புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2014


வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மூன்று வெள்ளைப்புலி குட்டிகள் 
 


அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலுள்ள 10 வயதுள்ள அனு என்கிற பெண் வெள்ளைப்புலிக்கும், 11 வயதுள்ள பீஷ்மர் என்கிற ஆண் வெள்ளைப்புலிக்கும்
16.03.2014 அன்று மூன்று குட்டிகள் பிறந்துள்ளன. இதில் ஒரு ஆணும் இரண்டு பெண்ணும் அடங்கும்;. தற்போது புதிதாக பிறந்த குட்டிகளோடு சேர்த்து உயிரியல் பூங்காவில் மொத்தம் 14 வெள்ளைப்புலிகள் உள்ளன.

தற்போது பிறந்துள்ள குட்டிகளின் தந்தை பீஷ்மர், தாய் அனு ஆகிய வெள்ளைப்புலிகள் 2006 ஆம் ஆண்டில் புதுடில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவிலிருந்து விலங்குகள் பரிமாற்ற முறையின் மூலம் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டவை. 
இவை இனப்பெருக்கம் செய்து தற்போது உயிரியல் பூங்காவில் வெள்ளைப்புலிகளின் எண்ணிக்கையை பதினான்காக உயர்த்தியுள்ளன. தற்போது குட்டி ஈன்றுள்ள தாய்க்கு வழக்கமாக தினந்தோறும் வழங்கப்படும் 7 கிலோ மாட்டிறைச்சி மற்றும் 150 கிராம் கல்லீரலுடன் சிறப்பு உணவாக 4 கிலோ கோழி இறைச்சியும் அளிக்கப்படுகிறது. உயிரியல் பூங்கா வன விலங்கு மருத்துவர்களால் தாய்; மற்றும் குட்டிகளின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
தற்போது நிலவும் கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்டு பிரசவ அறையில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரசவ அறையைச் சுற்றிலும் கோணிப்பை கட்டப்பட்டு காலை, மாலை இரு வேளையும் தண்ணீரால் ஈரப்படுத்தப்படுகிறது. 
காற்றோட்டத்தை அதிகரிக்கும் பொருட்டு மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது. பலகைகளால் ஆன படுக்கையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தாயும், சேயும் ஆரோக்கியமாக உள்ளன. மேலும் சிசிடிவி கேமரா பிரசவ அறையில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தாய் மற்றும் குட்டிகளின் செயல்பாடுகள் தொடர்ந்து இருபத்தி நான்கு மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
வெள்ளைப்புலிகளின் தாயகம் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளாகும். வெள்ளைப்புலிகளும், சாதாரணமாக காடுகளில் காணப்படும் வங்கப்புலி இனமும் ஒரே இனம் தான். ஆனால் மரபணு நிறமி குறைப்பாடு காரணமாக வெள்ளைப்புலிகள் உருவாகின்றன. 
இந்திய பூங்காக்களில் சுமார் 100 வெள்ளைப்புலிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வங்கப்புலிகள் 3 முதல் 4 வயதில் இனப்பெருக்கத்திற்கு தயார் ஆகின்றன. இவை கருத்தரித்து 101 - 105 நாட்களில் குட்டிகளை ஈனும். பிறந்த குட்டிகள் சுமார் 750 கிராம் எடை கொண ;டிருக்கும். குட்டிகள் 11 - 13 நாட்களில் கண் திறக்கும். பிறந்ததிலிருந்து தாய்ப்பாலை உணவாகக் கொள்ளும் குட்டிகள் சுமார் மூன்று மாதங்களில் இறைச்சி உண்ணத் தொடங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குநர் பத்திரிகைகளுக்கு கொடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ad

ad