ஞாயிறு, ஏப்ரல் 27, 2014

போலி அகதிகளை நாடு கடத்த அவுஸ்திரேலியாவுடன் கோத்தபாய பேச்சு
ஆஸ்திரேலியாவிலுள்ள போலி அகதிகளை மீளவும் இலங்கைக்கு அனுப்புவது தொடர்பில், ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்­ பேச்சு நடத்தியுள்ளார். 

 
ஆஸ்திரேலியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் அகதிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே, போலியான அகதிகளைத் திருப்பி அனுப்புவது குறித்துப் பாதுகாப்புச் செயலருடன் ஆஸ்திரேலியா பேச்சுக்களை நடத்தியுள்ளது. 
 
ஆஸ்திரேலியாவின், கான்பராவில் உள்ள ஹயாட் விடுதியில் நடந்த ஆள்கடத்தல் மற்றும் நாடு கடந்த குற்றங்கள் தொடர்பான ஆஸ்திரேலிய இலங்கை கூட்டுக்குழுவின் இரண்டாவது கூட்டத்தில், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்­ தலைமையிலான குழு கலந்து கொண்டது. 
 
இந்தக் கூட்டத்தில் பேசிய, ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன், முன்னைய ஆட்சிக் காலத்தில் ஆஸ்திரேலி யாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களையும் திருப்பி அனுப்புவதில் ஆஸ்திரேலியா உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 
 
ஏனைய நாடுகள் வழியாகச் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்தவர்களை எந்தச் சூழ்நிலையிலும் தமது நாடு ஏற்றுக்கொள்ளாது என் றும் அவர் கூறியுள்ளார். அவர்களைத் திருப்பி அனுப்புவதில் ஆஸ்திரேலியா உறுதியாக இருப்பதாகவும் மொறிசன் குறிப்பிட்டார். 
 
ஆஸ்திரேலியப் பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பியுள்ள பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்­, ஆஸ்திரேலியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்காக நடந்து கொண்டிருந்கும் இந்த நடவடிக்கையால், ஆஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 
 
ஆஸ்திரேலியாவுக்கு இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்‌ஷ­ மேற்கொண்டுள்ள முதல் பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.