புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014


தேர்தல் கமிஷன் லிஸ்டில், தமிழகத்தின் முதல் தொகுதி திருவள்ளூர்!
 இங்கு தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகளின் துரை.ரவிக்குமாரும், அ.தி.மு.க. சார்பில் வேணுகோபாலும், பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமாரும்
களமிறங்கியிருக்கிறார்கள்.விகடன்
வேட்புமனு இறுதி செய்யும் சமயத்தில்தான் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமாருக்கு சின்னம் கிடைத்தது. அதுவரை வேட்பாளர் பெயரை மட்டுமே சொல்லி வாக்குகளைக் கேட்டது, ரவிக்குமாருக்கு மைனஸ். கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு சரிவரக் கிடைக்காதது இன்னொரு மைனஸ். திருவள்ளூர் தொகுதி தி.மு.க-வுக்குக் கிடைக்காத அதிருப்தியில், இன்னும் சில நிர்வாகிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். பிரசாரத்துக்கு ஸ்டாலின் வந்து சென்ற பின்னரே ஒத்துழைப்பு கிடைத்தது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அடுத்த மைனஸ், புரட்சி பாரதம் கட்சியினர். திருவள்ளூரில் விடுதலைச் சிறுத்தைகள் வெற்றிபெறக் கூடாது என்ற முனைப்புடன் அவர்கள்  அ.தி.மு.க-வுக்காக சுறுசுறுப்புடன் வேலைபார்த்து வருகிறார்கள். தொகுதியில் நிலவும் மின்வெட்டுப் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்கும் தி.மு.க. கூட்டணி, அது நிச்சயம் பலன் கொடுக்கும் என்று நம்புகின்றனர்.
சிட்டிங் எம்.பி-யான வேணுகோபால்தான் அ.தி.மு.க. வேட்பாளர். இந்தத் தொகுதியில் செய்த பணிகளை ஒவ்வொரு பிரசாரத்திலும் பட்டியலிடுகிறார். சிரித்த முகத்துடன் கட்சியில் எல்லோரையும் அனுசரித்து செல்வது வேணுகோபாலுக்கு ப்ளஸ்.
தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜ் வட சென்னை மாவட்டச் செயலாளராக இருப்பதால், தே.மு.தி.க-வினர் முழுவீச்சில் இவருடைய வெற்றிக்காகப் பாடுபடுகிறார்கள். அதோடு கூட்டணிக் கட்சியினரும், மோடி அலையும் தங்களுக்கு ப்ளஸ் என்கிறார்கள். புதிய வாக்காளர்களும் இளைஞர்களும் நிச்சயம் முரசைக் கொட்டுவார்கள் என்ற நம்பிக்கை ஆணித்தரமாக யுவராஜுக்கு உள்ளது.
உள்ளூர் மைந்தன் என்ற முகவரியுடன் களமிறங்கிருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமார். ஆவடியில் தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட இவர், தொகுதி மக்கள் மத்தியில் ஓரளவுக்குப் பிரபலமானவர். கணிசமான வாக்குகளை வாங்குவார். கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுப் பார்த்தால், மோதிரம் டாலடிப்பதைவிட இரட்டை இலையே துளிர்க்கும் நிலை இந்தத் தொகுதியில் தெரிகிறது.
 
தினக்கூலித் தொழிலாளர்களும், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களும் செறிவாக வாழும் தொகுதி வட சென்னை. இந்தப் பகுதியில் வசிக்கும் பெரும்பான்மை மீனவர்களும், தலித் மக்களும் கிறிஸ்துவர்களாக உள்ளனர். முஸ்லிம்களும் கணிசமான அளவில் இருக்கின்றனர்.  
 இந்தத் தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் வெங்கடேஷ் பாபு, தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் கிரிராஜன், தே.மு.தி.க. சார்பில் சௌந்தர பாண்டியன், சி.பி.எம். சார்பில் உ.வாசுகி ஆகிய பிரதான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
எந்த அடிப்படை வசதிகளும், உள்கட்டமைப்பு வசதிகளும் இன்றுவரை முறையாக நிறைவேற்றப்படாத பகுதி வட சென்னை. சென்னை நகரின் குப்பைத் தொட்டி என்பதுபோல் காட்சியளிக்கிறது. எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த காலத்திலேயே தி.மு.க. ஆதிக்கம் செலுத்திவந்த இந்தத் தொகுதி, இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வின் பக்கம் போவதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.பி-யான தி.மு.க-வின் டி.கே.எஸ்.இளங்கோவன், தொகுதிப் பக்கம் அதிகம் எட்டிப் பார்க்காததும், குடிநீரில் பெட்ரோலும் டீசலும் கலந்து வந்தபோது, அஜாக்கிரதையாக செயல்பட்டதும், பெரும் ஆவேசத்தை அந்த மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. அவை அப்படியே அ.தி.மு.க-வுக்கு வாக்குகளாக மாறும் என்கிறார்கள். இரண்டு கட்சி ஆட்சியும் வடசென்னையின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பெரும்பான்மை மக்களிடம் இருக்கிறது.
சிறுபான்மையின மக்கள் அதிகம் உள்ளதாலும், பி.ஜே.பி-யின் கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க., தே.மு.தி.க, விடுதலைச் சிறுத்தைகள் இந்தத் தொகுதியில் பெரிய அளவில் பலம் இல்லாமல் இருப்பதும், தே.மு.தி.க. வேட்பாளருக்கு மிகப்பெரிய மைனஸ். தொழிற்சங்கங்கள் வலுவாக இருப்பதால், கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாசுகிக்கு உற்சாகமாக வேலை பார்க்கின்றனர். ஆனால், அவை எந்தளவுக்கு வாக்குகளாக மாறும் எனத் தெரியவில்லை.  இந்தக் குறைகளை எல்லாம் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அரசின் சாதனைகளைச் சொல்லி பிரசாரம் செய்து​வருகின்றனர் அ.தி.மு.க-வினர்.
தி.மு.க. இல்லையென்றால் அ.தி.மு.க. என்ற தமிழகத்தின் மனப்பான்மையின்படி இந்த முறை அ.தி.மு.க-வே இந்தத் தொகுதியில் வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
பேரறிஞர் அண்ணாவை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த தொகுதி தென் சென்னை. படித்தவர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள், உயர் தட்டு மக்கள், சாஃப்ட்வேர் பணியாளர்கள் என பலதரப்பட்ட மக்களையும் உள்ளடக்கிய தொகுதி இது. தொடர்ந்து நான்கு முறை இந்தத் தொகுதியில் வென்ற தி.மு.க-வுக்கு கடந்த முறை முற்றுப்புள்ளி வைத்தது அ.தி.மு.க.

