சனி, ஏப்ரல் 05, 2014

வட மாகாண பிரச்சினைகள்: சிங்கப்பூர் அமைச்சருக்கு விளக்கிய விக்னேஸ்வரன்
வடக்கு மாகாண சபை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் சட்ட அமைச்சர் கே. சண்முகத்திடம் விளக்கியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் அமைச்சர், இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அவர், முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
வடக்கு மாகாண சபை நிர்வாகத்தை திறம்பட செய்ய முடியாதுள்ளதாகவும் அரசாங்கத்தின் செயற்பாடுகளே இதற்கு காரணம் எனவும் முதலமைசசர் விக்னேஸ்வரன், சிங்கப்பூர் அமைச்சரிடம் கூறியதாக யாழ் தகவல்கள் தெரிவித்தன.
வடக்கு மாகாண சபையின் முன்நகர்வுக்கு அரசாங்கம் பல தடைகளை ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை சிங்கப்பூர் ஏனைய நாடுகளின் விவகாரங்களில் தலையிடாது எனவும் ஏனைய நாடுகளின் இறையாண்மையை சிங்கப்பூர் மதிப்பதே இதற்கு காரணம் எனவும் அமைச்சர் சண்முகம் கூறியுள்ளார்.
யாழ். நூலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் சண்முகம், யாழ் நூலகத்திற்கு பஸ் ஒன்றையும் அன்பளிப்புச் செய்தார்.
யாழ்ப்பபாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் சண்முகம், வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியையும் சந்தித்தார்.
ஆளுநருடனும், முதலமைச்சருடனும் சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு