திங்கள், மே 26, 2014

 சிம்லா அருகே  பேரூந்து கவிழ்ந்து 10 பேர் பலி 
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா அருகே பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு

சொந்தமான அந்த பஸ், இன்று மாலை 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தியோக்கில் இருந்து நேரி என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தது. புறப்பட்ட சிறிது நேரத்தில் பால்கர் என்ற இடத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 150 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில், 8 பெண்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. காயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இந்த விபத்து குறித்து இமாச்சல பிரதேச ஆளுநர் ஊர்மிளா சிங், முதல்வர் வீரபத்ர சிங் ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், இறந்தவர்களின் உறவினர்களுக்கு தங்கள் இரங்கலையும் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை மந்திரி பாலி அறிவித்துள்ளார்.