புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014


தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரம் :முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணிகள் தொடங்கியது!
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் உச்சநீர்மட்டம் 152 அடி ஆகும். இந்த அணை பலவீனம் அடைந்து விட்டதாக
கூறி கேரள மாநில அரசு அணை நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதன் விளைவாக கடந்த 1979–ம் ஆண்டு அணை நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டு மதகுகள் 136 அடிக்கு நிலை நிறுத்தப்பட்டன. அதன்பிறகு அணையை பலப்படுத்தும் பணியை தமிழக பொதுப்பணித்துறை தீவிரமாக மேற்கொண்டது.


இதன் எதிரொலியாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது அங்கீகாரம் பெற்ற உயர்மட்ட குழுவை நியமித்து அணையின் பலத்தை சோதனையிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் அந்த குழு பல்வேறு கட்ட சோதனைகளை முடித்து ஆய்வறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையை பரிசீலனை செய்த சுப்ரீம் கோர்ட் கடந்த 7–ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறியது. அந்த தீர்ப்பில், முல்லைப்பெரியாறு அணை பலமாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும் கோர்ட் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.
இருப்பினும் அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் பணிகளை தீர்ப்பு வந்த மறுநாளில் இருந்தே தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அணையின் மதகு பகுதியில் 136 அடிக்கு பதிலாக 142 அடி அளவில் மதகை நிலை நிறுத்த அளவீடு மற்றும் குறியீடு செய்யும் பணிகளில் தமிழக பொதுப்பணித்துறை ஊழியர்கள் குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை விரைந்து முடித்து மதகை 142 அடிக்கு நிலை நிறுத்த தமிழக அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர்,‘ சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் பணியை கடந்த 8–ந்தேதியே தமிழக பொதுப்பணித்துறை தொடங்கி விட்டது. முதற்கட்டமாக அணை மதகு பகுதியில் 142 அடியாக மதகை நிலை நிறுத்த அளவீடு மற்றும் குறியீடு செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இந்த பணியில் 5 பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த பணிகளை துரிதமாக முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

ad

ad