புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014





நாட்டின் விடுதலைக்காக நடத்திய சுதந்திரப் போராட்டத்தோடு ஒப்பிடும் அளவுக்கு,  முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அரசியல் கட்சிகளை ஒதுக்கிவிட்டு  தங்களின் வாழ்வாதாரத்துக்காக மக்களே முன்னின்று எழுச்சியுடன் போராடியது சமீபத்திய வரலாற்றுப் பதிவு.    

‘முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது. அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை தடுக்கும் விதமாக கேரள அரசு இயற்றிய சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இப்போது வழங்கியிருக்கும் தீர்ப்பினை, மக்களின் ஒருமித்த உணர்வுக்கு கிடைத்த வெற்றியாகவே தமிழகம் கொண்டாடு கிறது.  இவ்வேளையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் கடந்து வந்த கரடு முரடான பாதையில் சற்று பின்னோக்கி பயணிப்போம். 

மக்களின் சாவில்உயிர்த்தெழுந்த அணை!

அன்றைய மதுரை மாவட்டத்தில் உள்ளடக்கி இருந்த மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை காலத்தில் வைகை ஆற்றுப் படுகையில் வெள்ளப் பெருக் கெடுத்து கரை புரண்டு ஓடினாலும் கூட, தண்ணீரை தேக்கி வைக்க முடியாததால் விவ சாயம் நலிவடைந்தது. பசி, பட்டினியால் வாடி யும், நோய்வாய்ப்பட்டும் மக்கள் இறந்தார்கள். 1810 முதல் 1813 வரை இப்படி இறந்த மக்களின் எண்ணிக்கை 86,135 என புள்ளி விபரம் கூறுகிறது. இதனால், பலரும் சொந்த ஊர்களை விட்டு கிளம்பி வயிற்றுப் பிழைப்புக்காக வேறு பகுதி களில் குடியேறினார்கள். இதற்கு ஒரு தீர்வு காண முயற்சித்தது அப்போது இருந்த ஆங்கிலேயர் ஆட்சி. கேரள எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பொறியாளர் பென்னிகுக் மூலம் 1895-ல் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தது.  அணை நீரை பயன்படுத்துவது குறித்து  999 வருடங்களுக்கு ஒப்பந்தமும் போட்டது. இதனால், தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பய னடைகிறார்கள். இப்பகுதியின் குடிநீர் ஆதாரமாக வும் முல்லைப் பெரியாறு விளங்குவதால், அர்ப்பணிப்பு உணர்வுடன் அணையைக் கட்டிய பென்னிகுக்கை இங்குள்ள மக்கள் தெய்வத்துக்கு இணையாக வணங்கி வருகிறார்கள். தங்களின் பிள்ளைகளுக்கும், வியாபார நிறுவனங்களுக்கும்  பென்னிகுக்கின் பெயரை வைப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். 

கிளப்பிய பீதியும் கிடைத்த நீதியும்.. 

1979-ல் குஜராத்தில் பழைய அணை ஒன்று உடைந்தது. உடனே, கேரள அரசு ‘முல்லைப் பெரியா றும் பழைய அணைதான். இதுவும் உடைந்து விடும்..’ என்று பீதி கிளப்பியது. இதற்கு மலையாள மனோரமா என்ற பத்திரிகை துணை போனது. அணையிலிருந்து கசியும் நீரை சுட்டிக்காட்டி அணை உடையப் போகிறது..’என்று செய்தி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்துதான், தமிழக அரசுடன் கேரள அரசு பேச்சு வார்த்தை நடத்தியது.  அணை யின் நீர் மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்துக் கொண்டு, அணையின் பராமரிப்பு பணி கள் முடிந்தவுடன் மீண்டும் 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று பேசி முடிக்கப்பட்டது. 2000-ல் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து, மீண்டும் 152 அடியாக நீர் மட்டத்தை உயர்த்த தமிழகம் முன் வந்த போது, ’"அதெல்லாம் கூடாது.. 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது..' என்று முட்டுக்கட்டை போட்டது கேரள அரசு. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது தமிழக அரசு. "முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள லாம்..' என்று 27-2-2006-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும், அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, உடனடியாக 142 அடிக்கு ஷட்டரை இறக்கி தண்ணீரை தேக்கி வைக்க ஆர்வம் காட்டவில்லை. 


