சனி, ஏப்ரல் 05, 2014

இந்திய பாராளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சம்பளமும்-சலுகைகளும்!
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பாராளுமன்றம், மக்களவை (லோக்சபா), மாநிலங்களவை (ராஜ்யசபா) என்ற இரு அவைகளை உள்ளடக்கியது.இந்திய பாராளுமன்றம் என்பது
545 மக்களவை எம்.பி.க்கள், 250 மாநிலங்களவை எம்.பி.க்கள் என மொத்தத்தில் 795 உறுப்பினர்களைக் கொண்ட தாகும்.

மக்களவை என்பது மக்களின் வாக்குரிமையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 543 எம்.பி.க்கள், 2 நியமன எம்.பி.க்கள் என மொத்தம் 545 உறுப்பினர்களை கொண்டது.
அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகை மற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், மாநில சட்டசபை எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.சி.க்கள் வாக்களித்து மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்கின்றனர்.
அவ்வகையில், ஆந்திர மாநிலத்தின் பிரதிநிதிகளாக 12 பேரும், அருணாசலப்பிரதேசத்தின் சார்பில் ஒருவரும், அசாமை சேர்ந்த 7 பேரும், பீகாரின் சார்பில் 16 பேரும், சத்தீஸ்கரை சேர்ந்த 5 பேரும், கோவாவை சேர்ந்த ஒருவரும், குஜராத்தை முன்னிலைப்படுத்த 11 பேரும், ஹரியானாவின் சார்பில் 5 பேரும், இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த 3 பேரும், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 4 பேரும், ஜார்க்கண்டை சேர்ந்த 6 பேரும், கர்நாடகாவை சேர்ந்த 12 பேரும், கேரளாவை சேர்ந்த 9 பேரும், மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த 11 பேரும், மகாராஷ்டிரத்தை சேர்ந்த 19 பேரும், மணிப்பூர், மிசோரம், மேகாலயா மற்றும் நாகலாந்தை சேர்ந்த தலா ஒருவரும், டெல்லியை சேர்ந்த 3 பேரும், ஒடிசாவை சேர்ந்த 10 பேரும், புதுச்சேரியை சேர்ந்த ஒருவரும், பஞ்சாப்பை சேர்ந்த 7 பேரும், ராஜஸ்தானை சேர்ந்த 10 பேரும், சிக்கிமை சேர்ந்த ஒருவரும், தமிழ்நாட்டை சேர்ந்த 18 பேரும், திரிபுராவை சேர்ந்த ஒருவரும், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 31 பேரும், உத்ரகாண்ட்டை சேர்ந்த 3 பேரும், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 16 பேரும் என மொத்தம்  238    பேர் மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ளனர்.
இது தவிர, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பல்துறை பிரமுகர்கள் 12 பேர் என பாராளுமன்ற மேல்சபை என்றழைக்கப்படும் மாநிலங்களவையில் மொத்தம் 250 பேர் எம்.பி.க்களாக உள்ளனர். ஆக மொத்தத்தில், இந்திய பாராளுமன்றம் என்பது 545 மக்களவை எம்.பி.க்கள், 250 மாநிலங்களவை எம்.பி.க்கள் என மொத்தத்தில் 795 உறுப்பினர்களைக் கொண்டதாகும்.
இவர்களில், மக்களவை உறுப்பினர்களுக்கு டெல்லியின் மையப் பகுதியில் ஒரு வீடு உள்பட மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை பல்வேறு வகையான சலுகைகள் வழங்கப்படுகிறது.
மாதாந்திரச் சம்பளமாக ரூ.16,000, மாதந்தோறும் தொகுதிப்படியாக ரூ.20,000,  அலுவலகப்படியாக ரூ.4,000, தபால் செலவினங்களுக்கு என ரூ.2,000, உதவியாளருக்கு ஊதியமாக ரூ.14,000-மும் வழங்கப்படுகிறது.  பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும்போது, அவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான தினப்படியாக ரூ.1,000 வழங்கப்படுகிறது.
மேலும், டெல்லியில் உள்ள வீட்டுக்கு ஆண்டொன்றுக்கு இலவசமாக 50,000 யூனிட் மின்சாரமும், 4,000 லிட்டர் தண்ணீரும் வழங்கப்படுகிறது. இரண்டு தொலைபேசி இணைப்புகள் இலவசம். அவை இரண்டிலும் ஆண்டொன்றுக்கு இலவசமாக ஒரு லட்சம் இலவச அழைப்புகள் மற்றும்  இண்டர்நெட்டுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி மூலமாக 50,000 இலவச அழைப்புகள், மொபைல் இன்டர்நெட்டில் இந்தியா முழுவதும் இலவச ரோமிங் ஆகியவையும் அளிக்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் ரெயிலில் செல்ல பயணச் சீட்டுகள், இந்தியாவுக்குள் 34 முறை மனைவி அல்லது உதவியாளருடன் இலவச விமானப் பயணம் செய்யவும் அனுமதிக்கப்படுகிறது. முதல் வகுப்பு ஏ.சி. ரயிலில் தனது குடும்பத்தினருடன் செல்ல இலவச அனுமதியும், மக்களவை கூட்டம் நடைபெறும் வேளையில் தங்கள் தொகுதியில் இருந்து 8 பேரை அழைத்து வந்து விவாதங்களைப் பார்வையிட வைக்க ரெயில் பயணச் சீட்டுகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. சோஃபா, மேஜை போன்றவை வாங்க ஆண்டொன்றுக்கு ரூ.75,000 வழங்கப்படுகிறது.
பதவியில் இருக்கும் போதும், ஓய்வு பெற்ற பின்னரும் 500 ரூபாயை மாதாந்திர சந்தாவாக செலுத்தி, மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கக் கூடிய தரமான இலவச மருத்துவ சிகிச்சைகளை பெறலாம்.
ஏதேனும் ஒரு அவையில் எம்.பி.யாக பதவி வகித்தவருக்கு, அடிப்படை ஓய்வூதியமாக மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு மேல் கூடுதலாக பதவியில் இருந்த ஒவ்வொரு ஆண்டுக்கும் மேலும் ஆயிரத்து 500 ரூபாய் என்ற கணக்கீட்டின்படி அதிகபட்சமான தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
இவ்வகையில், 5 ஆண்டுகளுக்கு மேல் கூடுதலாக 9 மாதங்கள் பதவி வகித்திருந்தால் கூட, அது ஓராண்டா கவே கணக்கிடப்படும். இரண்டு முறை எம்.பி.யாக (தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு) பதவி வகித்திருந்தால் மாதந்தோறும் 40 ஆயிரம் ரூபாயை ஓய்வூதியமாக பெற முடியும். இரு அவைகளிலும் எம்.பி.யாக பதவி வகித்தவர்கள் மரணம் அடைந்த பின்னரும், அவரது கணவர் அல்லது மனைவிக்கு இறந்தவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் சரிபாதி வழங்கப்படும்.