புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014


சிவன் மயிலுருவம் கொண்டு பார்வதியுடன் நடனமாடியதால் மயிலாடுதுறை என்று பெயர் வந்ததாகச் சொல்வார்கள். அந்த மயிலாடிய துறையில் அ.தி.மு.க. சார்பில் பாரதிமோகன், தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள்
கட்சி வேட்பாளர் ஹைதர் அலியும் களமிறங்கியுள்ளனர். பா.ம.க. வேட்பாளராக அகோரமும், காங்கிரஸ் சார்பில் மணிசங்கர் அய்யரும் மோதுகின்றனர்.

கடந்த முறை வெற்றிபெற்ற அ.தி.மு.க-வின் ஓ.எஸ்.மணியன் தொகுதி மக்களிடம் அதிகம் தலைகாட்டாமல் இருந்தது, அந்தக் கட்சியின் வேட்பாளரான பாரதிமோகனுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மணியனை பிரசாரத்துக்கு அழைக்காமல், மாநில அரசின் சாதனைகளை மட்டுமே சொல்லி வாக்கு சேகரிக்கிறார் பாரதிமோகன். கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப்பூசல் இவருக்குப் பலவீனம்.
மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளரான ஹைதர் அலி வெளியூர்க்காரர் என்பதால், தி.மு.க. நிர்வாகிகளை அரவணைத்தே பிரசாரம் செய்கிறார். தொகுதியில் இருக்கும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இவருக்குக் கிடைக்கும். மின்வெட்டு இருட்டைக் கிழிக்கும் மெழுகுவத்தி எனச் சொல்லி, தன் சின்னத்தைப் பிரபலப்படுத்துகிறார் ஹைதர் அலி.
பி.ஜே.பி. கூட்டணி பலத்துடன் களம் காணும் பா.ம.க-வின் அகோரம், தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் வாக்கு வங்கியை குறிவைக்கிறார். பாரதிமோகன் வன்னியர் என்பதால், வாக்குகள் பிரியலாம். கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க-வில் பெரும்பான்மையாக இருக்கும் தலித் மக்களின் வாக்குகள் இவருக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே!  
காங்கிரஸ் சார்பில் கடந்த முறை தோல்வியடைந்த மணிசங்கர் அய்யருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஜி.கே.வாசன் இங்கு போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், மணிசங்கர் அய்யர் விரும்புகிறார் என்றதும் விட்டுக்கொடுத்தார் வாசன். பல மாதங்களாக இந்தத் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருந்தார் இவர். அதற்காக தொகுதிக்குள் தங்கி மக்களையும் அடிக்கடி சந்தித்து வந்தார். அந்த அறிமுகமும் மக்கள் நெருக்கமும் அவருக்கு கௌரவமான வாக்குகளை வாங்கித் தரும்.
கூட்டிக்கழித்துப் பார்த்தால் மனிதநேய மக்கள் கட்சியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அ.தி.மு.க-வின் பாரதிமோகன் பலே மோகனாகிவிடுவார்.

*****

விவசாயிகளும் மீனவர்களும் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதி நாகப்பட்டினம்.
தொடர்ந்து மூன்று முறை வென்று ஹாட்ரிக் அடித்த தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.எஸ்.விஜயன், நான்காவது முறையாகக் களத்தில் இருக்கிறார். தான் பொறுப்பில் இருந்த காலங்களில் கொண்டுவந்த திட்டங்களையும், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த திட்டங்கள் பற்றியும் கடிதமாகத் தொகுதி முழுவதும் அனுப்பியிருக்கிறார். அதில் மத்தியப் பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி, இரண்டு கல்லூரிகள், கிழக்குக் கடற்கரை சாலைகளும் அடக்கம். இருந்தாலும், நாகை துறைமுகத்தை மேம்படுத்தவில்லை என்ற குறை தொகுதி மக்களுக்கு இருக்கிறது.
அ.தி.மு.க. வேட்பாளர் மருத்துவர் கோபால், நன்னிலம் தொகுதி எக்ஸ் எம்.எல்.ஏ. ஆனாலும், தேர்தல் நேர அரசியல்வாதியாக இருப்பதால், நாளைய பிரசாரம் எங்கு எனக் கேட்டால்கூட தொகுதிப் பொறுப்பாளரான அமைச்சர் காமராஜின் செல் நம்பரைக் கொடுத்துவிடுகிறார். அ.தி.மு.க. அரசு கொடுத்த இலவசங்களைச் சொல்லி ஓட்டு வேட்டையாடுகிறார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் திருத்துறைப்பூண்டி எக்ஸ். எம்.எல்.ஏ. பழனிச்சாமி போட்டியிடுகிறார். இவர்களது பிரசாரமே வித்தியாசப்படுகிறது. யாரையும் குறைகூறாமல், கடந்த காலங்களில் இந்தத் தொகுதிக்காகப் போராட்டம் நடத்திய தழும்புகளை மக்களிடத்தில் எடுத்துரைக்கிறார்கள். ஆனால், இவை அனைத்தும் வாக்குகளாக மாறுவது சந்தேகமே.
பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணன் தேனி மாவட்டத்துக்காரர். 'மக்கள்கிட்ட இருக்கிற எழுச்சியைப் பார்த்தா நான் ஜெயிச்சுருவேன் போலருக்கு’ என வெள்ளந்தியாக பேசுகிறார். பா.ம.க. கேட்காமல் தரப்பட்ட தொகுதி என்பதால் கட்சிக்காரர்கள் உற்சாகமும் கூட்டணி பலமும் குறைவாக இருக்கிறது.
காங்கிரஸ் வேட்பாளரான செந்தில் பாண்டியனுக்கு, தேர்தல் புதிது. சொந்தக் கட்சியினரே இவருக்கு அனுசரணையாக இல்லை. ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்த இவருக்குப் பிரசாரம் செய்ய வந்த தங்கபாலுவை தடுத்து நிறுத்தும் அளவுக்குப் கோஷ்டிப்பூசல் இங்கு தலைவிரித்து ஆடுகிறது.
எப்போதுமே நாகை தொகுதியின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பது வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதிதான். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சீட் கொடுக்காத காரணத்தால், தனித்து போட்டியிட்டு கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ-வான வேதரத்தினம், இப்போது மீண்டும் கட்சியில் இணைந்து வேலை செய்வதும், அ.தி.மு.க. தனித்துப் போட்டியிடுவதும், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், ம.ம.க. கூட்டணியும்... மீண்டும் விஜயனை வில்லேந்த வைக்கும்.


