புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014


தர்மபுரியில் நடக்கப் போவது சாதிப் போட்டி. இந்தத் தொகுதியில் வன்னியர்களும் தாழ்த்தப்பட்டவர்களுமே அதிகம்.

 அ.தி.மு.க. சார்பில் மோகனும் தி.மு.க. சார்பில் சிட்டிங் எம்.பி-யான தாமரைச்செல்வனும் பா.ம.க. சார்பில் அன்புமணியும் காங்கிரஸில் ராமசுகந்தனும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் அனைவருமே வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
ஓர் ஆண்டுக்கு முன்பே இங்கு அன்புமணியை நிறுத்துவது என்று முடிவெடுத்து அதற்கான வேலைகளை பா.ம.க-வினர் செய்து வந்தனர். கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த அடுத்த நாளே தர்மபுரியின் ராஜா பேட்டையில் வீடு எடுத்து, பிரசாரம் செய்துவருகிறார் அன்புமணி. அவருக்கு ஆதரவாக அவரது தந்தை ராமதாஸ், சகோதரி கவிதா, மனைவி சௌம்யா எனக் குடும்ப உறுப்பினர்கள் தீவிரப் பிரசாரம் செய்கின்றனர். சாதி பலம், ராமதாஸின் மகன் என்ற அந்தஸ்து, முன்னாள் அமைச்சர் என்ற அறிமுகம் என்பவை ப்ளஸ். தாழ்த்தப்பட்டவர்களின் எதிர்ப்பு மைனஸ். தர்மபுரியில் அன்புமணி நிற்கிறார் என்பதைவிட, தர்மபுரியில் பா.ம.க. ஜெயிக்க வேண்டும் என்பது அக்கட்சியினரின் மானப் பிரச்னையாக மாறி உள்ளதால் பாட்டாளிகளின் தேர்தல் வேலைகள் பரபரப்பாக இருக்கின்றன.
அ.தி.மு.க. சார்பாகப் போட்டியிடும் மோகன், முதல்வரின் நலத்திட்டங்களைச் சொல்லி பிரசாரம் செய்கிறார். அரசு மீது வன்னியர்களிடம் இருக்கும் கோபம், குடிநீர் வசதி செய்து தராமல் இருப்பது ஆகியவை அ.தி.மு.க-வுக்குப் பாதகமாக இருக்கிறது.
தி.மு.க. சார்பாகப் போட்டியிடும் தாமரைச்செல்வனுக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு கொடுத்திருக்கிறது. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கலப்புத் திருமணம் செய்தவர். இவரது மனைவி கீதா தலித் பகுதிகளுக்குச் சென்று, 'உங்க வீட்டு மருமகனுக்குத்தான் நீங்கள் ஓட்டுப் போட வேண்டும்’ என்று பிரசாரம் செய்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதியில் தாமரைச்செல்வன் பெரிதாகத் திட்டங்களை நிறைவேற்றவில்லை என்று அ.தி.மு.க-வினர் பிரசாரம் செய்கிறார்கள்.
காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ராமசுகந்தன், முன்னாள் அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன்.  ''எங்க அப்பா இந்தத் தொகுதியில் போட்டியிட்டு உங்களுக்கெல்லாம் பாடுபட்டாரு. அவர் பையனான எனக்கு ஆதரவு தாங்க'' என்று அப்பா பெயரை வைத்தே வாக்குக் கேட்டு வருகிறார். இது ஒன்று மட்டுமே இவருக்கு ப்ளஸ்.  
இறுதி நிலவரப்படி, பி.ஜே.பி. கூட்டணி பலம், சாதி செல்வாக்கு, பா.ம.க-வினரின் பலமான வேலைகள் என அன்புமணியின் கையே ஓங்கியிருக்கிறது.
 ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் இருந்துதான் தி.மு.க-வின் முதல் எம்.பி-யான இரா.தர்மலிங்கம் நாடாளுமன்றம் சென்றார். அது இன்னமும் தி.மு.க-வின் கோட்டையாகவே இருக்கிறது.
தி.மு.க. சார்பில் சி.என்.அண்ணாதுரை, அ.தி.மு.க. சார்பில் ஆர்.வனரோஜா, பா.ம.க. சார்பில் கோ.எதிரொலி மணியன், காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுப்ரமணியன் ஆகியோர் களத்தில் இருந்தாலும், போட்டி என்னவோ தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும்தான்.
கடந்த ஆட்சிக் காலத்தில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைக் கொண்டுவந்தது, பல ஆரம்ப சுகாதார நிலையங்களை மருத்துவமனையாக தரம் உயர்த்தியது என திருவண்ணாமலை பகுதிக்கு பல நலத்திட்டங்கள் கொண்டுவந்ததைச் சொல்லி அண்ணாதுரைக்காக வாக்கு சேகரிக்கிறார் எ.வ.வேலு. திருவண்ணாமலை மற்றும் கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் கணிசமான அளவில் இருக்கும் முஸ்லிம் வாக்குகள் தி.மு.க. வேட்பாளருக்கு பலம்.  
