புதன், ஏப்ரல் 02, 2014

    தன்னலம் கருதாமல் பாடுபடும் வைகோவிற்கு பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்: விஜயகாந்த்

இந்த மக்களவை தேர்தலில் தன்னலம் கருதாமல் பாடுபடும் வைகோவிற்கு பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என தேமுதிகவின்
தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டார்.
விருதுநகர் எம்.ஜி.ஆர். சிலை அருகில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர் வைகோவை ஆதரித்து புதன்கிழமை இரவு விஜயகாந்த் பிரசாரம் செய்து பேசியதாவது:
காமராஜர் பிறந்த ஊரில் பேசுவதை பெருமையாக கருதுகிறேன். அதேநேரத்தில் அரசியல் கட்சியினர் அனைவரும் பெருந்தலைவர் ஆட்சி அமைக்கிறேன் என்கிறார்கள். காமராஜருக்கு கீழேதான் கக்கன் இருந்தார். அவர் எளிமையாக பிறந்து, கடைசி வரையில் எளிமையாகவே வாழ்ந்து மறைந்தார். இதுபோன்ற இன்றைய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். ஆனால், தன்னலம் கருதாமல், பொதுமக்களுக்கான பணிகளை மட்டுமே வைகோ மேற்கொண்டு வருகிறார். அவருக்காக உங்களிடம் ஆதரவு கேட்டு வந்திருக்கிறேன். ஆனால், அவர் பேசுவதை பார்க்க மட்டும் கூட்டம் வருகிறது. அவருக்கு வாக்கு போட மறந்து விடுகிறீர்கள்.
இந்த ஆட்சியில் அம்மா குடிதண்ணீர், அம்மா மருந்தகம், அம்மா உணவகம் என நடத்துகிறார்கள். இதில் ஒன்றைக் கூட எம்.ஜி.ஆர். பெயரில் நடத்தவில்லை ஏன் என கேள்வி எழுப்பினார். தற்போது, மின்தடையால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். விருதுநகரில் மட்டும் ஒவ்வொரு நாளும் 5 மணிநேரம் மின்தடை இருக்கிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த ஊரில் ராமமூர்த்தி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவிடாமல் அந்த இடத்தில் திரையரங்கம் நடத்தும் எதிரணியைச் சேர்ந்தவர் தடுக்கிறார்.
இம்முறை வெற்றி கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறோம். இம்முறை நீங்கள் வைகோவிற்கு அளிக்கும் ஓட்டுதான், அவர்களுக்கு நீங்கள் வைக்கும் வேட்டு ஆகும். மத்தியில் நரேந்திர மோடிதான் பிரதமர். விருதுநகரில் வைகோதான் மக்களவை உறுப்பினர் என்பதை மறந்து விடாதீர்கள். அப்போது உங்களின் குறைகள் அனைத்ததையும் தீர்த்து வைப்பார். பொதுமக்களுக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றித் தருவார். இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியில் விருதுநகர் மக்களவை தொகுதியில் முரசு கொட்டும், தாமரை மலரும், பம்பரம் சுழலும் என விஜயகாந்த் தெரிவித்தார். இதில், விருதுநகர் மாவட்ட பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயக  கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.