து உற்சாகப்படுத்தி, தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

மேலும்   தொண்டர்கள் கெஜ்ரிவாலுக்கு மாலை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், அடையாளம் தெரியாத ஒரு நபர்,  கெஜ்ரிவாலுக்கு மாலை அணிவித்தபடியே, 'பளார்' என்று அவரது கன்னத்தில் இரண்டு முறை மாறி மாறி அறைந்து விட்டார்.  அவர் ஆட்டோ டிரைவர் என்று விசாரணையில் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆம் ஆத்மி கட்சியினர், அந்த நப
ரை பிடித்து அடித்து உதைத்தனர். அதனை பார்த்த கெஜ்ரிவால் அந்த நபரை விட்டுவிடுமாறு கூறினார். இதனையடுத்து அந்த நபர் போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.
கண், முகம் வீங்கி சென்ற கெஜ்ரிவால்
இதனிடையே ஆட்டோ டிரைவர் தாக்கியதால் கெஜ்ரிவாலின் ஒரு கண்ணும், முகமும் வீங்கியது. அடிவாங்கியதினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர் தனது பிரசாரத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு திரும்பினார்.

கடந்தவாரம்தான் டெல்லியில் தாக்‌ஷின்பூரியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கெஜ்ரிவால் இதேபோன்று தாக்கப்பட்டார். அதற்கு முன் வாரணாசியிலும், ஹரியானா மாநிலம் பிவானி என்ற இடத்திலும் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி மீது குற்றச்சாட்டு
இந்நிலையில் தம்மீதான தாக்குதலுக்கு பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிதான் காரணம் என மறைமுகமாக சாடியுள்ள கெஜ்ரிவால், " பிரதமராக வருவதற்கு ஏன் சிலர் வன்முறையை தூண்டுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. எங்களை தாக்குவதன் மூலம் நாங்கள் அமைதியாகிவிடுவோம் என்று நீங்கள் நினைத்தீர்களென்றால், உங்களது எண்ணம் தவறானது. கடைசி மூச்சு இருக்கும்வரை இந்த களத்தில் நாங்கள் போராடுவோம்.
கடந்த சில நாட்களில் என் மீது நடத்தப்பட்ட 5வது தாக்குதல் இது. என்னை தாக்கிய அனைவரையும் நான் மன்னித்துவிட்டேன். எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. கடவுள் கூப்பிடும் நாளில் நான் புறப்பட வேண்டியது தான். என்னை யாராலும் காப்பாற்ற முடியது. நான் ஏன் தொடர்ந்து தாக்கப்படுகிறேன, இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார், அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என கேள்வி எழுந்துள்ளது.
இதுபோன்ற செயல்கள் மூலம் நாட்டில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றால், நானே நேரில் வருகிறேன். வரும் நாட்களில் எங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும். எங்களை தீர்த்துக்கட்ட கூட முயற்சிகள் எடுக்கப்படலாம். ஆம் ஆத்மி தொண்டர்கள் ஆத்திரத்தில் வன்முறையில் ஈடுபடுவது எனக்கு பிடிக்கவில்லை. அதிருப்தியடைகிறேன். எது நடந்தாலும் பொறுமையுடன் இருக்க அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.