புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2014

குஜாரத்தின் இன்றைய நிலை ஒரு  கணிப்பீடு 
துறை​முகங்கள், நெடுஞ்சாலைகள், மின்சாரம், எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகள் ஆகியவற்றைப் பற்றி பேசும்போது
மோடியிடம் வெளிப்படும் எழுச்சி... கல்வி, சுகாதாரம், மக்கள் வாழ்க்கை பற்றி பேசும்போது வெளிப்படுவது இல்லை. கல்வி மற்றும் மருத்துவம் குறித்து பேசும்போது ஒரு விதமான தயக்கத்துடனும் கடந்த காலத்துக்குப் பின்னால் மறைந்துகொண்டும்தான் அவர் பேசுகிறார். மோடிக்குப் பொருந்துவது அவருடைய அதிகாரிகளுக்கும் பொருந்துகிறது.

'குஜராத் வளர்ந்திருக்கிறது என்று சொன்னால், குஜராத் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதை அளந்து சொல்ல, தனிநபர் வருமானம், மாநில மொத்த உற்பத்தி குறியீடு... என்று ஏராளமான அளவுகோள்கள் இருக்கின்றன. ஆனால், அந்த மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் வளம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சரிசமமாகச் சென்று சேர்ந்திருக்கிறதா? 'சரிசமமாக’ என்று சொன்னால்... குறைந்தபட்சம் அங்கே அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ வசதி, சுகாதார வசதி, கல்விக்கூடங்கள் ஆகியவை தேவைக்கு ஏற்ற வகையில் பெருகி இருக்கிறதா... என்பது போன்ற கேள்விகளுக்கு விடை காண அந்த மாநிலத்தில் பரவலாக அறியப்பட்ட பொருளாதாரத் துறை நிபுணரான பேராசிரியர் ஹேமந்த குமாரிடம் பேசினோம்.
கந்தல் நிலையில் கல்வி:
''நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஐ.ஐ.எம். (அகமதாபாத்), என்.ஐ.டி. (நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன்), ஐ.ஆர்.எம்.ஏ. (இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரூரல் மேனேஜ்மென்ட் - ஆனந்த்) போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் குஜராத்தில் செயல்பட்டு வருகின்றன. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இங்கே புதிதாக 30 பல்கலைக்கழகங்கள் வந்திருக்கின்றன. ஆனால், இவை அனைத்துமே தனியார் பல்கலைக்கழகங்கள். இவற்றில் கட்டணங்கள் அதிகம். அதேபோல தனியார் பள்ளிகள் தங்களின் விருப்பம்போல கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம் என்பதால் பிள்ளை​களைப் பெற்றவர்களின் பாடு இங்கே திண்டாட்​டம்தான்.
தனியார் கல்வி நிறுவனங்களின் நிலையைவிட அரசு கல்விக்கூடங்களின் நிலைமை படுமோசம். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கல்விக்காக நிதியை ஒதுக்குவதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு என்ற வரிசையில் 13 மாநிலங்களுக்கு அடுத்தப்படியாகத்தான் குஜராத் இருக்கிறது. முறையான முழு நேர ஆசிரியர்களை கல்விக்கூடங்களுக்கு  நியமிப்பதற்கு பதிலாக, வித்யா சஹாயக்ஸ், சிக்ஷான் சஹாயக்ஸ், அத்யாபக் சஹாயக்ஸ் என்ற பெயர்களில் அடிமாட்டு சம்பளத்துக்கு ஒப்பந்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்துகிறது அரசு. அரசே இப்படி சகாய விலைக்கு ஆசிரியர்களை நியமித்தால், அரசு உதவிபெறும் பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் தங்களின் ஆசிரியர்களை எப்படி நடத்தும் என்பதை சுலபமாக யூகித்துவிட முடியும்.

