புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2014

விரட்டி விரட்டிக் கலைத்து நடுவீதியில் வாள் வெட்டு; இளைஞர் படுகாயம்; பூநாறி மரத்தடியில் கொடூரம் -ஆவா  குழுவின் அட்டகாசம் 
முச்சக்கர வண்டியில் வந்த இரு இளைஞர்களை கொக்குவில் சந்தியிருந்து விரட்டிய பத்துப் பேர் கொண்ட கும்பலொன்று, பூநாறிமரம் பகுதியில் வைத்து
மறித்து, கலைத்து கலைத்து, கைக் கோடாலியால் வெட்டியும் பொல்லுகளால் கடுமையாகவும் தாக்கியது. தாக்குதலில் நிலைகுலைந்த ஓர் இளைஞர் சம்பவ இடத்திலேயே வீழ்ந்தார். மற்றைய இளைஞர் ஓடித் தப்பினார்.
 
சினிமாப் படப்பாணியில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது கொக்குவில் மஞ்சவனப் பகுதியில், கே.கே.எஸ் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளுடன் நின்ற கும்பலொன்று, ஓட்டோவில் சென்றவர்களைத் துரத்தியது. பிரதான வீதி வழியாக ஓட்டோவை இளைஞர்கள் வேகமாகச் செலுத்திய போதும் பூநாறிமடச் சந்திப் பகுதியில் வைத்து ஓட்டோவை மடக்கியது மோட்டார் சைக்கிளில் துரத்திய கும்பல். ஆட்டோ மீது கல்லெறிந்து ஆட்டோ கண்ணாடியையும் அடித்து நொருக்கியது.
 
ஓட்டோவை ஓட்டி வந்த இளைஞன் வேகமாக தப்பித்து ஓடினார். மற்றைய இளைஞன் காலில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக ஓட முடியாத நிலையில் விரட்டி வந்த கும்பலால் மடக்கப்பட்டு தாக்கப்பட்டார். 6 மோட்டார் சைக்கிளில் விரட்டி வந்த 10 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை துணிகரமாக நடத்தியது.
 
ஓட முடியாத இளைஞனை மடக்கித் தாக்கியதில் அந்த இளைஞன் பிரதான வீதியிலேயே விழுந்து கத்தினார். அவரது அலறலைப் பொருட்படுத்தாத கும்பல் கொண்டு வந்த பொல்லுகளால் கடுமையாகத் தாக்கியதுடன், கைக் கோடாலியால் அவரது தோள்மூட்டுப் பகுதியில் வெட்டியது. 
 
தமது ஆத்திரம் தீர தாக்கிய கும்பல் இரண்டு நிமிடங்களிலேயே அங்கிருந்து மோட்டார் சைக்கிளிலிருந்து பறந்தது. வீதியில் இரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு யாரும் முன்வரவில்லை. வீதியால் போய் வரும் வாகனங்களை மறித்த போதும் எந்தவொரு வாகனச் சாரதியும் உதவ முன்வரவில்லை. 
 
இரத்தம் வீதியில் தொடர்ந்து போய்க் கொண்டிருந்ததால், இறுதியில் அங்கிருந்த சில இளைஞர்கள், தாக்கப்பட்ட ஓட்டோவிலேயே ஏற்றி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இந்தச் சம்பவத்தில் திலீப் என்ற கொக்குவிலைச் சேர்ந்த இளைஞனே படுகாயமடைந்துள்ளார். செந்தீசன் (வயது-24) என்ற இளைஞனே ஓடித் தப்பியவராவார். அவரும் நேற்று இரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்க்கப்பட்டுள்ளார்.
 
இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கையில், இப்படியும் ஒருவரைக் கத்த கத்த வெட்டுவார்களா ? பார்க்கவே பயமாக இருந்ததாகத் தெரிவித்ததுடன், தாம் நேரில் பார்த்துக் கொண்டிருந்த போது தம்மீதும் வெட்ட கோடாலியைக் கொண்டு வர பயந்து ஓடிச் சென்று ஒளித்தாகவும் தெரிவித்தனர். 
 
சம்பவம் இடம்பெற்று அரை மணி நேரம் கழித்து அந்த இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். வாகனத் தகராறு காரணமான பகைமையினாலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதும், காயமடைந்தவர்களுக்கும், வெட்டியவர்களுக்கும் இடையிலான பழைய பகைமையினால் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
அதேவேளை, வாள் வெட்டில் படுகாயமடைந்த செந்தீசன் ஆவா குழுவை சேர்ந்தவர்களே தம் மீது தாக்குதலை மேற்கொண்டதாக பொலிசாரிடம் வாய் மூல முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்ற கொலை கொள்ளை வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழு என்னும் குழுவை சேர்ந்த 13 பேரினை கடந்த 2ம் மாதம் பொலிசார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி இருந்தனர் அவர்கள் அனைவரும் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 
அவ்வாறு பிணையில் விடுதலையாகியுள்ள அக் குழுவை சேர்ந்தவர்களே தம் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் அக்குழுவை சேர்ந்தவர்களும் தற்போது பிணையில் விடுதலையான இருவரின் பெயரையும் செந்தீசன் தம் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் என பொலிஸாரிடம் வாய் மூல முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

ad

ad