புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2014

மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டம்- வைகோ அறிவிப்பு 
டெல்லியில் எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறவுள்ள மோடியின் பதவியேற்பு விழாவிற்கு வருகை தரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி போராட்டம்
இடம்பெறும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றுதான் மே 26 நரேந்திர மோடி அரசு பதவி ஏற்பு விழாவாகும்.

நரேந்திர மோடியின் மகத்தான வெற்றிக்கு மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் தெரிவித்துவிட்டு, ஈழத் தமிழ் இனப்படுகொலை செய்த கொடிய பாவி ராஜபக்ச, புதிய அரசின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதைக் கடுமையாக எதிர்க்கிறேன்.

எங்கள் மனவேதனையையும் எதிர்ப்பையும் வரலாற்றில் பதிவு செய்ய வேண்டியது தமிழர்களின் தலையாய கடமை ஆகும் என்பதால், ராஜபக்ச இந்திய மண்ணில் கால் வைப்பதை எதிர்த்து, நாளை மறுநாள் மே 26 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தரில் என்னுடைய தலைமையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் கருப்புக்கொடி ஏந்தி அறப்போர் நடத்துவோம்.

என்றைக்கு இந்தியாவுக்குள் ராஜபக்ச நுழைந்தாலும் அக்கொடியவன் வருகையை எதிர்த்து நாங்கள் அறப்போர் நடத்துவோம் என்று மத்தியப் பிரதேசத்தில் சாஞ்சியை நோக்கி புறப்பட்ட முற்றுகைப் போராட்டத்தின் போது நான் அறிவித்தேன்.

அதன்பின்னர், தலைநகர் டெல்லிக்கு வந்து இந்தியப் பிரதமரை ராஜபக்ச சந்திக்கப் போவதாக அறிவிப்பு வந்தவுடன் நானும் என் சகாக்களும் டெல்லியில் அதே ஜந்தர் மந்தரில் ராஜபக்ச வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டோம்.

பீகார் பயணத்தை மட்டும் முடித்துக்கொண்டு கடைசி நேரத்தில் தனது டெல்லி வருகையை இரத்து செய்துவிட்டு, திருப்பதிக்கு ஓடிப்போனான் ராஜபக்ச. அங்கும் எங்கள் தோழர்களும், உணர்வாளர்களும் அறப்போர் நடத்திக் கைதானார்கள்.

தமிழ் இனப்படுகொலை செய்ததற்காக சர்வதேச நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கொடிய குற்றவாளியை இந்தியப் பிரதமரின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கச் செய்வது அந்த விழாவின் உன்னதத்தையே அடியோடு நாசப்படுத்தி களங்கப்படுத்துவது ஆகும்.

இலங்கைத் தீவில் வெறிபிடித்த புத்த பிட்சுகள் சுவாமி விவேகானந்தர் அவர்களையே கற்களையும் செருப்புக்களையும் வீசித் தாக்கினார்கள். இதுவரை இலங்கையில் இந்துக் கோவில்கள் சிவன் கோவில், காளி கோவில், முருகன் கோவில் உள்ளிட்ட 2,300 ஆலயங்கள் சிங்கள வெறியர்களால் தாக்கி தகர்க்கப்பட்டன.

கிறித்துவ தேவாலயங்கள் தாக்கப்பட்டன; கடைசியாக இப்பொழுது இஸ்லாமிய மசூதிகள் மீதும் தாக்குதல் நடக்கிறது. இந்துக் கோவில்களின் வளாகங்களில் புத்தர் சிலைகளை நிறுவி பௌத்த விகாரைகளைக் கட்டுகிறார்கள்.

ஈழத் தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, கட்டாயச் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு விட்டன. இப்பொழுதும் சிங்களக் குடியேற்றங்கள் வேகமாக நடக்கின்றன.

