புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2014

படையினரால் கொல்லப்பட்ட மூவரது சடலங்களும் அனுராதபுரவில் சிறிலங்கா அரசால் அடக்கம்

நெடுங்கேணிக்குத் தெற்கே வெடிவைத்தகல்லு என்ற இடத்தில் சிறிலங்காப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கோபி, அப்பன், தேவிகன் ஆகிய மூவரதும் சடலங்கள் இன்று அனுராதபுர மயானத்தில் அவசர அவசரமாக சிறிலங்கா காவல்துறையினரால் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயன்றவர்கள் என்று கூறி தேடப்பட்டு வந்த இவர்கள் மூவரும் நேற்று அதிகாலை வெடிவைத்த கல்லு காட்டுப்பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாக சிறிலங்கா படைத்தரப்பு அறிவித்திருந்தது.

இவர்களின் சடலங்கள், பதவியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மரண விசாரணைகளுக்காக அனுராதபுர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் அனுராதபுர விஜிதபுர மயானத்தில் மூவரது சடலங்களும் அரசாங்க செலவில் அடக்கம் செய்யப்பட்டதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.

மூவரினதும் சடலங்களை அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டியதாகவும், நீதிமன்ற விசாரணைகளின் பின்னரே சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கெப்பிற்றிகொல்லாவ நீதிவான் மரண விசாரணையை நடத்தியதாகவும், அவரது உத்தரவுக்கமைய அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார் என்றும் சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நீதிவானின் உத்தரவுக்கமைய இந்தச் சடலங்கள் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்ட போதிலும், இறந்தவர்களை அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டுவதற்கும், இறுதிச் சடங்கில் அவர்கள் பங்குபற்றுவதற்கும், அவரவர் கலாசாரத்திற்கமைவாக கிரியைகளை மேற்கொள்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த இறுதிச் சடங்கில் இறந்தவர்களின் நெருங்கிய குடும்ப உறவினர்கள் கலந்து கொண்டார்களா என்பது பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

எனினும், கோபி என்று படையினரால் குறிப்பிடப்படுகின்ற செல்வநாயகம் கஜீபனின் மாமனராகிய செகராசசிங்கம் பாலகுருபரன், கஜீபனின் சடலத்தைப் பார்வையிட்ட போதிலும், இறுதிச்சடங்கில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும், தனது மகள் மற்றும் கஜீபனின் தாயார் ஆகியோர் கலந்து கொண்டார்களா இல்லையா என்பது பற்றிய தகவல் தனக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், தாம் அனுராதபுரம் வைத்தியசாலைக்குச் சென்று பயங்கரவாதப் புலனாய்வு பொலிசாரின் அனுமதி பெற்று செல்வநாயகம் கஜீபன் என்ற தனது மருமகனின் உடலைப் பார்வையிட்டதாக திருகோணமலை பாலைக்குழியில் உள்ள செகராசசிங்கம் பாலகுருபரன் பிபிசியிடம் தெரிவித்தார்.

கஜீபனின் உடலில் இடது கை, நெஞ்சுக்குக் கீழ்ப்பகுதி மற்றும் அடிவயிறு ஆகிய இடங்களில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும், தான் சென்று பார்ப்பதற்கு முன்பாக, பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகள் சர்மிளா மற்றும், கஜீபனின் தாயார் ஆகியோர் அழைத்து வரப்பட்டு, அவர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டிருந்தாகவும் பாலகுருபரன் கூறினார்.

ad

ad