பா.ம.க. வேட்பாளர் எதிரொலி மணியன், பெரணமல்லூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதால், திருவண்ணாமலை மக்கள் மத்தியில் பரிச்சயம் இருக்கிறது. கூட்டணி முடிவாவதற்கு முன்பாக அறிவிக்கப்பட்ட பா.ம.க. வேட்பாளர்களில் இவரும் ஒருவர். வன்னியர்களின் ஓட்டுகள் அதிகமாக இருக்கும் இந்தத் தொகுதியில் ஆரம்பத்தில் இருந்தே கிராமம் கிராமமாக சென்று, 'வன்னியர் ஓட்டு வன்னியருக்கே’ என்று ஓட்டு வேட்டை நடத்தினார். கூட்டணி அமைந்த பிறகு, வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை வந்துவிட்டதோ என்னவோ... பிரசார வேகம் ரொம்பவே குறைந்துவிட்டது. அதோடு பசையைக் கண்ணில் காட்டுவதே இல்லை என்ற குற்றச்சாட்டும் கூட்டணி கட்சிகள் மத்தியில் இருந்து கேட்கிறது.
தொகுதியில் இருக்கும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் நான்கு அ.தி.மு.க. கையில் இருப்பதை அவர்கள் பலமாகக் கருதுகின்றனர். ஆனால், ஏரியாவுக்கு ஏரியா கோஷ்டி பிரிந்துகொண்டு கும்மியடிப்பது பெரிய மைனஸ். இருந்தாலும், அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி உற்சாகமாக வாக்கு சேகரித்துவருகிறார் வனரோஜா.
மக்களை 'கவனிப்பது’ மூலமாக அ.தி.மு.க. வெற்றிக்கொடியைப் பறக்கவிட முயற்சி செய்தாலும்... தி.மு.க-வின் எ.வ.வேலு மட்டும் சளைத்தவர் அல்லவே? அவரது 'டீம் ஒர்க்’கால் திருவண்ணாமலையில் உதயசூரியன் உதிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.
 பட்டுக்குப் புகழ்பெற்ற ஆரணியில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவருமே முன்னாள் மக்கள் பிரதிநிதிகள்.
தி.மு.க. வேட்பாளரான ஆர்.சிவானந்தம் (ஆரணி எக்ஸ். எம்.எல்.ஏ.), அ.தி.மு.க-வின் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை (செஞ்சி எக்ஸ். எம்.எல்.ஏ.), காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் (செய்யாறு எக்ஸ் எம்.எல்.ஏ.), பா.ம.க-வின் ஏ.கே.மூர்த்தி (பழைய செங்கல்பட்டு எக்ஸ் எம்.பி.) என போட்டியாளர்கள் அனைவரும் மண்ணின் மைந்தர்கள். நால்வருமே வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னொரு ஒற்றுமை.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னரே அறிவிக்கப்பட்ட பா.ம.க. வேட்பாளர்களில் ஒருவர் ஏ.கே.மூர்த்தி. அதனால், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே தொகுதி முழுக்க வலம் வந்துவிட்டார். ''வேலைக்காரனாகப் பணியாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள். வேலை செய்யக் காத்திருக்கிறேன். வேலை வாங்குவது உங்கள் கடமை'' என்ற ஏ.கே.மூர்த்தியின் பிரசாரத்துக்கு தொகுதியில் நல்ல ரெஸ்பான்ஸ். சாதிப் பாசத்தைக் காட்டி திண்ணை பிரசாரத்தில் ஈடுபடுவதால், தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் வாக்குகள், இவர் பக்கமே சாயும். கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க-வினர் உற்சாகமாக வேலை செய்வது இவருக்கு கூடுதல் ப்ளஸ்.
தி.மு.க-வின் ஆர்.சிவானந்தம், 'சென்னையில் இருந்து ஆரணிக்கு மின்சார ரயில் கொண்டுவர ஏற்பாடு செய்வேன். வரியில்லா பட்டு கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்வேன். நெல் கொள்முதல் மையம் அமைப்பேன்’ என்று ஏகப்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து வாக்கு சேகரிக்கிறார். ஆனால், கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சப்போர்ட் இவருக்குப் போதுமானதாக இல்லை. சிவானந்தம் எம்.எல்.ஏ-வாக இருந்த காலத்தில், விடுதலைச் சிறுத்தை பிரமுகர்கள் சிலர் மீது வழக்குகள் பாய்ச்சப்பட்டதற்கு, இவர்தான் காரணம் என்று அதிருப்தியில் இருக்கிறார்கள்.
அ.தி.மு.க-வின் ஏழுமலை, தமிழக அரசின் சாதனைகளை உரக்கச் சொல்லி பிரசாரம் செய்துவருகிறார். செஞ்சி எம்.எல்.ஏ-வாக இருந்த காலத்தில் தொகுதிக்கு செய்த பல நல்ல விஷயங்கள், இவருக்கு நல்ல இமேஜைத் தருகிறது. கட்சிக்காரர்களையும் அரவணைத்து, பிரசாரத்தில் சத்தம் இல்லாமல் முன்னேறி வருகிறார்.  
காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத், இந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.பி-யான கிருஷ்ணசாமியின் மகன். தொகுதிக்கு அப்பா பெரிதாக எதுவும் செய்யவில்லை என்ற வெறுப்பு மகன் மீது திரும்புகிறது. பாரம்பரிய காங்கிரஸ் வாக்குகள் மட்டும் இவருக்குக் கிடைக்கும்.
கூட்டணி பலம், சாதி பலம் ஆகியவை காரணமாக இலையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மாம்பழமே மணக்கும்!

ad

ad