செவ்வாய், ஏப்ரல் 08, 2014

இலங்கை தமிழர்களை காக்க தி.மு.க. தவறிவிட்டது: ஜெயலலிதா குற்றச்சாட்டு

அரக்கோணம்: இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதை  தடுக்க தி.மு.க. தவறிவிட்டது என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
அரக்கோணம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார்.


அப்போது அவர் பேசுகையில், ''சாமானிய மக்களுக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி நடத்தியது. அவர்களின் ஆட்சியில் மக்கள் எண்ணற்ற பிரச்னைகளை சந்தித்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியில் சில மாதங்களுக்கு முன்பு வரை தி.மு.க.வும் அங்கம் வகித்தது.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதை தி.மு.க. தடுக்க தவறிவிட்டது. அதேபோல், காவிரி, முல்லை பெரியாறு விவகாரத்தில் தி.மு.க. மவுனம் காத்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது.

இருப்பினும், தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டிற்காக தொடர்ந்து போராடி வரும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான். எனவே, இந்த நலத்திட்டங்கள் தொடர அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்'' என்றார்.
திருவள்ளூர் பிரசாரம்

இதைத் தொடர்ந்து திருவள்ளூரில் தேர்தல் பிரசாரம் செய்த ஜெயலலிதா, ''கடந்த தேர்தலின் போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மேலும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் அதிகாரத்திலும், தமிழகத்தில் ஆட்சியின் அதிகாரத்தில் இருந்தபோதும், தி.மு.க. மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. ஆனால், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை ஆதரித்தது.

அதேபோல், மாபெரும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை தி.மு.க. முன்னின்று நடத்தியது. இந்த ஊழலால் தமிழகம் தலைகுனிவை சந்தித்தது. அதேபோல், மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் விலைவாசி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. காங்கிரஸ் அரசால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மக்களின் துயரங்களை போக்கும் தேர்தல்'' என பேசினார்.