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் தமிழக அரசு கிடப்பில் போட்டு விட்டதைக் கண்ட கேரள அரசு, சட்டமன்றத்தில் அணைகள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்தது. ""முல்லைப் பெரியாறு அணையை உடைக்கவோ, பாதுகாக்கவோ எங்களுக் குத்தான் உரிமை இருக்கிறது. பழைய அணையிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் புதிய அணை கட்டப் போகிறோம்.  இடத்தையும் தேர்வு செய்து விட்டோம்''’ என்று நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த பிரேமசந்திரனை வைத்து 2007-ல் குமுளியில் அடிக்கல் நாட்டியது. அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்தார் கலைஞர். கேரள அரசின் சட்டத்தை ரத்து செய்யவும், புதிய அணை கட்டக் கூடாது என்று வலியுறுத்தியும்  தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டது. ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆனந்த் தலைமையில் ஒரு குழுவை நியமித்து அணையை ஆய்வு செய்வதற்கு உத்தர விட்டது உச்ச நீதிமன்றம். அந்தக் குழுவும் 2010 முதல் 2013 வரை பல ஆய்வுகளை மேற்கொண்டு, கடந்த 5 மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில்தான், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் தலைமை நீதிபதி லோதா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய குழு  கேரள அரசுக்கு உறைக்கும் விதத்தில் இப்போது தீர்ப்பு சொல்லியிருக்கிறது. 

""அடிபட்டிருக்கோம்.. மிதிபட்டிருக்கோம்..
உசுரயும் விட்டிருக்கோம்..'' -விவசாயிகள்!

ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கம்பம் அப்பாஸ் தீர்ப்பு குறித்து நம்மிடம் பேசினார்- ""அணையின் பராமரிப்பு பணிகளை மத்திய அரசு மற்றும் கேரள, தமிழக அரசு பொறியாளர்கள் இணைந்து செய்ய வேண்டும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. கேரள பொறியாளர்கள் வழக்கம் போல ஏதாவது குறை கூறிக் கொண்டு இருப்பார்கள். இதனால் இடையூறு வரும்.  அணை நமக்குச் சொந்தமானது. தமிழக அரசு பணியாளர்கள்தான் பராமரிப்பு பணியை செய்ய வேண்டும். விவசாய சங்கம் சார்பில் நாங்கள் வழக்கு தொடர இருக்கிறோம்'' என்றார். 

முல்லைப் பெரியாறு அணையின் உரிமை பாதுகாப்புக் குழு தலைவர் முத்தையா

""2006-ல தீர்ப்பு வந்தப்பவே இந்தம்மா ஏன் 142 அடி தண்ணீரை தேக்கி வைக்கல? அந்த மெத்தனம் தானே கேரள அரசு சட்டம் போடறதுக்கு ஒரு வாய்ப்பா இருந்துச்சு? இப்பவும் கேரள அரசு ஏதாச்சும் ஒரு வகையில் முட்டுக்கட்டை போடும். 142 அடி தண்ணிய தேக்கினால் குமுளியே நீரில் மூழ்கிவிடும்னு புரளியை கிளப்பும்.. அதுனால.. உடனே தீர்ப்பை செயல்படுத்தணும் இந்த கவர்மென்ட்.. முதல்வரோட அறிக்கையிலும் கூட எப்போது தண்ணீரை தேக்கப் போறோம்னு தெளிவா சொல்லல.. பழைய புராணத்தைத்தான் பாடியிருக்காங்க.. கடந்த ரெண்டு வருஷமா ஒட்டு மொத்த மக்களும் போராடிக்கிட்டிருக்கோம்.. அடிபட்டிருக்கோம்.. மிதிபட்டிருக்கோம்.. மூணு பேரு தீக்குளிச்சு உயிரை விட்டிருக்காங்க.. அரசாங்கம் உடனடியா 142 அடி தேக்கலைன்னா  எல்லா மக்களும் டேமுக்கு போயி ஷட்டரை இறக்கி 142 அடி தண்ணீரை தேக்குவோம்..'' என்றார் அதிரடியாக.   

கம்பம் (தி.மு.க.) எம்.எல்.ஏ. ராமகிருஷ் ணனும் “""முல்லைப் பெரியாறு அணை விஷயத் துல எங்களுக்குள்ள  கட்சி பாகுபாடு கிடையாது.. தி.மு.க.. அ.தி.மு.க.. ம.தி.மு.க.. காங்கிரஸ்ன்னு எல்லா கட்சிக்காரங்களுமே தீர்ப்பை வரவேற்று இனிப்பு கொடுத்துக்கிட்டிருக்கோம்.. கலைஞர் போட்ட வழக்குலதான் இப்ப சுப்ரீம் கோர்ட் இப்படி ஒரு தீர்ப்பை சொல்லிருக்கு.. இதையும் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பார்க்காம.. உடனே அரசு நடைமுறைப்படுத்தணும்.. நம்ம கவர்மென்ட்கிட்ட சம்பளம் வாங்கிக்கிட்டு கேரளாவுக்கு விசுவாசமா இருக்கிற போலீஸோட பாதுகாப்புலதான் அணை இருக்கு.. அதனால.. ஷட்டரை இறக்குற விஷயத்துக்கு மத்திய போலீஸ்தான் வரணும்.. அதுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிடணும்'' என்றார். 

