புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014

சிறுபான்மையினரால் நாட்டை ஆட்சி செய்ய முடியாதா? சிங்கள மக்கள் தமிழருக்கு வாக்களிக்க மாட்டார்களா? 
"சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரால் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்ற நிலை மாற்றப்பட வேண்டும். அப்போது தான் எமக்குச் சம உரிமை கிடைக்கும்.

 
சிங்கள மக்களின் வாக்கு சிங்களவருக்குத்தான் என்ற சிந்தனை உண்மையா? சிங்சரித்திரத்தை களவர்களுக்கு தமிழர்கள் வாக்களிக்கும்போது, தமிழருக்கு சிங்கள மக்கள் வாக்களிக்க மாட்டார்களா? நல்லெண்ணம் மிக்க பெரும்பான்மையினத்தவர்களின் மனதில் இந்த எண்ணத்தை விதைத்து மாற்றமொன்றைக் காண அவர்களைத் தட்டியயழுப்ப வேண்டும். 
 
அப்போதுதான் எம்மால் விடிவெள்ளியைக் காண முடியும்.''
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் நேற்றுத் தெரிவித்தார்.
 
சிறுபான்மையினர் தமது வாக்கினை சரியாக பயன்படுத்தாத தால்தான் பேரினவாதிகளுக்கு அடி பணிந்து வாழவேண்டிய நிலையிலுள்ளோம். இதை மாற்ற வேண்டும். அதற்காக ஜனநாயகத்தில் பல மாற்று வழிகள் இருக்கின்றன. கவனமாக சிந்தித்து அவற்றைக் கையாள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
 
முதுபெரும் தொழிற்சங்கத் தலைவர் மறைந்த ஏ.அஸீஸின் 24 ஆவது நினைவுதின நிகழ்வு நேற்றுக் கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு,
 
பெரும்பான்மை மக்களின் வாக்குகளை
பெறவேண்டும் என்பதன் அர்த்தம் என்ன?
ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்துவது தொடர்பான கருத்து தொடர்பில் நான் அண்மையில் குறிப்பிட்டிருந்தேன். 
 
இதற்கு பல கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரைத்தான் பொது வேட்பாளராக நிறுத்த முடியும் என எதிர்க்கட்சிகள் கூறியிருந்தன. பெரும்பான்மை மக்களின் வாக்குளைப் பெற வேண்டும் என்பதன் அர்த்தம் என்ன? சிங்கள, பெளத்தர் அல்லாத ஒருவர் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்கிறதா?
 
கடந்த காலங்களாக எமது நாட்டில் இவ்வாறானதொரு சரித்திரம் இருக்குமாயின் அதை மாற்றியமைக்க வேண்டும். 75 சதவீத மக்கள் இருக்கும்போது நாம் என்ன செய்வது என்று பலர் யோசிக்கின்றனர். எதிர்த்து என்ன செய்ய முடியும்? 30 வருடம் எதிர்த்தோம். முடிவு என்ன? இதுபற்றி இன்று மிக ஆழமாக சிந்திக்க வேண்டும். நாட்டில் பெரும்பான்மையானவர்களை எதிர்க்கவும் தேவையில்லை, ஆதரிக்கவும் தேவையில்லை. இதற்கு ஜனநாயகத்தில் பல மாற்று வழிகள் இருக்கின்றன. அவற்றைக் கவனமாக கையாளவேண்டும்.
 
எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்காக மட்டும் சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து குரல் கொடுக்கும். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் எதைச் செய்வோம் எனக் கூறாது. ஆட்சிக்குவர சிறுபான்மையினரின் வாக்குகள் தேவை. ஆனால் பெரும்பான்மையினரின் வாக்குகளைப் பெரும் ஒருவரே பொதுவேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன.
 
சிங்கள மக்கள் தமிழருக்கு
வாக்களிக்க மாட்டார்களா?
 
