புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2014

ரஜினி அலை... மோடி வலை!
மீண்டும் ரஜினி வாய்ஸ் கிளம்புகிறது.



இந்தியா முழுக்க சூறாவளி சுற்றுப்பயணம் செய்து 200 கூட்டங்களுக்கு மேல் பேசியாக வேண்டும் என்ற நெருக்கடி உள்ள நரேந்திர மோடி, ஒரு தனி மனிதரைச் சந்திக்க நேரம் ஒதுக்கி வருகிறார் என்றால், அங்கேதான் நிற்கிறார் ரஜினி. அவர் எப்போதும் பி.ஜே.பி.
அனுதாபியாகத் தன்னை அடையாளம் காட்டிக்கொள்பவர்தான். ஆனால், வெளிப்படையாக அரசியல்வாதிகளைச் சந்திப்பதும் இல்லை; பரபரப்புச் சூழ்நிலையில் தன்னை அடையாளம் காட்டிக்கொள்வதும் இல்லை. இந்த நிலையில் மோடி தனது வீட்டுக்கு வருவதை மனப்பூர்வமாக ரஜினியே விரும்பி இருக்கிறார் என்று உள்விவரங்களை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
மார்ச் 24-ம் தேதி நாகார்ஜுனா, பவன் கல்யாண் இருவரும் மோடியை சந்தித்துப் பேசினார்கள். அந்த சமயத்தில் ரஜினியைப் பற்றி பேச்சு வந்திருக்கிறது. 'தமிழ்நாட்டில் ரஜினி நம்முடன் இருந்தால், நம் கூட்டணிக்குப் பலமாக இருக்கும். ரஜினியிடம் நான் பேசுறேன். நீங்கள் தமிழ்நாட்டுக்குப் பிரசாரத்துக்குப் போகும்போது அவரைச் சந்திக்கவும் ஏற்பாடு பண்றேன்’ என்று மோடியிடம் சொல்லியிருக்கிறார் நாகார்ஜுனா. 'ரஜினியை எனக்கே தெரியுமே! ஆஸ்பத்திரியில் இருந்தபோது சென்னை சென்று, அவரது உடல் நிலையை விசாரித்து உள்ளேனே... தமிழகத்தில் அவர் நமக்கு ஆதரவு தெரிவித்தால் நன்றாக இருக்கும்’ என்று மோடியும் ஓகே சொல்ல... அடுத்தடுத்த வேலைகள் ஆரம்பமானது.
ரஜினியிடம் நாகார்ஜுனா பேசியிருக்கிறார். 'குஜராத்தில் அவர் திறமையான ஆட்சியை வழங்கி வருகிறார். இன்றைய இந்தியாவுக்கு மோடியைப்போன்ற தைரியசாலியான தலைவர் தேவை. ஆனா, வெளிப்படையா நான் வாய்ஸ் கொடுக்கிறது சரியா இருக்குமா...?’ என்று தயக்கத்துடன் பேசினாராம் ரஜினி. 'உங்களை நான் கட்டாயப்படுத்தலை. மோடிஜி சென்னைக்கு வரும்போது, உங்களை சந்திக்கணும்னு ஆசைப்படுறாரு. இதுவரைக்கும் நான் உங்ககிட்ட எதுவும் கேட்டது இல்லை. எனக்காக நீங்க இந்த சந்திப்புக்கு ஒப்புக்கணும். நீங்க சொல்ற தேதியிலயே சந்திப்புக்கு ஏற்பாடு பண்றேன்!’ என்று நாகார்ஜுனா சொல்ல... ரஜினியால் மறுக்க முடியவில்லை.
ரஜினி தேதி சொன்ன பிறகே, மோடியின் சென்னை நிகழ்ச்சி உறுதி செய்யப்பட்டது. போயஸ் கார்டன் வீட்டிலேயே சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மோடியே தனது வீட்டுக்கு வர ஒப்புக்கொண்டார் என்றதும், ரஜினிக்கு அதிகப்படியான சந்தோஷம். மதியம் சாப்பாட்டுக்கு வருமாறு ரஜினி அழைப்பு விடுத்தார். 