தமிழர் தாயகத்தில் சிங்கள இராணுவம் முகாம்கள் அமைத்து ஹிட்லர் வதை முகாம்களைப் போல, யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகள் அச்சத்தையும் பீதியையும் தருகிற சிறைமுகாம்களாக ஆக்கப்பட்டுவிட்டன.

ஈழத் தமிழ்ப் பெண்கள் நாள்தோறும் பாலியல் கொடுமைக்கு ஆளாகின்றனர். தமிழர்களின் கலாச்சார சுவடே இல்லாமல் ஆக்க கலாசாரப் படுகொலையும் கட்டமைப்பு படுகொலையும் ராஜபக்ச அரசால் நடத்தப்படுகின்றன.

பச்சிளம் குழந்தைகள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதற்கு மாவீர மகன் பாலச்சந்திரன் படுகொலையே சாட்சியமாகும். தமிழ்ப் பெண்கள் சிங்கள இராணுவத்தால் நாசமாக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு இசைப்பிரியா படுகொலையே சாட்சியமாகும்.

ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமை கவுன்சிலில் ஜனநாயக நாடுகள் பலவும் சேர்ந்து சிங்கள அரசு மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றின. இனக்கொலை கூட்டுக் குற்றவாளியான சோனியா காந்தி இயக்கிய இந்திய அரசு ஜெனீவா கவுன்சிலில் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு தன் துரோகத்தைத் தொடர்ந்தது.

இந்தத் துரோகச் செயல்கள் அரங்கேற சிங்கள அரசுக்கும், சோனியா காந்திக்கும் கைக்கூலிகளாக செயல்பட்ட ஒரு சில அதிகாரிகள் இப்பொழுதும் அதே துரோகத்தைத் தொடர்வதற்கு நரித் தந்திரமாக செயல்படுகிறார்கள்.

புதிய அரசுக்கு மிகத் தவறான பாதையைக் காட்டி உள்ளார்கள். இந்தச் சதிச் செயலுக்குப் பின்னால், யார், யாரெல்லாம் இருக்கிறார்கள், யாரையெல்லாம் ராஜபக்ச பயன்படுத்துகிறான் என்பதை நான் நன்றாக அறிவேன்.

தமிழர்களின் இரத்தம் தோய்ந்த கரங்களோடு ராஜபக்ச புதிய அரசு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பது தமிழர் நெஞ்சத்தில் சூட்டுக்கோலைத் திணிக்கும் செயல் ஆகும்.

முத்துக்குமார் உள்ளிட்ட 19 உத்தமத் தியாகிகள் மேனியைக் கருக்கிய நெருப்பு எங்கள் நெஞ்சத்தில் அணையாத தணலாக ஏற்கனவே இருக்கிறது.

தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலகம் எல்லாம் வாழும் தமிழர்களும் ஈழத்தைச் சூழ்ந்துவிட்ட மரண இருள் எப்பொழுது நீங்கும்? என்று பிறக்கும் நீதியின் விடியல்? என்று ஏங்குகின்றனர். இந்தியாவில் நரேந்திர மோடி அரசு பொறுப்பு ஏற்றால், நீதியின் கதவுகள் திறக்கும் நிரந்தர வெளிச்சத்துக்கு வழி பிறக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், பஞ்சமா பாதகம் செய்த ராஜபக்ச இந்தியாவுக்குள் நுழைவதை எதிர்க்க வேண்டியது எங்களின் தவிர்க்க முடியாத கடமை ஆகும் என்பதால்,

மே 26 ஆம் திகதி தலைநகர் டெல்லியில் காந்திய வழியில் வன்முறையற்ற அறவழியில் எங்கள் கருப்புக்கொடிப் போராட்டம் நடைபெறும் என்பதை கனத்த இதயத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே நாளில், மே 26 திங்கட்கிழமை காலை 11 மணி அளவில், தலைநகர் சென்னையில் வடசென்னை துறைமுகம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கறுப்புக்கொடி அறப்போர் நடைபெறும். கழகத் தோழர்களும், உணர்வாளர்களும் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறேன் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

ad

ad