சனி, ஏப்ரல் 05, 2014

டி.ஆர். பாலுவின் சொத்து 20.15 கோடி!
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுவின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ஏறத்தாழ 3 மடங்கு அதிகரித்துள்ளது.டி.ஆர். பாலு பெயரிலும்
அவரின் 2 மனைவிகளின் பெயரிலும் உள்ள அசையும், அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ. 20 கோடியே 15 லட்சத்து 55 ஆயிரத்து 307.


கடந்த 2009 ஆம் ஆண்டு தேர்தலின்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டபோது அவர் தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில் மொத்த அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 7.70 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வேட்பு மனு தாக்கல் செய்தார் டி.ஆர். பாலு. அப்போது, அவர் தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில் தனது பெயரிலும், தனது முதல் மனைவி டி.ஆர்.பி. பொற்கொடி, இரண்டாவது மனைவி பி. ரேணுகாதேவி பெயரிலும் உள்ள அசையும், அசையா சொத்துகள் குறித்த விவரம்: இதில், அசையும் சொத்துகளான கையிருப்பு, வங்கி இருப்புத் தொகை, நிறுவனங்களில் உள்ள பங்குத் தொகை, வங்கிக் கடன்கள், வாகனங்கள், நகைகள் என மொத்தம் ரூ. ஒரு கோடியே 65 லட்சத்து 75 ஆயிரத்து 307 எனக் காட்டப்பட்டுள்ளது.


அசையா சொத்துகளான புனல்குளம், புதுநகர், தளிக்கோட்டை, மகாதேவப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள விளைநிலம் உள்ளிட்டவற்றின் மதிப்பு என மொத்தம் ரூ. 18 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அசையும், அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ. 20 கோடியே 15 லட்சத்து 55 ஆயிரத்து 307. இவற்றில், அவரது மகன் ஆர்.பி. ராஜ்குமாரின் கிங்ஸ் இந்தியா கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் ரூ. 6.67 லட்சம் மதிப்பிலான பங்குகளும் மற்றும் மீனம் மீன் வள நிறுவனத்தில் 29,444 பங்குகளும், கிங்ஸ் பவர் கார்பரேஷனில் ரூ. 1.97 லட்சம் மதிப்புள்ள பங்குகளும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், 2012 - 13 ஆம் ஆண்டில் மட்டும் விவசாயம் உள்ளிட்டவற்றிலிருந்து ஆண்டு வருமானம் ரூ. 16.04 லட்சம் என்றும், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கார் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
பாலுவின் பெயரில் வீடு எதுவும் இல்லை. அவரது முதல் மனைவி பொற்கொடி பெயரில் சென்னை கோடம்பாக்கம், கே.கே. நகரில் இரு வீடுகள் உள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது. தவிர, பாலுவின் பெயரில் ரூ. ஒரு கோடியே 3 லட்சத்து 63 ஆயிரத்து 783-ம், முதல் மனைவி பெயரில் ரூ. 6 லட்சத்து 90 ஆயிரத்து 833-ம் கடன் உள்ளது.