'அன்றைய தினம் கர்நாடக மாநிலத் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு மாலை 5 மணிக்கு மேல்தான் சென்னை வர முடியும்’ என்று மோடி தரப்பில் இருந்து சொல்லியிருக்கிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.55 மணிக்கு விமானநிலையத்துக்கு மோடி வருகிறார்; 5.30 மணிக்கு ரஜினி வீட்டுக்கு வருகிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால், மோடி வந்த விமானம் 50 நிமிடங்கள் தாமதம் ஆனது. அன்றைய தினம் கரூர், பெரம்பலூர் கூட்டம் முடித்துவிட்டு, 6.05 மணிக்கு வர வேண்டிய ஜெயலலிதா 5.30 மணிக்கே வந்துவிட்டார். ஜெயலலிதா விமானநிலையத்துக்கு வந்து 15 நிமிட இடைவெளியில் மோடியும் வந்துவிட்டார். இரண்டு வி.வி.ஐ.பி-க்கள் விமானநிலையத்துக்குள் இருந்தால், பரபரப்பு பற்றிக்கொள்ளும் அல்லவா? போலீஸார் பதற்றமாக இருந்தார்கள். மோடி விமானம் வந்த சில நிமிடங்களிலேயே ஜெயலலிதாவின் தனி விமானமும் வந்தது. மோடி சில நிமிடங்கள் வி.ஐ.பி. அறையில் இருந்தார். ஜெயலலிதாவின் கார் கார்டனுக்குப் புறப்பட்டுச் சென்ற பிறகுதான் மோடி கார் கிளம்பியது. வேதா இல்லத்துக்குள் ஜெயலலிதா சென்ற பிறகு போயஸ் ஏரியாவுக்குள் மோடியின் கார் வந்தது.
மோடி - ரஜினி சந்திப்புக்காக  போயஸ் கார்டன் ஏரியாவுக்குள் ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிய ஆரம்பித்தார்கள். அவர்களை பல கெடுபிடிகளுக்குப் பிறகே கார்டன் ஏரியாவுக்குள் போலீஸ் அனுமதித்தது. நேரடி ஒளிபரப்பு வசதிகொண்ட ஓபி வாகனங்களை அந்தப் பகுதிக்குள் அனுமதிக்காமல் கெடுபிடி செய்தார்கள்.
6.35 மணிக்கு ரஜினி வீட்டுக்குள் மோடி நுழைந்தார். தமிழ்நாட்டுக்கு வருவதால் வேட்டி அணிந்து வந்திருந்தார் மோடி. அவரை வாசலுக்கு வந்து வரவேற்றார் ரஜினி. கிட்டத்தட்ட அரை மணி நேரம் சந்திப்பு நிகழ்ந்தது. உள்ளே நுழைந்த மோடிக்கு ரஜினி சால்வை அணிவித்தார். தன்னுடைய உடல்நிலை பற்றித்தான் அதிகமாக சொல்லிக்கொண்டு இருந்தாராம் ரஜினி. மோடியும் அக்கறையுடன் கேட்டுள்ளார். அதன் பிறகு, 'நீங்கள் அடைய நினைக்கும் லட்சியம் நிச்சயம் நிறைவேறும்’ என்று ரஜினி சொல்லியிருக்கிறார்.
''நான் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தபோது வாரா வாரம் விசாரித்தார் மோடி. 'நீங்கள் எப்போது சென்னை வந்தாலும் என் வீட்டுக்கு வந்து டீ சாப்பிட்டுச் செல்ல வேண்டும்’ என்று சொன்னேன். அதனைத் தட்டாமல் வந்தார்'' என்று சொன்ன ரஜினி, ''மோடி தைரியமான தலைவர், நிர்வாகத் திறன் கொண்டவர். அவர் என்ன நினைக்கிறாரோ, அதனை அடைய என்னுடைய வாழ்த்துக்கள். அவரது லட்சியம் நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள்'' என்று பட்டும் படாமலும் ரஜினி சொன்னார்.
''இந்தச் சந்திப்புக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்று ரஜினி சொன்னாலும், இந்த நேரத்தில் மோடியை தன் வீட்டுக்கு வரவைத்து ரஜினி சந்தித்தது பி.ஜே.பி. கூட்டணிக்கான அவரது மனப்பூர்வமான ஆதரவாகப் பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து வரப்போகும் பி.ஜே.பி. தலைவர்களும் ரஜினியைச் சந்திப்பார்கள் என்றும் தேர்தல் தேதி நெருங்கும்போது ரஜினி வெளிப்படையாக வாய்ஸ் கொடுப்பார் என்றும் பி.ஜே.பி. தரப்பு சொல்லி மற்ற கட்சிகளை பி.பி. எகிறவைக்கிறது!

ad

ad