புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2014

 தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் காலை 10 மணி முதல் வெளியாகும்           
இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 9 கட்டங்களாக நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் சராசரியாக 73.68 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தது. ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 64.47 சதவீத வாக்குகள் பதிவானது.

வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 42 வாக்கு எண்ணும் மையங்களுக்கு மின்னணு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் பாராளுமன்றத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள 42 மையங்களிலும் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணியில் இருந்து 8.30 மணி வரை தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது.

அதனை தொடர்ந்து ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதிக்கும் உள்ளடங்கியுள்ள 6 சட்டமன்றத்தொகுதிகளை தனித்தனியாக பிரித்து, ஓட்டுகள் எண்ணப்படும். ஒவ்வொரு சட்டமன்றத்தொகுதிக்கும் ஒரு அரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரங்கிலும் ஓட்டு எண்ணிக்கைக்காக 14 மேஜைகளும், முதன்மை அலுவலருக்காக ஒரு மேஜையும் போடப்பட்டு இருக்கும்.

இந்த அரங்கத்துக்குள் ஓட்டு எண்ணிக்கைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் தவிர வேறு யாரும் நுழைய முடியாது. முதன்மை அதிகாரி இருக்கும் இடம் வரைக்கும் வேட்பாளர்கள் வரலாம். 14 மேஜைகளில் ஒவ்வொரு மேஜையிலும் ஒரு நுண்பார்வையாளர் இடம் பெற்றிருப்பார்.

அரங்கத்தைச்சுற்றி வேலி போடப்பட்டு இருக்கும். அந்தப்பகுதிக்குள் வேட்பாளர்களின் முதன்மை ஏஜெண்ட் அல்லது வாக்கு எண்ணிக்கை ஏஜெண்டுகள் இருக்க வேண்டும். அவர்கள் அங்கும் இங்கும் நடமாட முடியாது.

வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பு அறைகளில் இருந்து எடுத்து வந்து, அவற்றை பிரித்து, ஓட்டு எண்ணிக்கை தொடங்குவது, ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் அவற்றை மூடுவது உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ படம் எடுக்கப்படும்.

ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் தேர்தல் கமிஷன் நியமித்துள்ள பார்வையாளர் இருப்பார். அவரைத்தவிர வேறு யாரும் மையத்துக்குள் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது. பத்திரிகையாளர்கள், அவர்களுக்கான மீடியா மையம் வரை செல்போனை கொண்டு செல்லலாம். இதற்கான அனுமதியை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வைத்திருக்கும் பத்திரிக்கையாளர்களை போலீசார் தடுக்க கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் ஒவ்வொரு சுற்றின் முடிவும், வேட்பாளர்கள் ஏஜெண்டுகளுக்கு நகலாகத்தரப்படும். அவர்களின் ஒப்புதல் பெற்ற பிறகே 2-வது சுற்று எண்ணிக்கை தொடங்கும். முன்னதாக, ஆவணத்தில் பதிவு செய்யப்பட்ட ஓட்டு எண்ணிக்கையும், எந்திரத்தில் உள்ள ஓட்டு எண்ணிக்கையும் சரியாக இருக்கிறதா? என்பதை பார்வையாளர்கள் சரி பார்ப்பார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 20 சுற்றுகள் வரை ஓட்டுகள் எண்ணப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

முதல் சுற்று எண்ணிக்கை முடிவுகளை காலை 9.30 மணியில் இருந்து 10 மணிக்குள் தெரிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு சுற்றின் முடிவும் தேர்தல் ஆணையத்தின் இணையதள முகவரியில் வெளியிடப்படும். வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே தேர்தல் முடிவுகளை பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக ஒலிபெருக்கி வசதிகள் செய்து தரப்படும். முதன்மை அலுவலரின் அருகில் உள்ள கரும்பலகையில், ஒவ்வொரு சுற்று எண்ணிக்கையின் அதிகாரப்பூர்வ முடிவுகள் எழுதிக்காட்டப்படும்.

வாக்கு எண்ணிக்கை இன்று நடப்பதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதால் வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு குறித்து போலீஸ் தரப்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் அறையை சுற்றி முதல் அடுக்கு பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், 2-வது அடுக்கு பாதுகாப்பு பணியில் மாநில ஆயுதப்படையினரும், 3-வது அடுக்கு பாதுகாப்பில் சட்டம்-ஒழுங்கு காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் போலீசாரால் 24 மணிநேரமும் வாக்குப்பதிவு மையங்கள் கண்காணிக்கப்படுகிறது.

வாக்கு எண்ணும் மையங்களில் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடாக ஒவ்வொரு மையங்களிலும் ஒரு கூடுதல் ஆணையாளர், ஒரு இணை ஆணையாளர் தலைமையில் 3 துணை ஆணையாளர்கள், 12 உதவி ஆணையாளர்கள், 30 காவல் ஆய்வாளர்கள், 100 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 700 சட்டம்-ஒழுங்கு போலீசாரும், ஆயுதப்படை காவலர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது தவிர ஒவ்வொரு மையங்களிலும் அதிரடிப்படைகள் மற்றும் அதிவிரைவு படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை காவல் ஆணையாளர் ஜே.கே.திரிபாதி உயர் அதிகாரிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தக்க ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அதன்படி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் வீடியோ கவரேஜ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 22 ஆயிரம் போலீசார், 2 ஆயிரம் ஊர்க்காவல் படையினர், 2,200 இளைஞர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ad

ad