இன்றைய நிலையில் 270 கல்லூரிகளில், கல்லூரி முதல்வர் பதவி நிரப்பப்படாமல் இருக்கிறது. 45 சதவிகித பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கான இடங்கள் காலியாக இருக்கின்றன. அதனால் பல கல்லூரிகளில் ஒரே வகுப்பில் நூறு, இருநூறு... என மாணவர்கள் ஆடு மாடுகள் மாதிரி அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, குஜராத் பல்கலைக்கழகத்துக்குச் சென்று பாருங்கள். அங்கே இதழியல் துறையில் இருக்கும் 12 பாடங்களைச் சொல்லிக்கொடுக்க ஒரே ஒரு உதவி பேராசிரியர் மட்டுமே இருக்கிறார். இந்த மாநிலத்தில் பள்ளிக்கூடங்களின் நிலையும் இதேபோலத்தான். 47 ஆயிரம் ஆசிரியர் பதவிகள் இங்கே காலியாக இருக்கின்றன. பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.
10-ம் வகுப்பை எட்டு​வதற்குள் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு லட்சக்​கணக்கான மாணவர்கள் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறிவிடுகிறார்கள். உதாரணத்துக்கு, 2003-ம் ஆண்டு இந்த மாநிலத்தில் 1-ம் வகுப்பில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 80 ஆயிரம். ஆனால், 2013-ம் ஆண்டு 10-ம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை வெறும் 10 லட்சத்து 30 ஆயிரம். அதாவது, 10-ம் வகுப்பை எட்டுவதற்குள் 7 லட்சத்துக்கு 50 ஆயிரம் மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டார்கள். ஆரம்பக் கல்வியின் நிலை இதைவிட மோசம். இந்த மாநிலத்தில் நூற்றுக்கு இருபது பேர் இன்னமும் எழுதப்படிக்கத் தெரியாதவர்​களாகத்தான் இருக்கிறார்கள்.
'கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர் தற்கொலை’ என்ற செய்தியும், 'சம்பளம் கிடைக்காததால் கல்லூரி உதவி பேராசிரியர் தற்கொலை’ என்ற செய்தியும் அடுத்தடுத்து வருகின்ற நிலைமையில்தான் குஜராத்தில் கல்வி இருக்கிறது.
மருத்துவம்:
ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பதைப்போல, அரசு மருத்துவமனைகளுக்கு டாக்டர்களையும் ஒப்பந்த அடிப்படையில் வெறும் 10,000 ரூபாய் சம்ப​ளத்துக்கு நியமிக்கிறது. இப்படி இருந்தும்கூட 40 சதவிகித ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்து மாத்திரைகள்... என்று எதுவும் இல்லாமல்தான் இருக்கின்றன. பெரிய மருத்துவமனை என்று அழைக்கப்படும் அகமதாபாத் அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெறும் 26 படுக்கைகள் மட்டுமே அதிகம் ஆகி இருக்கின்றன. அதேபோல அகமதாபாத் முனிசிபல் மருத்துவமனையில் கடந்த ஐந்து வருடங்களில் வெறும் 27 படுக்கைகள்தான் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், இந்தக் காலகட்டத்தில் 158 தனியார் மருத்துவமனைகள் முளைத்திருக்கின்றன. பணத்தை உறிஞ்சி எடுக்கும் தனியார் மருத்துவ​மனை​களிடம்  ஏழைகள் எப்படி சிகிச்சை பெற முடியும்?
'ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 1,000 குழந்தைகளுக்கு எத்தனை குழந்தைகள் இறக்கிறது’ என்பதை அளவுகோளாகக் கொண்டு பார்த்ததில், இந்தியாவில் 50 மாவட்டங்களை மிகச்சிறந்த மாவட்டங்கள் என்று புகழ்பெற்ற சர்வதேச மருத்துவ இதழான லான்செட் அறிவித்தது. இந்த 50 மாவட்டங்களில் ஒன்றுகூட குஜராத்தில் இல்லை (இதில் 15 மாவட்டங்கள் தமிழகத்திலும் 10 மாவட்டங்கள் கேரளாவிலும் இருக்கின்றன). ஆனால், லான்செட் வெளியிட்டிருக்கும் மோசமான மாவட்டங்களின் பட்டியலில் குஜராத்தின் ஆறு மாவட்டங்கள் இடம்​பெற்றிருக்​கின்றன.
மக்களின் உடல்நலத்துக்கு உலைவைக்கக் கூடிய மிகப்பெரிய பிரச்னை கனன்று கொண்டு இருக்கிறது. மற்ற பல மாநிலங்களைக் காட்டிலும் சத்துக்குறைபாடு கொண்டவர்கள் குஜராத்தில் மிக அதிகமாக இருக்கிறார்கள். 'குஜராத் பெண்கள் எல்லாம் அழகுணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதால், அவர்கள் பால் போன்ற சத்துமிக்க உணவுகளை சாப்பிடுவதில்லை’ என்று ஒருமுறை மோடி சொன்னார். ஆனால், மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்கூட 'ஸ்டைல்’ கருதிதான் பால் குடிப்பதில்லையா? இந்த மாநிலத்தில் மூன்று வயதுக்கு உட்பட்ட 41 சதவிகித குழந்தைகள் இருக்க வேண்டிய எடையைவிட குறைவான எடை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அதேபோல 15 வயதில் இருந்து 45 வயது கொண்ட பெண்களில் 55.3 சதவிகிதத்தினர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