எமது நாட்டின் கடந்தகால வரலாற்றை எடுத்துநோக்கினால், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, எதிர்க்கட்சி வேட்பாளராக சிறிமாவோ பண்டாரநாயக்க இருந்தார். இந்தத் தேர்தலில் ஜெயவர்தன வெற்றிபெற்றார். இதில் வடக்கில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் யஹக்டர் கொப்பேகடுவ போட்டியிட்டு வெற்றிபெற்றார். தமிழர் ஒருவர் போட்டியிட்டபோதும், அவர் 3ஆம், 4ஆம் இடங்களுக்கே தெரிவுசெய்யப்பட்டார். 
 
தமது வாக்கினை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் வடக்கு  மக்கள் தெளிவாக இருந்தனர். வடக்கு மக்கள் யஹக்டர் கொப்பேகடுவைக்கும், சரத் பொன்சேகாவுக்கும் வாக்களிக்கும்போது, சிங்கள மக்கள் தமிழ், முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்க மாட்டார்களா? சிங்கள மக்கள் சிங்களவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற சிந்தனை உண்மையா? இதற்கு என்ன சான்று?
 
 
சிறுபான்மையினரால் நாட்டை ஆட்சி
செய்ய முடியாது என்பதை மாற்றுவோம்
 
சிறுபான்மையினத்தவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருப்பதால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்ற நிலை மாறவேண்டும். அப்போதுதான் சம உரிமை கிடைக்கும். 
 
இல்லாவிடால் ஆட்சியாளர்கள் இருவருக்கும் பந்தம் பிடித்துக்கொண்டு அடிவருடிகளாக வாழவேண்டிய நிலையே தொடரும். 75 வீதம் தீர்மானிக்கும் சக்தி என்பதை மாற்ற வேண்டும். அரசியலில் உள்ள சமச்சீரற்ற தன்மை மாற்றப்பட்டு அதிகாரப்பகிர்வு வேண்டும். இதற்கு பொது வேட்பாளர் என்ற சிந்தனை மிகவும் சிறந்தது.
 
வரும் பொதுத் தேர்தலில் சிங்கள, பெளத்தர் அல்லாத ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தவேண்டும். அவ்வாறு நிறுத்த எவருக்கு துணிவு இருக்கிறது? அமெரிக்காவை ஒபாமாவும், இந்தியாவில் 2 சதவீதமுள்ள சீக்கியரும் ஆட்சிசெய்யும்போது, இலங்கையில் அதை பரிசோதித்துப் பார்க்காமலேயே முடியாது என்று கூற முடியாது.
 
பொது வேட்பாளர்கள் பலர் சிறுபான்மை சமூகத்திடம் 25 வீத வாக்கு இருக்கின்றது. பெரும்பான்மை மக்களின் மத்தியில் நல்லெண்ணம் மிக்க பலர் இருக்கின்றனர். அவர்களின் வாக்குளைப் பெற்றால் 50 வீதத்தைப் பெறமுடியும் என்பது எனது சிந்தனை. 
 
75 வீத பெரும்பான்மையினரில்  பேரினவாதத்தை எதிர்க்கும் அரைவாசிபேர் இல்லையா? அப்படியாயின் ஜனாதிபதி பொது வேட்பாளரில் 2 ஆவது, 3 ஆவது தெரிவுக்கு இடமுண்டு. அந்த சூழ்நிலையை உருவாக முடியாதா?
வரும் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையின மக்களது வாக்குகளால் ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற நிலை இருக்கக் கூடாது. அப்போதுதான் சிங்கள மக்கள் அல்லாதவர்களின் வாக்குப் பெறுமதி தெரியவரும்.
 
எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் தொடர்ச்சியாக ஒரே பாதையில் நாம் பயணிக்க முடியாது. சில மாற்றுவழிகள் குறித்து சிந்திகக் வேண்டும். ஏன் அவற்றைச் சிந்திக்கக் கூடாது? சோதித்துப் பார்க்கக் கூடாது? மாற்றுவழிகளைச் சிந்தித்து அவற்றை சிங்கள, பெளத்த மக்களிடம் கொண்டு சென்று நேரடியாக பேசவேண்டும். அப்போதுதான் நாம் விடிவெள்ளியைக் காண முடியும். என்றார்.

ad

ad