புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014


பரப்பளவில் சிறிய தொகுதிதான் என்றாலும், தமிழ்நாடே எதிர்பார்க்கும் பரபரப்பான தொகுதியில் மத்திய சென்னையும் ஒன்று.

 கடந்த இரண்டு முறை வென்ற தயாநிதி மாறன்தான் இந்த முறையும் தி.மு.க. வேட்பாளர். அ.தி.மு.க. சார்பில் எஸ்.ஆர்.விஜயகுமாரும் தே.மு.தி.க. சார்பில் ஜோ.க.ரவீந்திரனும் இவரை எதிர்த்துப் போட்டி போடுகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் சி.டி.மெய்யப்பனும், ஆம் ஆத்மி ஜே.பிரபாகரும் களத்தில் இருக்கின்றனர்.
தி.மு.க. அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே மத்திய சென்னையை மானப் பிரச்னையாகக் கருதுவதால், தேர்தல் களத்தில் ஏகத்துக்கும் அனல். இதுவரை நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க. ஒருமுறைகூட இந்தத் தொகுதியில் வெற்றி பெறவில்லை. இதனை உடைத்து அ.தி.மு.க-வை வெற்றிபெற வைத்து வரலாறு படைக்க வேண்டும் என தீயாக வேலை செய்துவருகிறார் விஜயகுமார்.
தயாநிதியும் சளைக்காமல் டைம் டேபிள் போட்டு வீதி வீதியாக வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளார். இவரது மனைவி ப்ரியாவும் தன் கணவருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்கிறார்.
தே.மு.தி.க. வேட்பாளர் ரவீந்திரன் பெயரே வாக்காளர்களுக்கு இன்னும் தெரியவில்லை. 'யாரோ விஜயகாந்த் கட்சியில் நிற்கிறார்களாம்’ என்றுதான் சொல்கிறார்கள். இந்தத் தொகுதியில் கவனிக்கப்படும் இன்னொரு வேட்பாளர், ஆம் ஆத்மியின் ஜெ.பிரபாகர். படித்த வாக்காளர்கள் பலரும் இந்தத் தொகுதியில் இருப்பதால், இவருக்கு கணிசமான வாக்குகள் விழும்.
மத்திய சென்னை தொகுதியில் பணக்கார வாக்காளர்களும் அதிகம் இருக்கிறார்கள்; அடித்தட்டு மக்களும் அதிகம் வாழ்கிறார்கள். 'இரண்டாவது வகையினர் வாக்கு இரட்டை இலைக்குதான். முதல் வகையினர் எங்கே வாக்குச்சாவடிக்கு வரப்போகிறார்கள்?’ என்பது அ.தி.மு.க-வினரின் கணக்கு. 'தி.மு.க-வின் கோட்டையான மத்திய சென்னையை விட்டுக்கொடுக்க மாட்டோம். மத்திய சென்னையில் உதயசூரியனை அஸ்தமிக்க விடமாட்டோம். மக்களும் விடமாட்டார்கள்’ என அதீத நம்பிக்கையில் தி.முக-வினர் இருக்கிறார்கள். ஆக மொத்தம் கடுமையான போட்டி நிலவுவதால், யாருக்கு வெற்றி கிடைத்தாலும் சரி... சில ஆயிரம் வாக்கு வித்தியாசங்களில்தான் வெற்றி கிடைக்கும் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். இதற்கெல்லாம் மேலாக, 'ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாக’யாக நிற்கும் தயாநிதி மாறனை ஜெயிக்கவைத்தால், கட்சிக்குள் தங்களுக்கு நல்ல உயர்வு கிடைக்கும் என எண்ணி, தேனீயாக வேலை செய்கிறார்கள் உடன்பிறப்புகள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது மத்திய சென்னையை தி.மு.க. தக்கவைக்கும் என்றே தெரிகிறது.
 

தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது ஸ்ரீபெரும்புதூர். தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனும், அ.தி.மு.க. சார்பில் கே.என்.ராமச்சந்திரனும், பி.ஜே.பி. கூட்டணியில் ம.தி.மு.க. வேட்பாளராக டாக்டர் மாசிலாமணியும் காங்கிரஸ் வேட்பாளராக அருள் அன்பரசும் களம் காண்கிறார்கள்.
அரக்கோணம் தொகுதி எம்.பி-யான ஜெகத்ரட்சகன் ஸ்ரீபெரும்புதூருக்கு முகாம் மாறிவிட்டார். தொகுதியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள தி.மு.க. போராடுகிறது. பல கல்லூரிகளின் அதிபரும் பிரபல பிசினஸ் புள்ளியுமான ஜெகத்ரட்சகனின் சொத்து மதிப்பு 78 கோடி. ஆனால், ஜெகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் சொத்து மதிப்பைக் காட்டியிருக்கிறார், அ.தி.மு.க. வேட்பாளர் ராமச்சந்திரன். அதனால் இரண்டு பக்கமும் தாராள செலவுகளுக்குப் பஞ்சமே இல்லை. செலவு செய்தும் ஆங்காங்கே அ.தி.மு.க-வினரிடையே அதிருப்தி நிலவுகிறது. தொகுதி பொறுப்பாளரான அமைச்சர் சின்னய்யா கொடுத்த வாக்குறுதிகளை சரிவர நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி வேட்பாளர் பக்கம் திரும்பியிருக்கிறது. தொழில் வளர்ச்சியால் விவசாய பகுதிகள் தொழில் நகரங்களாக மாறிவிட்டன. வெளிமாவட்டங்களில் இருந்து வருகிறவர்கள் இங்கேதான் பெருமளவில் குடியேறுகிறார்கள். இதனால் தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் எண்ணிக்கை இங்கே அதிகம். அத்துடன் அவர்களுக்கான பிரச்னைகளும் அதிகம். தாம்பரம் ஏரியாவில் போக்குவரத்து நெரிசல், தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுப்பது இங்கே பிரதானப் பிரச்னையாக இருக்கிறது. இது அத்தனையும் ஆளுங்கட்சிக்கு மைனஸ் ஆக வாய்ப்பிருக்கிறது.
ம.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் மாசிலாமணி  கூட்டணி பலத்துடன் வலம் வருகிறார். புதிய வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதி இது. பி.ஜே.பி-க்கு இங்கு செல்வாக்கு அதிகம் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தனக்காக இந்தத் தொகுதியை பி.ஜே.பி.யை சேர்ந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தயார் செய்து வைத்திருந்தார். கடைசி சமயத்தில் தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால், தமிழிசையின் உழைப்பு டாக்டர் மாசிலாமணிக்கு உதவியாக இருக்கிறது. வன்னியர்கள் வாக்கும் இங்கு உள்ளது. அதுவும் கூடுதல் பலம்.
'ராஜீவ் காந்தி உயிர்நீத்த பூமியில் நிச்சயம் வெற்றி பெறுவோம்’ என்ற நம்பிக்கையோடு களமிறங்கியிருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் அருள் அன்பரசு. இந்தத் தொகுதியில் காங்கிரஸுக்கு இருக்கும் செல்வாக்கு அருளுக்கு கணிசமான வாக்குகளை வாங்கித் தரும்.
அ.தி.மு.க-வுக்கு இருக்கும் அதிருப்திகளை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு உதயசூரியன் வாக்கு வங்கிகளை வைத்து தி.மு.க. முன்னேறுகிறது. அதனால் ஜெகத்ரட்சகன் ஜொலிக்கிறார்.
 
  
ஜெயலலிதா முதன்முதலாகப் பிரசாரத்தைத் தொடங்கிய தொகுதி காஞ்சிபுரம்.
தனித் தொகுதியான இதில் அ.தி.மு.க. சார்பாக மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பாக செல்வம், ம.தி.மு.க. சார்பாக மல்லை சத்யா, காங்கிரஸ் சார்பாக சிட்டிங் எம்.பி. விஸ்வநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஓய்வு இல்லாமல் பிரசாரம் செய்து வரும் மரகதம் குமரவேலுக்கு கட்சி மேலிடம், தேர்தல் பொறுப்பாளர்கள், சொந்த செல்வாக்கு என அனைத்தும் இருப்பதால் ஆரம்பத்தில் இருந்தே சுறுசுறுப்புக்குப் பஞ்சம் இல்லை.  
தொகுதி முழுக்க நன்கு அறிமுகம் உள்ளவர் ம.தி.மு.க-வைச் சேர்ந்த மல்லை சத்யா. திருப்போரூர், மாமல்லபுரம் போன்ற பகுதிகளில் தொல்லியல் துறைக்கு எதிராக உள்ளூர் மக்களுக்காக ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்திருக்கிறார். தே.மு.தி.க., பா.ம.க. கட்சியினர் பங்களிப்பும், ஜெயலலிதா மீது உள்ள கோபமும் மல்லை சத்யாவுக்கு சாதகம். வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் வ.கோ.ரங்கசாமிக்கும் பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகத்துக்கும் இடையே உள்ள பகை, பி.ஜே.பி-யில் நிலவும் கோஷ்டிப்பூசல், பணபலம் குறைவு ஆகியவை மைனஸ். 'மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வரப்போகிறது. அப்படியானால், அந்தக் கூட்டணி வேட்பாளர்தான் நம் தொகுதியில் ஜெயிக்க வேண்டும்’ என்று காஞ்சிபுரத்தில் படித்தவர்கள் மத்தியில் செய்யப்படும் பிரசாரம் இவருக்கு ப்ளஸ்.
கடந்த மூன்று முறை தி.மு.க. தனது கூட்டணிக்கே ஒதுக்கியதால், கூட்டணிக் கட்சி வெற்றிக்கே பாடுபட்டு கட்சியினர் அதிருப்தியில் இருந்தனர். இந்த முறை தி.மு.க. வேட்பாளராக செல்வம் அறிவிக்கப்பட்டது, தி.மு.க-வுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறார் முன்னாள் அமைச்சர் த.மோ.அன்பரசன். எதிர் தரப்பினரின் வாக்குகள் சிதறும் நிலையில், தி.மு.க. வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற்றாலே வெற்றிதான் என்ற ஃபார்முலாவோடு தொகுதி முழுக்கச் சுற்றி வருகிறார். காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு போன்றவை தி.மு.க-வுக்குச் சாதகமான பகுதிகள். மதுராந்தகம், அச்சரப்பாக்கம் பகுதியில் நிலவும் கோஷ்டி பூசல்களால் தி.மு.க. திணறுகிறது.
காங்கிரஸ் கட்சியின் சார்பாக இந்த முறையும் இதே தொகுதியில் போட்டியி​டுகிறார் விஸ்வநாதன். 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் இவருக்கு பலம். மேற்கண்ட மூன்று வேட்பாளர்களின் ஓட்டுகளை கணிசமாக சிதைப்பதில் இவருடைய பங்கு இருக்கும்.
மைனஸ் எதுவும் இல்லாமல் மரகதம் குமரவேல் முந்துகிறார்.

ad

ad