அதேபோல,National Nutrition Monitoring Bureau (NNMB) ஆய்வின்படி குஜராத்தில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் நூற்றுக்கு 53 பேர் உயரம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள். இதற்கெல்லாம் மூல காரணம் இங்கே உணவுப் பொருள் பங்கீட்டுத் துறை படு மோசமாக செயல்படுவதுதான். 'நாள் ஒன்றுக்கு 11 ரூபாய் வருமானம் கிடைத்தாலே அந்த நபர் வறுமைக்கோட்டுக்கு மேலே’ என்ற அடிப்படையில் ஏழைகளைக் கணக்கிட்டு ரேஷன் பொருள்களை வழங்கிவருவதுதான் (அதாவது, வழங்காமல் இருப்பதுதான்) இந்தப் பிரச்னை அனைத்துக்கும் ஆணி வேர். இப்படி குஜராத்தின் மக்கள் வளர்ச்சி மட்டமாக இருக்கிறது'' என்று ஆதாரங்களுடன் அடுக்குகிறார் ஹேமந்த் குமார்.
சிறப்பு பல்கலைக்கழகங்கள்!
காந்திநகரில் இருக்கும் கல்வி மற்றும் சுகாதாரத் துறையை சேர்ந்த அதிகாரிகளிடம் பேசினோம். ''குஜராத் இன்று பல்கலைக்கழகங்களுக்குப் புகழ்பெற்ற மாநிலமாக உருவாகி இருக்கிறது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு குஜராத்தில் 15 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், இப்போது இங்கே 45 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. நிர்மா பல்கலைக்கழகம், ரிலையன்ஸின் பெட்ரோலியத்துக்கான பல்கலைக்​கழகம் தொடங்கி, விவசாயம், ஆயுர்வேதம்... ஏன் தடய அறிவியலுக்குக்கூட தனி பல்கலைக்கழகத்தை இங்கு உருவாக்கி இருக்கிறோம். இப்படி சிறப்பு பல்கலைக்கழகங்கள் வேறு எந்த மாநிலத்திலும் இருக்காது. இப்போது எங்கள் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 45 ஆயிரம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர முடியும். அதே​போல 13 ஆயிரம் மாணவர்கள் எம்.பி.ஏ. படிக்க முடியும். 5 ஆயிரம் பேர் ஃபார்மா படிப்பு படிக்க முடியும்.
ஒரு ஆண் கல்வி கற்றால், அவன் மட்டுமே பயனடைவான். ஆனால், ஒரு பெண் கல்வி கற்றால், ஒரு குடும்பமே பலன் அடையும் என்பார்கள். அப்படிப்பட்ட பெண் கல்வியின் முக்கியத்துவத்தை எங்கள் அரசு நன்கு உணர்ந்து பெண் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்களுக்கு 1,000 ரூபாய் கொடுக்கும், 'வித்யா லக்ஷ்மி திட்டம்’ நல்ல பலன் கொடுத்திருக்கிறது. இதன் பலனாகப் பாதியிலேயே படிப்பை நிறுத்தும் பெண்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவு குறைந்திருக்கிறது. பசித்த வயிரோடு படிக்க முடியாது என்பதை உணர்ந்த எங்கள் அரசு சுமார் 7,600 ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்துகிறது. தவிர, நலிவுற்ற மாணவர்களுக்​காக இலவ​சமாகப் பாடப்புத்தங்களையும் வழங்கு​கிறோம். எங்கள் அரசு எடுத்துவரும் இந்த நடவடிக்கைகளின் பலனாக 79 சதவிகித மக்கள் எழுத்தறிவு பெற்றிருக்கிறார்கள். 'பள்ளிக்கு செல்லும் குழந்தை​களில் ஒரு குழந்தைகூட பாக்கி இல்லாமல், அனைத்துக் குழந்தைகளும் பள்ளியில் சேர வேண்டும். ஒரே ஒரு குழந்தைகூட பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தக் கூடாது’ இதுதான் எங்கள் முதலமைச்சர் நிர்ணயித்திருக்கும் இலக்கு. இந்த இலக்கை விரைவில் எட்டுவோம்'' என்றார்கள்.
நகரின் வசதி கிராமத்தில்!
சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் பேசினோம். ''நகரில் இருக்கும் வசதிகள் அனைத்துமே கிராமங்களிலும் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் முதலமைச்சரின் முழக்கம். குஜராத்தில், அரசு மருத்துவமனைகளை யாரும் நாடுவதில்லை என்று ஒரு தரப்பினர் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது உண்மை இல்லை. எங்கள் மாநிலத்தில் ஆறு பெரிய மருத்துவமனைகள், 24 மாவட்ட மருத்துவமனைகள் என்று தொடங்கி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையங்கள், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் பேர் உள்நோயாளிகளாக மட்டும் சிகிச்சை பெறுகிறார்கள். ஆண் - பெண் விகிதம் சமமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண் குழந்தைகளைக் காப்பாற்றும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். குழந்தைகள் எவரும் சத்து குறைந்தவர்களாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் கர்ப்பிணிகளுக்கும் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் பலவிதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்'' என்று சொல்கிறார்கள்.
குஜராத் என்றாலே சிறுபான்மையினர் சிக்கல்தானே பிரதானமானது. அந்த மக்கள் என்ன சொல்கிறார்கள்? அவர்களது வாழ்க்கை நிலைமை எப்படி இருக்கிறது?

ad

ad