செவ்வாய், ஏப்ரல் 08, 2014

 பசில் ராஜபக்சவின்  வேண்டுகோளை நிராகரித்த முதல்வர் விக்னேஸ்வரன் 
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை நேரில் சந்தித்துப் பேச விரும்புவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், ஜனாதிபதியின் சகோதரருமான பஸில் ராஜபக்­ச  விடுத்த  வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று நம்பகமாகத் தெரியவருகிறது.
மத்திய அரசுக்கும், மாகாண அரசுக்கும் இடையிலான உறவுகள் சுமுகமாக இல்லாத நிலையில், அது குறித்துப் பேசுவதற்காகவே இந்தச் சந்திப்புக்காக அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
எனினும் ஏற்கனவே ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுக்கு எந்தப் பயனுமே கிட்டாத நிலையில் இந்தச் சந்திப்புக்கு முதலமைச்சர் விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டது.
வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியையும், வடமாகாண  பிரதம செயலாளர் விஜயலக்சுமி ரமேஷையும் உடனடியாக மாற்றம் செய்யுமாறு ஜனாதிபதியைச் சந்தித்து நேரில் கோரிக்கை விடுத்திருந்தார் முதலமைச்சர்.
சந்திப்பின்போது அதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார் ஜனாதிபதி. ஆனால் அவரது உறுதிமொழி எதுவும் செயற்படுத்தப்படவில்லை.
இது குறித்துப் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்திருந்த முதலமைச்சர், பேசும் போது ஜனாதிபதி நன்றாகத்தான் பேசுகிறார். ஆனால் பின்னர் எதனையும் செய்வதில்லை என்று கவலைப்பட்டிருந்தார்.
இந்தப் பின்னணியிலேயே அமைச்சர் பஸிலின் சந்திப்பையும் அவர் நிராகரித்து விட்டார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு நேர்மையாகச் செயற்படுவதை செயலில் காட்டாத வரையில், இத்தகைய சந்திப்புக்களால் பயன் ஏதும் இல்லை என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் நினைக்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.