திங்கள், மே 26, 2014


போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் 5 பேரை விடுதலை செய்து  கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி இன்று மாலை பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க அழைப்பு
விடுக்கப்பட்டது. இதில், இலங்கை அதிபர் ராஜபசேவுக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பை திசை மாற்றும் வகையில் இலங்கை சிறையில் தற்போது இருந்து வரும் தமிழக மீனவர்களை விடுவிக்க ராஜபசே உத்தரவிட்டார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்திலிருந்து தங்கச்சிமடம் மீனவர்கள் அகஸ்டஸ், எமர்சன், வில்சன், பிரசாந்த், லாநெட் ஆகிய 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கச்சதீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு இலங்கை கடற் படையினர் அவர்களை சிறைபிடித்து சென்றனர்.

மேலும், அவர்கள் மீது போதை பொருள் கடத்தியதாக வழக்கு பதிவு செய்து இலங்கை நீதிமன்றத்தின் மூலம் சிறையில் அடைத்தனர். மத்திய, மாநில அரசுகளிடம் இந்த மீனவர்களை மீட்டுத் தருமாறு அவர்களது குடும்பத்தினர் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் மீனவர்கள் விடுவிக்கப் படவில்லை. தமிழக அரசு இந்த மீனவர்கள் சார்பாக வழக்காட வழக்கறிஞரை ஏற்பாடு செய்திருந்தது. 5 மீனவர்கள் மீதான வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் மீனவர்கள் வெளிகடை சிறையில் இருந்து வந்தனர்.

இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ள இலங்கை அதிபர் ராஜபசே இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க இருப்பதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து இன்று காலை கொழும்பு நீதிமன்ற நீதிபதி நல்லெண்ண அடிப்படையில் இலங்கை வெளிகடை சிறையில் இருக்கும் இந்திய மீனவர்கள் 5 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.


கடந்த 30 மாதங்களாக சிறையில் இருந்து வந்த மீனவர்கள் 5 பேரும் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ள செய்தி அந்த மீனவர்களின் குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.