முன்னாள் சபாநாயகர் டி.ஜெயக்குமாரின் மகன் டாக்டர் ஜெயவர்தன் அ.தி.மு.க. வேட்பாளர். தென் சென்னைக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணியே வென்றது, அவர்களுக்கு தெம்பைத் தந்துள்ளது. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து சுறுசுறு பிரசாரத்தில் இருக்கிறார். ஆனாலும், இவர் வட சென்னை வட்டாரத்தில் அறிமுகம் ஆனவர். தென் சென்னை கட்சியினருடன் ஒட்ட முடியவில்லை. இலை வாக்குகள்தான் இவருக்கு பலம். சிட்டிங் அ.தி.மு.க. எம்.பி-யான சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் மீதான கெட்ட பெயர்கள் இவருக்கு எதிராக உள்ளன.
பி.ஜே.பி. வேட்பாளர் இல.கணேசன் அனைத்து தரப்பினருக்கும் பரிச்சயமானவராக இருக்கிறார். கடந்த முறை தனித்து நின்று 40 ஆயிரம் வாக்குகள் வாங்கினார். இந்த முறை கூட்டணி பலத்துடன் நிற்கிறார். படித்த வாக்காளர்கள், மத்தியதர வர்க்கத்தினர் ஆதரவு இவருக்கு உண்டு. மோடி பிரசாரம் இவருக்கு கை கொடுக்கிறது.
வட சென்னையில் தா.பாண்டியனுக்கு ஷாக் கொடுத்து கடந்த முறை வெற்றிபெற்ற டி.கே.எஸ்.இளங்கோவன், இந்த முறை தென் சென்னையில் தி.மு.க. சார்பில் மல்லுகட்டுகிறார். கட்சியில் அவர் பிரபலமானவராக இருப்பது ப்ளஸ். தொகுதி மாறியதால், ஆரம்பத்தில் உற்சாகம் இல்லாமல் பிரசாரத்தைத் தொடங்கினாலும், தற்போது கட்சி நிர்வாகிகள் முனைப்புடன் இறங்கி வேலை செய்வது அவருக்குத் தெம்பாக இருக்கிறது.
காங்கிரஸில் சீட் வாங்க போராடிய ரமணி, அந்த முனைப்பை வெற்றிபெறுவதற்குக் காட்டுவதாகத் தெரியவில்லை.
''மோடியின் நீண்ட நாள் நண்பர் இல.கணேசன். மோடி பிரதமர் ஆனால், இல.கணேசன் மந்திரி ஆவார். அவரை ஆதரியுங்கள்'' என்று பேசி ஓட்டு கேட்கிறார்கள் பி.ஜே.பி-யினர். இல.கணேசன் பிரிக்கும் ஓட்டுகளால் வெற்றி பெற்றுவிடலாம் என்று கணக்கு போடுகிறது தி.மு.க. தரப்பு. ஆனால், வீடு வீடாகச் சென்று 'பி.ஜே.பி-க்கு ஓட்டுப் போட்டு வீணாக்காதீர்கள்; அ.தி.மு.க-வுக்கே ஓட்டுப் போடுங்கள்’ என்கிறது அ.தி.மு.க. டீம். அமைச்சர், எம்.எல்.ஏ-க்கள், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் 'பதவி பறிபோய்விடும்’ என்ற பயத்தில் உருண்டுபுரண்டு வேலை செய்வது ஜெயவர்தனை வாக்காளர்களிடம் அதிகமாகக் கொண்டுபோய் சேர்க்கிறது. அதனால், இந்த முறையும் இலையே மீண்டும் துளிர்க்கும்.

ad

ad