புதன், ஏப்ரல் 02, 2014

தனது கலிங்கப்பட்டி வீட்டிற்கு இன்று வருகை தந்த தே.முதி.க. தலைவர் விஜயகாந்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியில், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., கொ.ம.தே.க., ஐ.ஜ.க. போன்ற கட்சிகள் அங்கம் வகித்துள்ளன. இந்நிலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் அவருக்கு ஆதரவாக இன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதையடுத்து, நெல்லையில் தங்கியிருந்த விஜயகாந்த்தை, தனது வீட்டிற்கு வருமாறு வைகோ அழைப்பு விடுத்திருந்தார். வைகோவின் அழைப்பை ஏற்று இன்று மாலை சுமார் 4 மணியளவில் வைகோ வீட்டிற்கு, விஜயகாந்த் சென்றார். தனது வீட்டின் வாசல் வரை வந்து வைகோ, விஜயகாந்திற்கு மாலை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் வீட்டிற்குள் சென்ற விஜயகாந்த், வைகோவின் தாயாருக்கு சால்வை அணிவித்து, காலில் விழுந்து ஆசி பெற்றார். இதைத் தொடர்ந்து தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரனை வைகோ அறிமுகம் செய்து வைத்தார்.