திங்கள், மே 26, 2014

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பாலிவுட் நட்சத்திரங்கள்
மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பாலிவுட் நட்சத்திரங்கள்நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றுக்கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள், தேசிய தலைவர்கள், மத தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள், சினிமா
நட்சத்திரங்கள் என 3000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

குறிப்பாக பாலிவுட் நட்சத்திரங்களான சல்மான் கான், தர்மேந்திரா, அனுபம் கெர் மற்றும் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த ஹேமமாலினி, சத்ருகன் சின்கா, கிரன் கெர், விவேக் ஓபராய், ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.

வினோத் கன்னா, போஜ்பூரி பாடகர்-நடிகர் மனோஜ் திவாரி, பாலிவுட் தயாரிப்பாளர் மதுர் பண்டார்கர், இசையமைப்பாளராக இருந்து அரசியலுக்கு வந்த பாபி லகிரி, பூனம் தில்லான் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.

மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், மெலடி குயின் லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக விழாவில் லதா மங்கேஷ்கர் பங்கேற்கவில்லை. இதற்காக வருந்துவதாக அவர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். புதிய பயணத்தை தொடங்கும் உங்களுடன் ஒட்டுமொத்த நாடே இருக்கும் என்றும் லதா மங்கேஷ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்