*****

தமிழகமே திரும்பிப் பார்க்கும் தொகுதிகளில் சிவகங்கையும் ஒன்று. காங்கிரஸிடம் இருந்து தொகுதி கைமாறப் போவது உறுதியாகிவிட்டது.
ஏழு முறை வெற்றிபெற்ற ப.சிதம்பரம், இந்த முறை தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை களம் இறக்கி இருக்கிறார். தி.மு.க. சார்பாக சுப.துரைராஜும் அ.தி.மு.க. சார்பில் செந்தில்நாதனும் பி.ஜே.பி. வேட்பாளராக ஹெச்.ராஜாவும் கோதாவில் இறங்கியிருக்கிறார்கள்.
கடந்த முறை தி.மு.க. ஆதரவுடன் நின்ற ப.சிதம்பரம் சில ஆயிரங்கள் வித்தியாசத்தில்தான் வென்றார். ப.சிதம்பரத்துக்கு எதிராகத் தொகுதியில் அதிருப்தி இருந்தாலும் ஆறு மாதங்களுக்கு முன்பே கார்த்தி பிரசாரத்தைத் தொடங்கிவிட்டதால், களத்தில் அவர் முந்தி நிற்கிறார். இதுவரை கூட்டணிக் கட்சிகளின் பக்கபலத்தில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ், இந்த முறை தனித்து விடப்பட்டதால், சில இடங்களில் பூத் கமிட்டி நியமிக்கவே ஆள் இல்லாத நிலைமையும் உள்ளது. சிறுபான்மை வாக்குகளும் தலித் மக்களின் அமோக ஆதரவும் காங்கிரஸ் முகாமை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
தி.மு.க-வின் சுப.துரைராஜ் செலவு செய்வதில் கறார் காட்டுவது அந்தக் கட்சிக்கு பலவீனம். அவரது நடவடிக்கை பிடிக்காமல் கட்சியினர் பலரும் ஒதுங்கிவிட்டனர். முக்குலத்தோர் அல்லாத வாக்குகளை ஒருங்கிணைக்கும் இவரது முயற்சிக்கு முழுமையாகப் பலன் கிடைக்குமா என்பது சந்தேகமே.
பி.ஜே.பி. வேட்பாளரான ஹெச்.ராஜா இந்த முறை கூட்டணி பலத்துடன் கடும் சவாலாக இருப்பார் என்பது பொய்த்துவிட்டது. பி.ஜே.பி. தலைவரான ராஜ்நாத் சிங் வருகைக்குப் பின்னர், கட்சித் தொண்டர்களிடம் உற்சாகம் கிளம்பியிருந்தாலும் ரொம்ப லேட்.
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கிருஷ்ணனும் ஆம் ஆத்மியின் தமிழ் அரிமாவும் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார்கள்.
அ.தி.மு.க சார்பில் களம் இறங்கும் செந்தில்நாதன், இந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சமுதாய வாக்குகளை ஒருங்கிணைக்கப் போராடுகிறார். பிரசார சமயத்தில் இவர் மீது எழுந்த நில மோசடி புகார் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. அமைச்சர் உதயகுமார் கட்சியினரை ஒன்று சேர்க்க முயற்சி மேற்கொண்டபோதிலும் உள்குத்து வேலையில் சிலர் இறங்கி இருப்பதால், சுலபமாக கிடைக்க வேண்டிய வெற்றிக்குக் கடுமையாகப் பாடுபட வேண்டிய கட்டாயம்.
அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் மூன்​றுக்கும் போட்டி. சில ஆயிரம் வாக்கு வித்தி​யாசத்தில் அ.தி.மு.க. வெல்லும்.

ad

ad