புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2014

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுலாக்கும்படி மோடி அரசை நாம் வலியுறுத்த வேண்டும்!- மனோ கணேசன்
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுங்கள், 13ம் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யுங்கள், தமிழ் பயங்கரவாதத்தை அழிக்கிறோம் என்ற போர்வையில் சீன - பாகிஸ்தானிய ஊடுருவல்களுக்கு இடம் கொடாதீர்கள், இந்த மூன்று நிலைப்பாடுகளுக்கும் இலங்கை அரசை உடன்பட செய்யுங்கள் என்று..

...புதிய பாரத பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி, இலங்கையில் இருந்து ஒரே குரலில், தமிழ் தலைமைகள் சொல்ல வேண்டும். இதற்கு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் இடையூறு விளைவிக்க கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
முன்னணியின் வாரந்தர அரசியல் ஆய்வு கூட்டம் இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் டெல்லியில் ஆட்சியை அமைக்கின்றது. தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா அபார வெற்றியடைந்துள்ளார். எனினும் உடனடியாக அதிமுகவின் ஆதரவு மோடி அரசுக்கு தேவைப்படாது.
தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள பாமகவின் அன்புமணி, பாஜகவின் இராதாகிருஷ்ணன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் அமைச்சரவையில் இடம்பெறலாம் என்பது ஒரு ஆறுதலாக இருக்கலாம்.
புதிய மோடி அரசுடனான உறவை வலுப்படுத்தும் முயற்சிகளை, இலங்கை அரசு உடனடியாக தொடங்கிவிட்டது. உண்மையில் நடைபெற்ற தேர்தலுக்கு முன்னரே இம்முயற்சிகள் ஆரம்பமாகின. இது வரவேற்க கூடியதுதான்.  அண்டை நாடுகள் இரண்டும் நல்லுறவு கொள்வது இரு நாட்டு மக்களுக்கும் நன்மை தரக்ககூடியதாகும்.
ஆனால், இலங்கை தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் இந்திய அரசுடன் ஏற்படுத்திக்கொண்ட கடப்பாடுகளை தவிர்த்துவிட்டு, தனது இனவாத அரசியல் நோக்கங்களை நிறைவேற்றி கொள்ளும் முகமாக மாத்திரம் இந்திய உறவை பயன்படுத்த இலங்கை அரசு முயற்சிக்கிறது.  இதை இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்நிலையில், நரேந்திர மோடி நிர்வாகத்துடன் வறட்டு பிடிவாதம் பிடித்து அல்லது வறட்டு சமிக்ஞையை காட்டி, இலங்கை அரசின் கபட நோக்கத்தை சுலபமாக்கி, அதன் மூலம் இப்போது இருப்பதையும் இழக்கச் செய்யும் முனைப்புகளில் தவறுதலாக கூட தமிழர் தரப்புகள் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது.
இவ்விடயத்தில் புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகள் தன்னிச்சையான இடையூறுகளை விளைவிக்க கூடாது. இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட இருநாட்டு ஒப்பந்ததை மையபுள்ளியாக கொண்டு இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணும்படி புதிய நரேந்திர மோடி அரசாங்கத்தை நாம் வலியுறுத்த வேண்டும்.
இலங்கைக்கு வந்து சென்ற அப்போதைய இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர், எதிர்கால அமைச்சர் சுஷ்மா சுவராஜடனான பேச்சுவார்த்தையின் போது, அவர் 13ம் திருத்தத்தை மைய புள்ளியாக கருதியதை நான் அவதானித்தேன்.
13ம் திருத்தத்தின் அடிப்படையிலான முழுமையான அதிகாரங்களை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளுக்கு வழங்கப்படும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு இந்திய மத்திய அரசின் ஒத்துழைப்பு அத்தியாவசியமாகும்.
இந்நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எந்தவித அதிகாரப்பகிர்வும் வழங்கப்படக்கூடாது என கூக்குரல் இடும் இனவாதிகளை நாம் ராஜதந்திரரீதியாகவும், ஜனநாயகரீதியாகவும் தோற்கடிக்க வேண்டும். இவர்கள் அடிக்கின்ற தாளங்களுக்கு நாம் ஆட முடியாது. காத்திரமான செயற்பாட்டுக்கான நேரம் இப்போது வந்து விட்டது.
இந்நோக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுப்புகளை எடுக்குமானால், அதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும். இந்த செயற்பாட்டில் இலங்கை வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் பெருவாரியான வாக்குகளை பெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

ad

ad