கேரள மாநில அ.தி.மு.க. துணைச் செயலர் சுப்புராயல் “""கேரளாவுல இடுக்கி மாவட்டத்துல தமிழர்கள் ஒரு லட்சம் பேருக்கு மேல இருக் கோம்.. இந்த தீர்ப்பை தீபாவளி மாதிரி வெளிப் படையா கொண்டாட முடியல.. மனசுக்குள்ள மகிழ்ச்சியா இருக்கோம்.. மலையாளிகள் அப்படியில்ல.. தீர்ப்பு வந்ததுல இருந்து நொந்து போயி.. டென்ஷனா இருக்காங்க.. மலையாளிங்க ளோட இந்தக் கொதிப்பாலதான்.. முல்லைப் பெரியாறு போராட்டக் குழுவான சமரஸ் சம்தி (கஉஎ) ஆதரவோட கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து தீர்ப்புக்கு எதிரா  எட்டாம் தேதி பந்த் நடத்தியிருக்கு.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை உடனே அம்மா அமுல் படுத்துவாருங்கிற நம்பிக்கையோடு இருக்கிறோம்..'' என்றார். 

நல்ல தீர்ப்புக்கு வித்திட்டவர்கள்! 

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்று தமிழகமும் கேரளமும் முட்டி மோதிக் கொண்டிருக்க..  உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்க முன் வந்த சுப்ரீம் கோர்ட், "இந்தக் குழுவில் தமிழக அரசின் சார்பில் யாரை இடம் பெறச் செய்யலாம்?' என்று தமிழக அரசிடம் கேட்டது.  அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் ‘உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன்’ பெயரைச் சொல்கிறார்.  உடனே,  உச்ச நீதிமன்ற முன் னாள் தலைமை நீதிபதி  ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் குழு ஒன்றை அமைத்து நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமண னை தமிழக அரசின் பிரதிநிதியாகச் சேர்க்கிறது. அணையை ஆய்வு செய்வதற்கு ‘டெக்னிகல் பெர்சன்ஸ்’ இருவர் இருந்தால் நல்லது என சொல் கிறார் ஏ.ஆர்.லட்சுமணன்.  பிறகுதான் தொழில் நுட்ப நிபுணர்களான சி.டி.தத்தா, டி.கே.மேத்தா ஆகிய இருவரும் அந்தக் குழுவில் இடம் பெறுகின்றனர். 11 ஆய்வறிக்கைகளை இவர்கள் தருகின்றனர். இந்த அறிக்கைகள்தான் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இப்படி ஒரு தீர்ப்பினை அளித்ததற்கு காரணமாக அமைந்திருக்கிறது. 

ஆய்வறிக்கைகள் கேரள அரசுக்கு பாதகமாக இருப்பதை அறிந்து கொண்ட ஒரு  ‘நியாயவான்’  “நீங்கள் ஏன் கேரளாவுக்கு சாதகமாக நடந்து கொள்ளக் கூடாது? என்றெல்லாம் குடைச்சல் கொடுக்கின்ற வேலைகளைப் பார்த்திருக்கிறார். இந்தத் தருணத்தில்தான்,  ஓய்வு பெற்ற நிலையிலும் நீதியரசர் ஏ.எஸ்.ஆனந்தின் வயதுச் சான்றிதழ் விவகாரத்தை அப்போது ஊதிப் பெரிதாக்குகின்றனர். ஆனாலும், ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழு தந்த அறிக்கை உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.  கேரள அரசு இப்போது இடிந்து போய் இருக்கிறது. 

""பென்னிகுக்கின் தியாகத்துல உருவான அணை இது.. தமிழர்களோட நல்வாழ்வுக்கு எப்போதும் துணை நிற்கும்.. அதனாலதான்.. நமக்கு நீதி கிடைச்சிருக்கு..'' என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறார்கள் முல்லைப் பெரியாறு அணை நீரால் வாழ்க்கையை நகர்த்தும் ஒவ்வொரு விவசாய குடும்பத்தினரும். 

ad

ad