புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014

விருதுநகரில் வைகோ வேட்பு மனு தாக்கல்; சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 36 லட்சம்!
மதிமுக வேட்பாளர் வைகோ, அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.
அப்போது இரு கட்சியினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இரு கட்சியினரும் மாறி மாறி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

விருதுநகரில் பா.ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். அதுபோல் அதிமுக சார்பில் சிவகாசி முன்னாள் யூனியன் சேர்மன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்நிலையில் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை இருவரும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி கோரியிருந்தனர்.

இதையடுத்து வைகோவுக்கு காலை11 மணிக்கும், அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு மதியம் ஒன்றரை மணிக்கும் வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிகள் அனுமதி வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லம் சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்துட்டு மதியம் ஒரு மணிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம், காந்திய மக்கள் பேரவை தலைவர் தமிழருவி மணியன் உள்பட தனது ஆதரவாளர்களுடன் வந்தார். பிறகு மாவட்ட கலெக்டர் ஹரிகரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சொத்து மதிப்பு

வேட்பு மனுவுடன் ஒரு கோடி 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்கள் பற்றிய விபரங்களை அளித்தார்.
வழக்குகள்
அதுபோல் குற்ற வழக்குகள் பற்றிய உறுதி மொழிப்பத்திரத்தில், திருமங்கலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேச விரோதமாக பேசியதாக ஒரு வழக்கும், பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கு, சென்னை கியூ பிராஞ்ச் போலீசாரால் தேசத்துக்கு எதிராக வன்முறையாக பேசியதாக ஒரு வழக்கு, கடந்த 2007 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக அவதூறாக பேசியதாக 4 வழக்குகள், திருநெல்வேலியில் ஒரு கொலை வழக்கு என்று 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில் கொலை வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்ததன் மூலம் அந்த சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டு விட்டது. அதுபோல், பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு இன்னும் நிலுவையில் இருக்கிறது என்று வைகோ தனது உறுதி மொழிப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மோதல், வாக்குவாதம் 

இதற்கிடையே அதிமுக மாவட்ட செயலாளரும், செய்தித்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி அதிமுக வேட்பாளர் சிவகாசி முன்னாள் யூனியன் சேர்மன் ராதாகிருஷ்ணனை தனது ஆதரவாளர்களுடன் அழைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த மதிமுகவினர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி  மற்றும் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரது வாகனங்கள் மீது கை வைத்து தட்டி எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏற்கனவே கூடியிருந்தத அதிமுகவினர், பதிலுக்கு சத்தம் போட்டனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேறு இடத்தில் காத்திருக்க வைத்தனர்.

வைகோ வேட்பு மனு தாக்கல் செய்த வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்து விட்டு கிளம்பி சென்றார். இதற்கு பிறகு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலெக்டர் ஹரிகரனின் அறைக்குள் சென்று அவரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்பாளர் ராதாகிருஷ்ணன், தனது சொத்து விபரங்கள் பற்றிய விபரங்களை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள ஏப்ரல் 5ம் தேதிக்குள் தாக்கல் செய்வதாக கூறினர். இதை கலெக்டர் ஹரிகரன் ஏற்றுக்கொள்ளவும் அதிமுகவினர் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு கிளம்பி சென்றனர்..

ad

ad