புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2014

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டி: சோனியா வேட்புமனு தாக்கல் சொத்து மதிப்பு ரூ.9 கோடி: சொந்தமாக வாகனம் இல்லை என்றும் அறிவிப்பு



பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவு 7-ந் தேதி நடைபெறுகிறது.
இதன் காரணமாக தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.
வேட்புமனு தாக்கல்

தமிழகம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கடந்த 2004-ம் ஆண்டு முதல் போட்டியிட்டு வருகிறார். இந்த தொகுதி கடந்த 1960-ம் ஆண்டு முதல் நேரு-இந்திரா குடும்பத்தின் கோட்டையாக விளங்கி வருகிறது. 1967-ம் ஆண்டு இந்திரா காந்தி இந்த தொகுதியில் இருந்து முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 2006-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தல் உள்பட, 3 முறை இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோனியா காந்தி, வருகிற தேர்தலிலும் இந்த தொகுதியிலேயே போட்டியிடுகிறார்.
மலர் தூவி வரவேற்பு
இந்த தொகுதியில் 30-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இங்கு வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளாகிய நேற்றே சோனியா காந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதற்காக தனது மகனும், காங்கிரஸ் துணைத்தலைவருமான ராகுல் காந்தியுடன், நேற்று காலையில் டெல்லியில் இருந்து பர்சாத்கஞ்ச் விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் சென்ற சோனியாவுக்கு, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என வழி நெடுகிலும் ஏராளமான தொண்டர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
நம்பிக்கை
பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை, தேர்தல் அதிகாரியிடம் சோனியா தாக்கல் செய்தார். அப்போது ராகுல் காந்தி, அவர்களின் குடும்ப நண்பர் சதீஷ் சர்மா மற்றும் வக்கீல் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் வெளியே வந்த சோனியா காந்தி நிருபர்களிடம் கூறும்போது, ‘ரேபரேலி மக்கள் மிகுந்த பாசத்துடன் என்னை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த தேர்தலிலும் அவர்கள் எனக்கு மிகப்பெரிய வெற்றியை தருவார்கள் என நம்புகிறேன்’ என்றார்.
மொத்த சொத்து ரூ.9ரு கோடி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது தனது சொத்து விவர பட்டியலையும் அதில் அவர் இணைத்து இருந்தார்.
அதன்படி அவருக்கு ரூ.9 கோடியே 28 லட்சத்துக்கு சொத்து உள்ளது. எனினும், அவருக்கென சொந்தமாக வாகனம் எதுவும் இல்லை. அவருக்கு ரூ.2 கோடியே 81 லட்சத்துக்கு அசையும் சொத்துகளும், ரூ.6 கோடியே 47 லட்சத்துக்கு அசையா சொத்துகளும் உள்ளன.
மகனுக்கு கொடுத்த கடன்
சோனியா, தனது மகனும், காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவருமான ராகுல் காந்திக்கு 9 லட்ச ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். மேலும், கடந்த 2012-13-ம் ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கலின்படி அவரது ஆண்டு வருமானம் ரூ.14 லட்சத்து 21 ஆயிரம் ஆகும்.
அசையும் சொத்துகளில் அவரிடம் இருப்பாக ரூ.85 ஆயிரம் ரொக்கம் உள்ளது. ரூ.66 லட்சம் வங்கி கணக்கில் உள்ளது. கடன் பத்திரங்கள் கணக்கில் ரூ.10 லட்சமும், பங்கு பத்திரங்கள் வாயிலாக ரூ.1 லட்சத்து 90 ஆயிரமும் உள்ளது.
இது தவிர பரஸ்பர நிதியில் ரூ.82 லட்சத்து 20 ஆயிரமும், வருங்கால வைப்பு நிதியில் ரூ.42 லட்சத்து 49 ஆயிரமும், தேசிய சேமிப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 86 ஆயிரமும் வைத்துள்ளார். சோனியாவிடம் இருக்கும் ஆபரணங்களின் மதிப்பு ரூ.62 லட்சத்துக்கும் அதிகம்.
அசையா சொத்துகளில் தன்னிடம் இருப்பதாக சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளவை:-
சந்தை மதிப்பு
இத்தாலியில் முன்னோரின் சொத்து வாயிலாக ரூ.19 லட்சத்து 90 ஆயிரம். இது தவிர தேராமண்டி கிராமத்தில் ரூ.4 கோடியே 86 லட்சத்துக்கு நிலமும், சுல்தான்பூர் கிராமத்தில் ரூ.1 கோடியே 40 லட்சத்துக்கு நிலமும் உள்ளது.
கடந்த முறை ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி மனுதாக்கல் செய்தபோது தனது சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 37 லட்சம் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பாராளுமன்ற தேர்தலை விட தற்போது சோனியா காந்தியின் சொத்து மதிப்பு 6 மடங்கு அதிகரித்துள்ளது.
‘இதற்கு காரணம் முந்தைய தேர்தலின்போது அவரது சொத்து புத்தக மதிப்பாக குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது சந்தை மதிப்பில் நிர்ணயிக்கப்பட்டதால் சொத்தின் மதிப்பு இப்படி 6 மடங்கு அதிகரித்து இருப்பதாக’ கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ad

ad